செவ்வாய், 2 ஜனவரி, 2018

எவிடென்ஸ் கதிர் : சாதி ஒழிப்பு, பெண் அடிமை, வறுமை, வர்க்க ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு.. ரஜினி பேச வேண்டும்

tamilthehindu :
அம்பேத்கர்,மகாத்மா காந்தி, பெரியார் போன்ற அரசியல் ஆளுமைகளின் கொள்கைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்.குறைந்த பட்சம் 25 ஆண்டுகாலமாக தமிழகத்தில் நடந்த முக்கிய பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு, முறையான தீர்வை முன் வைக்க வேண்டும்.ஏனென்றால் அரசியலில் எல்லாவற்றையும் ஆண்டவன் மீது போட்டு தப்பிக்க முடியாது 
ரஜினியிடம் தமிழக மக்கள் எதிரபார்ப்பது ஆன்மீக அரசியலை அல்ல, சமூக நீதி அரசியலைத்தான் என மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எவிடென்ஸ் கதிர், 'தி இந்து'விடம் கூறியதாவது:
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யாரும் இல்லை. தேசிய அளவில் அழுத்தம் செலுத்தக்கூடிய அளவுக்கு பெரிய ஆளுமை இல்லை. தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய வெற்றிடம் நிலவுகிறது. இந்த இடத்தை நிரப்பும் வசீகரம் ரஜினியிடம் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் நீடித்து நிலைத்து நிற்பது எளிது காரியம் அல்ல. அரசியல் என்பது சினிமா அல்ல. அதே போல அரசியல் என்பது ஆன்மிகமும் அல்ல.

அரசியல் என்பது தன்னலம் இல்லாத இடைவிடாத மக்கள் பணி.நிறைய பொறுப்பும், ஆற்றலும் தேவை. இதனை ஆன்மீகம் கொண்டு நிரப்பிவிட முடியாது. சமூக நீதியும், நல்ல நிர்வாகமும், சுரண்டல் இல்லாத வளர்ச்சியும் மிகவும் முக்கியம். எத்தகைய நெருக்கடிகளையும் தாக்குதல்களையும் உடைக்கும் ஆற்றல் அவசியம். மக்களுக்கு அறமும், நீதியும் வழங்க வேண்டும் என்கிற தார்மீக சிந்தனை வேண்டும்.

சாதி, மத பேதமற்ற அரசியலை உருவாக்குவேன் என ரஜினி சொல்கிறார். அதே வேளையில் ஆன்மிக அரசியல் என்கிறார். ஆன்மீகம் அறநெறி பார்வை என்றாலும் தற்போது மதவாதமாக மாறி இருக்கிறது. அதிலும் ரஜினி ஆன்மீகம் என்பதை இந்து மதமாகவே கருதுகிறார். ஆனால் தமிழகத்தில் எல்லா மதங்களை சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள். ரஜினிக்கு கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் அதிகளவில் ரசிகர்களாக இருக்கிறார்கள். எனவே இவரது ஆன்மீக அரசியல் சிறுபான்மையின மக்களை இடைஞ்சல் செய்ய கூடாது.
அதே போல தமிழகத்தில் ஊழலை விட பெரிய பிரச்சினை சாதி பிரச்சினை. அரசியலை சாதி தான் தீர்மானிக்கிறது. சாதியின் பெயரால் தான் ஆட்சி, கட்சி, நிர்வாகிகள், பொறுப்புகள், பதவிகள் என எல்லாமே வழங்கப்படுகின்றன. அதனை ரஜினி நன்றாக புரிந்துக்கொண்டு சாதிக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சாதி, மத கட்சிகளுடன் சேரக்கூடாது.
ஊழல் எதிர்ப்பு என்கிற பெரும் அரசியல் ஈர்ப்பு வசனத்தை பேசும் அதே வேளையில் ரஜினி தமிழ் சமூகம் சார்ந்து சிந்திக்க வேண்டும். நிர்வாகத்தில் எப்படி ஊழலை ஒழிக்க வேண்டுமோ? அதே சமூகத்தில் சாதி ஒழிப்பு, பெண் அடிமை, வறுமை, வர்க்க ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு விவகாரங்களை ரஜினி விரிவாக பேச வேண்டும். ஊழல் கறைப்படாத நேர்மையாக இருப்பவர்களிடம் கூட சாதி உணர்வு இருக்கிறது. மத உணர்வு இருக்கிறது. எனவே இந்த சமூக கட்டமைப்பை ரஜினி சரியாக அணுக வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர்,மகாத்மா காந்தி, பெரியார் போன்ற அரசியல் ஆளுமைகளின் கொள்கைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
குறைந்த பட்சம் 25 ஆண்டுகாலமாக தமிழகத்தில் நடந்த முக்கிய பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு, முறையான தீர்வை முன் வைக்க வேண்டும்.ஏனென்றால் அரசியலில் எல்லாவற்றையும் ஆண்டவன் மீது போட்டு தப்பிக்க முடியாது. நடிகராக மட்டுமே தெரிந்த ரஜினியை பிடிக்காதவர்களுக்கும், அரசியல்வாதியாக ரஜினியை பிடிக்க வைக்க வேண்டும். அதற்கு ஆன்மிக அரசியலைவிட, சமூக நீதி அரசியலே ரஜினிக்கு தேவை. தமிழக மக்களும் அதையே விரும்புகிறார்கள். அதை பிடித்துக்கொண்டால் மட்டுமே, இந்த வெற்றிடம் கொடுத்திருக்கும் வாய்ப்பினை ரஜினியால் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அது ஆண்டவரின் கையில் அல்ல, ரஜினியில் கையில் தான் இருக்கிறது'' என்றார்.

1 கருத்து:

தமிழியல் மீளாய்வு மையம் சொன்னது…

என்னுடைய இதழில் இக்கட்டுரையை வெளியிடலாமா? நண்பரே