திங்கள், 1 ஜனவரி, 2018

ஆர் கே நகர் தோல்விக்கு காரணம் அலட்சியமா ? ஏன்? எப்படி ? என்னதான் நடக்கிறது?

நக்கீரன் :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஏற்பட்டிருக்கும் தோல்வி, தி.மு.க.வுக்குள் ஓர் அதிர்வுச் சூறாவளியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, இப்போது மு.க.அழகிரி எழுப்பியிருக்கும் விமர்சனங்களும், அங்கே பரபரப்பாய்ச் சுழன்றடிக்கிறது. ""2016-ல் ஜெ.வை எதிர்த்து பெற்ற வாக்குகளில் பாதியைக் கூட தி.மு.க. இப்போது பெறவில்லை. அங்கே தி.மு.க. தேர்தல் பணியையே செய்யவில்லை. எந்தத் திட்டமிடலும் இல்லாமல், தேர்தலை எதிர்கொண்டதால்தான் டெபாசிட்டை தி.மு.க. இழக்க நேர்ந்தது. இதற்கு தி.மு.க. தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும். ஸ்டாலினின் தலைமை இருக்கும்வரை தி.மு.க. வெற்றி பெறாது''’என தன் கோபத்தைக் கொட்டியிருக்கிறார். 2016-ல் ஆட்சியைப் பிடிக்க முடியாமல், தி.மு.க. தோற்றபோதும், அழகிரி இதேபோல ஸ்டாலின் மீதுதான் குற்றச்சாட்டைச் சொல்லியிருந்தார். அழகிரியின் இந்த விமர்சனம் இருவிதமாகத் தி.மு.க.விற்குள் எதிரொலிக்கிறது.


""அழகிரி தி.மு.க.விலேயே இல்லை. அவர் கலைஞரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அப்படிப்பட்டவருக்கு தி.மு.க.வை விமர்சிக்கும் தகுதி எங்கிருந்து வந்தது?''’என ஒருதரப்பும்,
""நீக்கப்பட்ட அழகிரிக்கு தி.மு.க.வை விமர்சிக்கும் தகுதி வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. யார் நம்மீது விமர்சனம் வைத்தாலும், அவர்களால் வைக்கப்படும் விமர்சனத்தைப் பரிசீலனை செய்து, நம் தரப்பின் குறைகளைச் சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதுதான் கலைஞர் வழியிலான வெற்றிக்கு வழி வகுக்கும்''’என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது.

 ""ஆர்.கே.நகரைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.வின் வாக்குபலம் அதிகமுள்ள, அசுர செல்வாக்கு பெற்ற தொகுதி. அங்கே தி.மு.க.வுக்கு போதுமான பலம் இல்லை. இந்த உண்மை நிலையை உணராமல், அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கிறது. அதனால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க. மிதப்பாகவே செயல்பட்டது. நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் பார்த்த அளவுக்குக் கூட அனுபவமிக்க கட்சி வேலை செய்யவில்லை. அதனால்தான் தி.மு.க. படு தோல்வியடைந்தது என்கிறார்கள் உண்மை நிலவரம் அறிந்தவர்கள். டெபாசிட்டே போன அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க., தனது இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய, கட்சியின் கொறடா சக்கரபாணி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், அதன் இணைச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை அமைத்திருக்கிறது.

இந்த நிலையில், தேர்தல் வேலைபார்த்த கிரிராஜனையே விசாரணைக் குழுவில் போட்டால் முழு உண்மை எப்படி வெளிவரும்? என்ற கேள்விகளும் இப்போது எழுப்பப்படுகின்றன. எனினும் இந்த விசாரணைக் குழுவின் முதல்கட்ட விசாரணையில், தினகரன் தரப்பும், ஆளும்கட்சித் தரப்பும் பணத்தை வாரி இறைத்த நிலையிலும், பணம் கொடுக்கக்கூடாது என்று ஸ்டாலின் உறுதியாக இருந்ததால், திமு.க. தரப்பு ரொம்பவே டல்லடித்தது என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

இதனால் தினகரன் தரப்பு 3, 4 ரவுண்டுகள் வாக்கு சேகரிப்பை முடித்த நிலையிலும் தி.மு.க. ஒரு ரவுண்டையே முழுதாக முடிக்காத நிலையில் இருந்ததாம். தேர்தல் பொறுப்பில் இருந்த தி.மு.க. மாஜி மந்திரிகளும் மா.செ.க்களும் என்ன வேலை செய்தார்கள் என்று கட்சியினரிடம் நாம் விசாரித்தபோது... ""தினமும் காலை 11 மணிக்கு வெள்ளையும் சொள்ளையுமாக வருவார்கள். கட்சி அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு, கலைஞர் டி.வி., முரசொலி போட்டோகிராஃபரெல்லாம் வந்தாச்சான்னு விசாரிப்பாங்க. "கவரேஜ்' முடிந்ததும், கொஞ்ச நேரம் அரட்டை அடித்துவிட்டு, லஞ்சுக்கு கிளம்பிவிடுவார்கள்.

அப்புறம் வெயில்தாழ மாலையில் வருவார்கள். நாலு வீட்டு வாசலுக்குப் போய் நின்று, கும்பிடு போட்டுட்டுப் போய்விடுவார்கள். இதையெல்லாம் போட்டோ எடுத்து, தங்கள் முகநூலில் ஜம்பமாகப் பதிவிடுவார்கள். அதேபோல், ஸ்டாலின் தொகுதிக்கு வரும்போது, ஐநூறு பேர், ஆயிரம் பேரைத் திரட்டி வைத்துக்கொண்டு, அவரை வரவேற்று போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அதுவும் பேஸ்புக்கில் பதிவாகும். இதுதவிர வேற எந்த வேலையும் உருப்படியா நடக்கவில்லை''’என்றனர். மேலும், ""வேலை பார்க்கும் ஆட்களுக்கு செலவு செய்யக்கூட ஆள் இல்லை. வேட்பாளரும் வெயிட்டானவரா இல்லை. வேட்பாளருக்காக உதவவும் யாரும் முன்வரவில்லை.

இதனால்தான் தி.மு.க.வுக்கு விழவேண்டிய ஓட்டுகள் கூட தினகரனின் குக்கருக்கே விழுந்தது. தி.மு.க. நிர்வாகிகள் குடும்பத்தினரே, "இங்க ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயிச்சி என்ன ஆயிடப்போகுது? தினகரன் ஜெயிச்சாலாவது இந்த ஆட்சிக்குத் தண்ணி காட்டுவாரு'ன்னு சொல்ற அளவுக்குத்தான் களநிலவரம் இருந்தது''’என்று சொல்கிறார்கள். 2014-ல் இருந்து தி.மு.க.வின் தேர்தல் பணிகளை ஸ்டாலின்தான் முன்னெடுக்கிறார். அழகிரி சொல்வது போல், ஸ்டாலின் வகுத்த வியூகங்கள் இதுவரை ஜெயிக்கவில்லை.

 "தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் எதிர்கொண்ட முதல் இடைத் தேர்தலிலேயே டெபாசிட் போயிருக்கிறது. ஸ்டாலின் தன் இமேஜை நிலை நிறுத்திக்கொள்ள இப்போது அவருக்குத் தேவை ஒரு வெற்றி. அதற்கு கட்சியில் இருக்கும் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவருக்குத் தேவை. அதற்கு அனைவரையும் அவர் அனுசரித்து, புதிய வியூகங்களை வகுக்க வேண்டும்'’ என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். -இளையர்



கருத்துகள் இல்லை: