திங்கள், 18 நவம்பர், 2013

சு சுவாமி : இந்திய அரசியல்வாதிகளின் கருப்பு பண பட்டியலை பாக். உளவுத்துறை வெளியிடும்!”

“பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ, இந்தியாவில் உள்ள அமைச்சர்களின் கருப்பு பண பட்டியல் கணக்கை வெளியிடப் போவதாக மிரட்டுகிறது” நம்ம இந்திய அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் இந்த தகவலை வெளியிட்டுள்ளார், அடிக்கடி பரபரப்பான தகவல்களை வெளியிடுவதில் கில்லாடியான சுப்ரமணியம் சுவாமி. இவர் சொல்வதில் எத்தனை சதவீதம் நிஜம், அத்தனை சதவீதம் கற்பனை என்ற கலவை ரகசியம், அந்த சுப்ரமணியம் சுவாமிக்கே வெளிச்சம். இருந்தாலும், அவ்வப்போது ஏதாவது சொல்லி மற்றையவர்களை துணுக்குற வைப்பதில் சுவாமி சமர்த்தர். இதற்குமுன் ஜனதா கட்சியை நடத்திக் கொண்டிருந்துவிட்டு, சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த சுப்ரமணியம் சுவாமி, நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போதுதான், இந்த விவகாரத்தை எடுத்து விட்டார். புவனேஸ்வரில் பேசிய சுவாமி, “பாகிஸ்தான் மீது நம்நாடு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டில் சேர்த்து வைத்துள்ள கருப்பு பணம் பற்றி விபரங்கள் முழுவதும் வெளியிட்டுவிடுவோம் என பாகிஸ்தானின் உளவுதுறை ஐ.எஸ்.ஐ. மிரட்டுகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சர்களின் கருப்பு பணம் அனைத்தும் துபாயில் இருக்கும் ஹவாலா கும்பலால்தான் அனுப்பப்படுகிறது.
ஆகவே ஐ.எஸ்.ஐ. மற்றும் தாவூத் இப்ராகிமிற்கு தெரியாமல் நடக்கவே நடக்காது என்றார்.
நம் நாட்டில் உள்ளவர்கள், 70 வெளிநாட்டு வங்கிகளில் குவித்துள்ள கருப்பு பணம் மொத்தம் ரூ.120 லட்சம் கோடி. இதை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வர ஒரே ஒரு வழி, அவசர சட்டம்தான். இதன் மூலம் அத்தனை பணத்தையும் இங்கு கொண்டு வந்துவிட முடியும்.
இது நடக்க வேண்டும் என்றால் கொள்கை பக்கவாத நோய் பிடித்துள்ள ஐ.மு. கூட்டணி அரசை மாற்றிவிட வேண்டும்.அவ்வாறு செய்தால் இந்தியா முன்னேறும்” என்றார்.
இந்த விஷயத்தை பாகிஸ்தானின் உளவுதுறை ஐ.எஸ்.ஐ. சுவாமிக்கு நேரில் சொன்னதா, அல்லது வேறு சோர்ஸ் மூலம் தெரிந்து கொண்டாரா என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.
யார் சொல்லியிருப்பார்கள்? அல்லது, யாராவது சொல்லியிருப்பார்களா?
viruvirupu.com

கருத்துகள் இல்லை: