போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நோட்டீஸ் கொடுக்காமல் நடைபெறும் அந்த போராட்டத்தை தடுக்க வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று பிற்பகல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர்.
“ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் ஆகிய போராட்டங்களின்போதும் இதேபோன்று பல அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கியுள்ளோம். இதுதொடர்பாக தமிழக அரசு வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். உடனடியாக பணிக்கு திரும்பவில்லை எனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக