tamil.oneindia.com - Halley Karthik : சென்னை: தவெக ஆட்சி அமைக்க ஒரு வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) என இரண்டு கட்சிகளும் காரணமாக இருந்தன. இருப்பினும் ஆட்சியில் தங்கள் கொள்கைக்கு எதிரான செயல்பாடுகள், திட்டங்கள் அமல்படுத்தப்படும்போது அவரை எதிர்க்கின்றன. இது தவெகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதால், தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படி தடை செய்வது என்று தவெக ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்க தொடங்கியிருக்கின்றனர்.
தேர்தலுக்கு பிறகு, போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாதபோது.. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக தங்களது ஆதரவை உடனடியாக அறிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். பின்னர்தான் ஐயுஎம்எல்.. கடைசியாக விசிக ஆதரவு தெரிவித்திருந்தது.
ஆதரவுக்காக தங்கள் எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமும் பெற்றன. ஆனால், இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வித்தியாசமாக செயல்பட்டன. அதாவது நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பது. நிபந்தனையற்ற ஆதரவு எனில்.. எந்த தொல்லையும் இருக்காது என்று தவெக எதிர்பார்த்திருந்தது. ஆனால், நிபந்தனையற்ற என்பதற்கான அர்த்தமே வேற!
TVK
முதல் மோதல்
அரசு அதிகாரிகள் விஷயத்தில்தான் தவெகவுக்கும்-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. குறிப்பாக தேர்தல் காலத்தில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமை செயலாளரை ஏன் இப்போது வரை மாற்றவில்லை என்று கம்யூனிஸ்ட்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த கேள்விக்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசால் பதில் சொல்ல முடியவில்லை. அதேநேரம் இந்த விமர்சனங்களை ஏற்று தலைமை செயலாளரை மாற்றவும் இல்லை.
தவெகவின் அதிருப்பதி
நிலைமை இப்படியே போய்க்கொண்டிருந்தபோதுதான்.. நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தன. இந்த போராட்டங்கள் எல்லாம் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் தலைமையில்தான் நடைபெற்றது. இது தவெக அரசுக்கு பெரிய தலைவலி. கூட்டணிக்கும் வரல.. விட்டுட்டும் போகல.. கூடவே இருந்து இப்படி படுத்துறாங்களே! என நொந்துக்கொண்டது.
கொளுத்தி போட்ட அதிகாரிகள்
இந்த புகைச்சல் போக்கு நீடித்து வந்த நேரத்தில்தான்.. அதிகாரிகள் கொளுத்திவிட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினர். அதாவது திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எவ்வளவுப்பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க சொல்லி உத்தரவு போட்டது, இடதுசாரி மாணவர் அமைப்புகள் பின்னால் மாணவர்கள் போவதை தடை செய்வது குறித்த உத்தரவு.. இதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளை டென்ஷன் ஆக்கியது.
TVK
பிரச்சனையை அப்படியே விட்டிருந்தால் கூட.. ஒரு சமாதானம் உண்டாகியிருக்கும். ஆனால் எப்போ தங்கள் கட்சியினரை கணக்கெடுக்க அரசு ரெடியாகவிட்டதை கம்யூனிஸ்ட் கட்சிகள் உணர்ந்ததோ.. அப்போவே அலர்ட் மோடுக்கு வந்துவிட்டன.
தீவிரம் காட்டிய கம்யூனிஸ்ட்டுகள்
இதற்கு பதிலடியாக.. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், சட்டமன்றத்தில் மிசா குறித்து விஜய்யின் பாடி லேங்குவேஜை கடுமையாக கண்டித்தது, அரசின் தனியார்மய திட்டங்களுக்கு எதிராக அறிக்கைவிடுவது மற்றும் போராட்டங்களை நடத்துவது, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.. இப்படி தங்கள் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரம் காட்டின.
தடை செய்ய கோரிக்கை
நிலைமை இப்படி இருக்கையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததை தொடக்கத்திலிருந்து எதிர்த்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இடைத்தேர்தலை தனித்து நின்று எதிர்கொள்வது என்று முடிவெடுத்து.. தனித்து களமிறங்கியிருக்ககின்றன. இதெல்லாம் தவெகவினரை டென்ஷனாக்கியிருக்கிறது. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்க தொடங்கியிருக்கின்றனர். தவெகவின் சோஷியல் மீடியா டீம் இந்த விஷயத்தை எழுப்ப தொடங்கியிருக்கிறது.
ஆட்சி அமைய ஆதரவு கொடுத்த ஒரு கட்சியை.. தடை செய்வது குறித்து தவெக பொது வெளியில் பேச தொடங்கியிருப்பது.. கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்ல.. மற்ற கட்சிகளிடையேயும் எதிர்ப்புகளை கிளப்பியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக