புதன், 3 ஜனவரி, 2018

மினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து 1771 கோடி ரூபாய்கள் கொள்ளை அடித்த ஆட்சி

தினகரன் :* அபராத வசூலில் எஸ்பிஐயை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
* நிகர லாபத்தையும் தாண்டி, கணிசமான அளவு அபராதம் வங்கிகளுக்கு வசூலாகியுள்ளது.
* ஜன்தன் போன்ற அடிப்படை சேமிப்பு கணக்குகள், சிறுவர்களுக்கான கணக்குகள் போன்றவற்றுக்கு அபராத விதி பொருந்தாது.

புதுடெல்லி: குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதித்த வகையில் பொதுத்துறை வங்கிகளுக்கு 2,320 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் 1,771 கோடி கிடைத்துள்ளது.  சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. இந்த வகையில் பொதுத்துறை வங்கிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 2,320 கோடி வசூலித்துள்ளன. இதில். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் 1,771 கோடி வசூலித்துள்ளது.  பாரத ஸ்டேட் வங்கிக்கு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் கிடைத்த நிகர வருவாய் 1,581.55 கோடியை விட, அபராத வகையில் அதிகமாக கிடைத்துள்ளது.


இதுபோல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் நிகர வருவாய் இந்த வங்கிக்கு 3,586 கோடி கிடைத்துள்ளது. இதில் ஏறக்குறைய பாதி தொகை அபராதம் மூலம் ஈட்டப்பட்டுள்ளது.  எஸ்பிஐக்கு அடுத்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல்  நவம்பர் வரை, குறைந்தபட்ச இருப்பு இல்லாதவர்களிடம் அபராத தொகையாக 97.34 கோடியும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 68.67 கோடி, கனரா வங்கி 62.16 கோடி ஈட்டியுள்ளன. பொதுத்துறை வங்கிகளில், பாரத ஸ்டேட் வங்கி மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை 3,000 வைத்திருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது.

இதற்கு கீழ் இருப்பு இருந்தால் 30 முதல் 100 வரை இருப்பு தொகை குறைவுக்கு ஏற்ப அபராதம் விதித்து வசூலிக்கிறது. இதுபோல் புறநகர்களில் 2,000, கிராம பகுதிகளில் 1,000 இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். அடிப்படை டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு கணக்குகள், ஜன்தன் கணக்குகள், 18 வயது வரை உள்ள சிறுவர்களின் கணக்குகள், சமூக பாதுகாப்பு திட்ட பலன்களை பெறுபவர்கள் போன்றவர்களுக்கு இந்த இருப்பு தொகை விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: