புதன், 20 நவம்பர், 2013

சிறையில் உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி

சிறையில் உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. அதேசமயம், சிறைத் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்க வேண்டும் என்றும், சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் கடந்த ஜூலை மாதம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. குற்றவியல் வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளைக் காக்கும் வகையில் அமைந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(4)-ஆவது பிரிவை "சட்டவிரோதம்' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி அறிவித்து தீர்ப்பளித்தது.

அதேபோல, "விசாரணை நீதிமன்றத்தால் சிறை தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மேல்முறையீடு செய்த காலத்தில் சிறையில் இருந்தாலும் அவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது. அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது' என்றும் மற்றொரு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியது. இத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
இதற்கிடையே, சிறையில் உள்ள மற்றும் போலீஸ் காவலில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 62 (2)-ஆவது பிரிவில் திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியது.
இந் நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு நீதிபதி ஏ.கே. பட்நாயக், சுதான்சு ஜோதி முகோபாத்யாய அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என "லோக் பிரஹரி' என்ற அரசு சாரா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் நீதிபதிகளைக் கேட்டுக் கொண்டனர். அதைக்கேட்ட நீதிபதிகள் கூறியது:
"சிறையில் உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதன் விளைவாக, சிறையில் இருந்தாலோ, போலீஸ் காவலில் இருந்தாலோ அந்த வேட்பாளர் தேர்தலில் போட்டியிடலாம். இது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லுபடியாகாது எனக் கோரி எதிர் மனுதாரர் (லோக் பிரஹரி) மனு தாக்கல் செய்யவில்லை. அக் கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தால் நீதிமன்றம் அம் மனுவை விசாரிப்பது குறித்து முடிவு செய்யும். எனவே, ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கிய பிறகு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மறு ஆய்வு மனுவில் அரசு விடுத்த கோரிக்கையே பயனற்று விட்டது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேற்கண்ட கருத்தின் மூலம் சிறையில் வேட்பாளர்கள் மேல்முறையீடு செய்து விசாரணை நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை பெற்றாலோ அல்லது விசாரணை கைதியாக சிறையில் இருந்தாலோ அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இருக்காது என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சிறையில் வேட்பாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, மக்களவையில் செப்டம்பர் மாதம் அச் சட்டத்திருத்த மசோதா விவாதமின்றி 15 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கையை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக
விமர்சித்தன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்த உடனேயே இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பாஜக தலைவர்கள் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது   dinamani.com

கருத்துகள் இல்லை: