வியாழன், 4 ஜனவரி, 2018

இளம் விஞ்ஞானி விருதை வென்ற பழங்குடி மாணவன்!

இளம் விஞ்ஞானி விருதை வென்ற பழங்குடி மாணவன்!
மின்னம்பலம் :தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோட்டைச் சேர்ந்த பழங்குடி மாணவர் ‘மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து, ‘இளம் விஞ்ஞானி’ விருதை வென்றுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 25ஆவது தேசிய அறிவியல் மாநாடு நடந்தது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்த இந்த மாநாடு கடந்த டிசம்பர் 27 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 6 ஆசிய நாடுகளிலிருந்தும், இந்தியாவில் 30 மாநிலங்களிலிருந்தும் மாணவர்களிடம் இருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்க்கப்பட்டன.
தமிழகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், இரண்டு கட்டுரைகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. அதில், ஒன்றுதான் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி மாணவர்களின் கட்டுரை. “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அவருடைய கட்டுரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்த குழுவின் தலைவரான 7ஆம் வகுப்பு மாணவன் எம். சின்னக்கண்ணன், தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்றார். அவரது கட்டுரையைப் பாராட்டி அறிவியல் அறிஞர்கள், இளம் விஞ்ஞானி பட்டத்தையும், பரிசையும் கொடுத்து பெருமைப்படுத்தினர்.
எம். சின்னக்கண்ணனுக்கு, இன்று ஈரோடு கலைக்கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

கருத்துகள் இல்லை: