சனி, 6 ஜனவரி, 2018

புத்தக கண்காட்சி : 704 அரங்குகள் அமைப்பு!

புத்தக கண்காட்சி : 704 அரங்குகள் அமைப்பு!மின்னம்பலம் : சென்னையில் 41ஆவது புத்தக கண்காட்சி ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) தலைவர் எஸ்.வைரவன் நேற்று, “சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்தில் 41ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வருகிற 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறவுள்ளது. அதில் தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டி மீடியா அரங்குகள் 22, பொது அரங்குகள் 24 என மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 236 தமிழ் பதிப்பாளர்கள், 102 ஆங்கில பதிப்பாளர்கள், 14 மல்டி மீடியா பதிப்பாளர்கள், 24 பொது பதிப்பாளர்கள் என மொத்தம் 376 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புத்தக கண்காட்சி தொடக்க விழா பபாசியின் புரவலரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமையில் ஜனவரி 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவின் சிறப்பு விருந்தினராகத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு புத்தக கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். சிறந்த பதிப்பாளர், விற்பனையாளர், எழுத்தாளர்களுக்கு விழாவில் விருது வழங்கிக் கவுரவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
புத்தக கண்காட்சி மாணவர்களை மையப்படுத்தி நடக்கவுள்ளதால், 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச அனுமதி நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இலவசம். 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கார்கள் நிறுத்துவதற்கு 30 ரூபாயும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். கண்காட்சிக்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இலவச ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை, ஆதார் கார்டு சேவைப் போன்றவற்றிற்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்த கண்காட்சி வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.
புத்தக கண்காட்சியை பிரபலப்படுத்தும் வகையில் ஜனவரி 8ஆம் தேதி 3,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்கும்‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி நடைபெறும். பெண்களைப் போற்றும் விதமாக ஜனவரி 12ஆம் தேதி பெண்கள் தினமாக புத்தக கண்காட்சியில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
2017ஆம் ஆண்டு புத்தக கண்காட்சிக்காக சுமார் 70‌0 அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில், 350 தமிழ் பதிப்பகங்களும், 153 ஆங்கில பதிப்பகங்களும் பங்கேற்றன. அதுதவிர முதன்முறையாக வாசகர்களின் வசதிக்காக கூப்பன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 10 லட்சம் பேர் வந்தனர். இந்த ஆண்டு 15 லட்சம் பேர் வருவார்கள். அதன் மூலம் 13 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: