அப்போது நடைபெற்ற போரில் உயிரிழந்த மஹர்களின் நினைவாக
கோரேகாவ் பீமாவில் நிறுவப்பட்டுள்ள வெற்றித் தூணுக்கு தலித் மக்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அஞ்சலி செலுத்தப்படுவதாக கூறி மராட்டிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
200வது ஆண்டான இந்த ஆண்டு நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்தச் சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வன்முறை வெடித்தது, ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்த வெற்றியை மிகவும் உற்சாகமாக தலித் தலைவர்கள் கொண்டாடுவதற்கு காரணம், இந்த போரில் பங்கேற்ற கிழக்கிந்திய கம்பெனியின் படையில் தீண்டதகாதவர்கள் என்று கருதப்பட்ட மஹர் சமுதாயத்தினர் அதிக அளவில் ஈடுபட்டிருந்தனர் என்பதே.
இந்தப் போர் கோரேகாவ் போர் என்றும் அறியப்படுகிறது. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் தலைமையில் 28 ஆயிரம் மராட்டியர்கள் புனேயை தாக்க முற்பட்டார்கள் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கேப்டன் பிரான்சிஸ் ஸ்டாண்டனின் தலைமையின் கீழ், கிழக்கு இந்திய கம்பனியின் இந்த குழு கிட்டத்தட்ட 12 மணி நேரம் மராட்டியர்களை எதிர்கொண்டது. மராட்டியர்களால் சுலபமாக வெல்ல முடியவில்லை. பின்னர் தாக்குதல் நடத்தும் முடிவை மாற்றிக்கொண்ட மராட்டிய படை பின்வாங்கியது.
ஜெனரல் ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஒரு பெரிய பிரிட்டிஷ் படை உதவிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் வெற்றி எளிதாக இருக்காது என்று மராட்டிய படை அச்சம் கொண்டதுதான் இந்த பின்வாங்கலுக்கு காரணம்.
இந்தத் துருப்புகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களில் பெரும்பாலானோர் பாம்பே காலாட்படையை சேர்ந்த மஹர் தலித்துகள். இந்த போரை தலித் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாக தலித் ஆர்வலர்கள் கருதுவதற்கான காரணம் இதுவே.
அவர்கள் நதியை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது அவர்கள் நதியை கடக்க விரும்புவதாக பேஷ்வாவின் படையினர் நினைத்தார்கள், ஆனால் கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதியை கைப்பற்றிய அவர்கள், அதை தங்கள் நிலையாக மாற்றினார்கள்.
இந்தப் போரில் மஹர் தலித்துகளின் தைரியத்தைப் பற்றி 'இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு' (History of the Political and Military Transactions of India) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹென்றி டி. பிரின்சேப்
கேப்டன் ஸ்டோன்டன் தலைமையில் இந்த படைப்பிரிவு புனே சென்றுக்கொண்டிருந்தபோது, அதை தாக்கும் வாய்ப்புகள் இருந்ததாக அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வெட்டவெளியில் சிக்கிக்கொள்வதை தவிர்க்கும் பொருட்டு, கோரேகாவில் தனது நிலையை உருவாக்க முடிவு செய்தது இந்த துருப்பு.
இந்த துருப்புக்கள் வெட்டவெளியில் சிக்கியிருந்தால், மோசமான சூழ்நிலையில் மராட்டியர்களின் கைகளில் சிக்கியிருக்கலாம்.
எண்ணிக்கைப் பற்றிய வரலாற்று ஆசிரியர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன. கம்பெனியில் படையில் இருந்த 834 வீரர்களில் 275 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போய்விட்டார்கள். இதில் இரண்டு அதிகாரிகளும் அடங்குவார்கள். காலாட்படையில் 50 பேர் கொல்லப்பட்டனர், 105 பேர் காயமடைந்தனர்.ure>பிரிட்டன் அதிகாரிகளின் மதிப்பீடுகளின்படி, 500-600 பேஷ்வா படையினர் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.
அடையாளத்திற்கான போர்
மஹர் மற்றும் பேஷ்வாக்கள் இடையே நடைபெற்ற போரை வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிரான இந்திய ஆட்சியாளர்களின் போராகவும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். உண்மையில் அதில் தவறும் இல்லை.
ஆனால் மஹர்களை பொறுத்தவரையில் அவர்கள் ஆங்கிலேயர்களுக்காக இந்தப் போரை நடத்தினார்கள் என்பதைவிட தங்களின் அடையாளத்திற்கான போராட்டமாகவே இதை கருதினார்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
பண்டைய இந்தியாவில் வருணாசிரம முறையில் 'தீண்டப்படாமைக்கு' ஆளான மக்கள் எப்படி நடத்தப்பட்டார்களோ, அதேபோல பேஷ்வா ஆட்சியாளர்கள் மஹர்களை நடத்தினார்கள்.
இதற்கான பல தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள் பல இடங்களில் வழங்கியுள்ளனர். நகரத்திற்குள் நுழையும் மஹர்கள் தங்கள் இடுப்பில் ஒரு விளக்குமாற்றை கட்டிக்கொள்ளவேண்டும். ஏன் தெரியுமா?
அவர்கள் தங்கள் கழுத்தில் ஒரு பாத்திரத்தையும் தொங்கவிட வேண்டும். அது எதற்கு? அவர்களுக்கு வாயில் இருந்து எச்சில் வந்தால், வீதிகளில் துப்பினால் மாசுபடும் என்று கூறி கழுத்தில் கட்டியுள்ள பாத்திரத்தில் எச்சிலை துப்பிக்கொள்ளவேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக.
கிராமத்தில் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து தாகத்திற்கு தண்ணீரை எடுப்பதை அவர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
வரலாற்று ஆசிரியரும் விமர்சகருமான பேராசிரியர் ரிஷிகேஷ் காம்ப்ளே கொரெகாவ் பீமாவின் மற்றொரு பக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மஹர்கள் மராத்தியர்களை தோற்கடிக்கவில்லை, அவர்கள் வெற்றிகொண்டது பிராமணர்களையே.
தலித்துகள் மீது தீண்டாதவர்கள் என்ற முத்திரையை குத்தி, அவர்களை அடக்கி ஆண்டவர்கள் பிராமணர்கள் தான். தங்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைதான் மஹர்களை கோபப்படுத்தியது. அந்த வழக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளாததால்தான் அவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்துடன் இணைந்தார்கள்.
பிரிட்டிஷ் துருப்புக்கள் மஹர்களுக்கு பயிற்சி அளித்து, பேஷ்வாக்களுக்கு எதிராக போராட உத்வேகம் அளித்தன. மராட்டிய சக்தியின் பெயரில் உயர் மதிப்பு கொண்டிருந்த பிராமணர்களுக்கு எதிரான போராட்டம் அது. அவர்களையே மஹர்கள் தோற்கடித்தார்கள், உண்மையில் இது மராத்தாவுக்கு எதிரான போர் அல்ல.
மஹர் மற்றும் மராட்டியர்களுக்கு எதிரான கருத்து வேறுபாடோ, மோதலோ இதன் பின்னணி என்று வரலாற்றில் எங்கும் கூறப்படவில்லை என்று கூறும் காம்ப்ளே, தீண்டாமை என்ற கொடுமையை பிராமணர்கள் முடித்துவிட்டிருந்தால் இந்த போரே நடைபெற்றிருக்காது என்று சொல்கிறார்.
பிராமணர்கள் மாராட்டியர்களிடம் இருந்து அவர்களின் மதிப்பை பறித்ததால்தான் மராட்டியர்களின் பெயர் இந்த போரில் இடம் பெறுகிறது என்கிறார் காம்ப்ளே. இறுதியாக எஞ்சியிருந்த பேஷ்வாவின் பலத்தை அடக்க நினைத்த பிரிட்டிஷ் ராணுவம் மஹர்கள் கொண்ட படையை கட்டமைத்து பேஷ்வாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக