சிமெண்ட்டுகள் பெயர்ந்து சிதிலமடைந்த கட்டிடங்கள்; துருத்திக் கொண்டிருக்கும் துருப் பிடித்த கம்பிகள்; மேற்பூச்சு பெயர்ந்து விழுந்த பல்லிளிக்கும் மேற்கூரைகள்; பிடிமானமின்றி அந்தரத்தில் தொங்கும் ஜன்னல்கள்; பாசி படர்ந்து கருமையாகி போன நீரில்லா “நீர்த்தொட்டிகள்’; பல ஆண்டுகளாக சொட்டு நீரைக் கூட பார்த்திராத குடிநீர்க் குழாய்கள்; மலமும் சிறுநீரும் குட்டையாய் தேங்கிக் கிடக்கும் திறந்த வெளி செப்டிக் டேங்குகளாய் கழிவறைகள்; சுற்றுச்சுவரோ, மேற்கூரையோ தேவைப்படாத திறந்தவெளி குளியலறைகள்…
திகில்படக் கதையொன்றில் வரும் பங்களா பற்றிய விவரிப்புகள் அல்ல; தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகளின் அவலங்கள் இவை. விடுதி என்பதற்குரிய எந்த வித அடிப்படை வசதிகளுமற்ற வதை முகாம்களாக தமிழகமெங்கும் படர்ந்திருக்கும் 1300 ஆதி திராவிடர் நல விடுதிகளில் 97,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சொல்லொண்ணா துயரில் உழல்கின்றனர்.
இன்று, நேற்றல்ல; கால் நூற்றாண்டு அவலம் இது :
இன்று, நேற்றல்ல; கால் நூற்றாண்டு காலமாய் எவ்வித மாற்றமுமின்றி தொடரும் அருவெறுக்கத்தக்க அவலம் இது. விஞ்சிப்போனால், ஐநூறுக்கும் குறைவான விடுதிகள் புதிய கட்டிடங்களை பார்த்திருக்கலாம். இன்னும் சில விடுதிகளின் சுற்றுச் சுவர்கள் சுண்ணாம்புக் கலவைகளால் நிறம் மாற்றப்பட்டிருக்கலாம். இவற்றைத் தாண்டி வேறெந்த மாற்றத்தையோ, முன்னற்றத்தையோ கண்டிராத அரசின் சவலைப் பிள்ளைகளாக, திட்டமிட்டே ஒதுக்கிவைக்கப்பட்ட நவீன சேரிகளாக புறந்தள்ளப்பட்டிருக்கின்றன, அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள்.
ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் தங்கிப்பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணமாக 650 ரூபாயும், கல்லூரி மாணவர்களுக்கு 750.00 ரூபாயும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கிறது, ஆதி திராவிடர் நலத்துறையின் கையேடு. அரசு ஒதுக்கும் இத்தொகையில் சமையலர் தொடங்கி, விடுதிக்காப்பாளர், துறை அதிகாரிகள் வரையில் விகிதாச்சார அடிப்படையில் இவர்கள் “ஒதுக்கி’க் கொண்டது போக, மிஞ்சும் அற்பத்தொகையில்தான் மாணவர்களுக்கு கால்வயிற்றுக் கஞ்சி வார்க்கப்படுகிறது.
நேரம் தாறும், கிழமைதோறும் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு வகைகளென விடுதி சுவற்றில் தொங்கும் அரசின் அறிவிப்புப் பலகையோ, சரவண பவன் மெனுப் பட்டியலோடு போட்டி போடுகிறது. புழுத்துப்போன அரிசியின் நாற்றமோ அவித்துப் போட்ட பின்பும் விடாமல் விரட்டுகிறது, விடுதி மாணவர்களை. சாம்பாருக்கும், ரசத்திற்குமான வேறுபாட்டை மிதக்கும் காய்களைக் கொண்டே பிரித்தறிய முடியும். கழனித் தண்ணீரைப் போல சற்று கலங்கலாக இருந்தால் அது மோர் என்று பொருள் கொள்ள வேண்டும். இளைத்துப் போன முட்டைகள்; உருளைக்கிழங்கில் புதைந்து போன இறைச்சித் துண்டுகள்; என வெந்ததைத் தின்று விதியெனப் புலம்பி காலந்தள்ளுகின்றனர், விடுதி மாணவர்கள்.
பெரும்பாலான விடுதிகளில் என்றல்ல, உறுதிபட அடித்துக் கூறலாம் அனைத்து விடுதிகளிலும விடுதிக் காப்பாளர்கள் ஒரு நாளும் இரவு தங்குவதே இல்லையென்று! ஆண்டுக்கொருமுறை விடுதி சேர்க்கையின் பொழுது, ஆளுக்கொரு நூறோ இருநூறோ இலஞ்சப்பணம் வாங்குவதும்; ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கணக்கிட்டு சமையலரிடம் ஒப்படைப்பதும்; விருந்தினரைப் போல சட்டையின் மடிப்புக் கலையாமல் விடுதியை பார்வையிட்டு செல்வதும்தான் விடுதிக் காப்பாளர்களின் அலுவல் என்பதுதான் எழுதப்படாத விதியாக இருக்கிறது.
பழம் தின்று கொட்டை போட்டவர்கள் விடுதிக் காப்பாளர்கள். பத்து ரூபாய் செலவு செய்து விட்டு நூறு ரூபாய்க்கு பில் எழுதி பணம் பண்ணும் “யோக்கிய’ சிகாமணிகள் இவர்கள். விடுதிக் காப்பாளர்களிடம் பேசிப் பாருங்கள் “என் கை காசு போட்டு செலவு பண்ணிருக்கேன் சார். இன்னும் பில் சேங்சன் ஆகவில்லை” என்று புலம்புவார்கள். ஏதோ, இவர்களது மொத்த சம்பளப் பணத்தில்தான் விடுதி மாணவர்களின் பசியாற்றுவதைப் போல நம்மிடம டீ ஆத்துவார்கள்.
விடுதிக் காப்பாளர்கள் இல்லாத நேரங்களிலெல்லாம், சமையலர்கள்தான் விடுதிக் காப்பாளர் எல்லாமும். பாத்திரம் கழுவுவதும், காய்கறி நறுக்குவதும், சமையல் வேலையில் எடுபிடி வேலைகளை மேற்கொள்வதும் விடுதி மாணவர்கள்தான்.
இங்கு மட்டுமல்ல; தமிழகமெங்கும் தொடரும் அவலம் :
சமீபத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதி மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தூத்துக்குடி கடற்கரையையொட்டி அமைந்துள்ள அவ்விடுதிக் கட்டிடங்களை உப்புக்காற்று அரித்து தின்றிருந்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பயிலும் அந்த விடுதியில் ஒரு கழிவறை கூட உருப்படியாக இல்லை. கடற்கரைதான் அவர்களின் திறந்தவெளிக் கழிவறை. அதைவிடக் கொடுமை, விடுதியில் குடிக்க சொட்டுத் தண்ணீரில்லை. உணவு பரிமாறும் நேரங்களில் மட்டும்தான் சமையலறை திறக்கப்படும். மாணவர்கள் தமக்குத் தேவையான தண்ணீரைப் பாட்டில்களில் (மட்டும்தான்) பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பாட்டில் நீர் தீர்ந்து விட்டால், கடை வீதிக்குச் சென்று கடைகளில் தண்ணீர் கேட்டு தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டும். “நைட்ல தாகம் எடுக்கவோ… ஒன்னுக்குப் போகவோ கூடாதுன்னு நினைச்சிட்டே படுத்துப்போம்” என்றான் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன்.
“ஒரு சில மாவட்டத்தில் அதுவும் ஒரு சில விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதற்காக, தமிழகத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் அனைத்தையும் குறை சொல்ல முடியுமா?” என்ற கேள்வி இங்கே எழுவது இயல்பானதுதான்.
அழுகிய தக்காளி காய்கறிகளையும், புழுத்து நாறும் சோற்றையும் சாலையில் கொட்டி, தமிழகத்தின் பல பகுதிகளில் இவ்விடுதி மாணவர்கள் தன்னெழுச்சியாகவும், மாணவர் அமைப்புகளின் தலைமையில் அணி திரண்டு போராடியதையும், இப்பாராட்ட செய்திகளின் மூலம் அவ்விடுதிகளின் அவலத்தையும் நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கிறோம்தான்!
- தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது சிதிலமடைந்த மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயமுற்றதைக் கண்டித்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற திருச்சி மன்னார்புரம் அண்ணா ஸ்டேடியம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதி மாணவர்களின் போராட்டம் (23.09.2009);
- விடுதியின் சீர்கேட்டை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடத்திய எம்.சி.ராஜா விடுதி மாணவர்கள் (21.11.2011);
- மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழிகாட்டுதலில் திருச்சி காட்டூர் ஆ.தி.ந.மகளிர் விடுதி மாணவிகளின் போராட்டம் (2012);
- ம.க.இ.க. வழிகாட்டுதலில், வேலூர் ஆ.தி.ந. முதுகலை மாணவர் விடுதி மாணவர்கள் நடத்திய போராட்டம் (2012);
- கடலூரில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் நிலவும் அவலங்களையும் முறைகேடுகளையும் கண்டித்து அம்மாணவர்களை அணிதிரட்டி பு.மா.இ.மு. நடத்திய பாராட்டம் (19.09.2013);
- சேலம் ஆ.தி.ந. கல்லூரி விடுதி மாணவர்களின் போராட்டம் (2013)
இவையெல்லாம் உணர்த்துவது, தமிழகம் முழுவதிலும் உள்ள விடுதிகள் அடிப்படை வசதிகளற்ற அவல நிலையில் உள்ளது என்பதை மட்டுமல்ல, ஆண்டுக் கணக்கில் இவ்விடுதி மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் தீர்க்கப்படாமல இருக்கிறது என்பதையும்தான்!
சந்தேகமென்றால், உங்கள் மாவட்டத்தில் இயங்கும் ஏதேனும் ஒரு அரசு ஆதி திராவிடர் நல விடுதிக்கு சென்றுதான் பாருங்களன். விடுதியின் சுற்றுச் சூழலையும், அச்சுகாதாரக் கேட்டுக்கு மத்தியிலும் காலம் தள்ளும் மாணவர்களையும் சந்தித்துப் பேசிப் பாருங்கள், உண்மை விளங்கும்.
அவலத்தில் காசு பார்க்கும் அல்லக்கைகளும் அதிகார வர்க்கமும் :
விடுதி சமையலர் தொடங்கி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வரையில், அடிமுதல் நுனி வரை வேர்விட்டிருக்கிறது, இலஞ்சமும் முறைகேடுகளும்.
விடுதி மாணவர்களுக்கான சேர்க்கையிலேயே தொடங்கி விடுகிறது இலஞ்சமும் அதிகார முறைகேடுகளும். விடுதி செயல்படும் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்களும், கல்விக் குழு உறுப்பினர்களும், தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருப்பதால் இங்க சகட்டு மேனிக்கு இலஞ்சம் புகுந்து விளையாடுகிறது. திருச்சி கண்டோண்மெண்ட் மகளிர் விடுதிக்கு, காண்டிராக்ட் முறையில் காய்கறி சப்ளை செய்யும் ஆளும் கட்சி பிரமுகர்தான், அவ்விடுதியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார் என்பதிலிருந்த இந்த எளிய “உண்மை’ விளங்கும். பேருந்து நிலையக் கழிப்பறையை காண்டிராக்ட் எடுப்பதைப் போல, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையென ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில்தான், அவர்களின் கண்ணசைவில்தான் பயனாளிகளின் தேர்வு நடைபெறுகிறது.
ஆளும் கட்சி அமைச்சரின் பெயரை சொல்லிக் கொண்டும், எம்.எல்.ஏ.வின் சிபாரிசுக் கடிதத்தை வைத்துக் கொண்டும் இவர்களது அல்லக்கைகள் பண்ணும் அலப்பறைகளுக்கு அளவில்லை. விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பத்தோடு 5,000 முதல் 8,000 வரையில் காந்தி காகிதத்தையும் சேர்த்து இவர்களிடம் கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு சீட் கன்பார்ம். இல்லை, “நான் இலஞ்சம் கொடுக்க மாட்டேன், விடுதியில் சேருவதற்கான எல்லா தகுதிகளும் எனக்கு இருக்கிறது? நான் ஏன் தேவையில்லாமல் இலஞ்சம் கொடுக்க வேண்டுமென்று” கொள்கை குன்றாக நீங்கள் இருப்பீர்களேயானால், உங்களுக்கு இடம் கிடைத்த மாதிரிதான்!
ஆதாரம் வேணுமா ?
அதிலும் குறிப்பாக, கல்லூரி விடுதி மாணவர் சேர்க்கையில் இலஞ்சம் கொடுக்காமல் நீங்கள் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கிறது, திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரது அனுபவம்.
திருச்சி நகரில் பத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் பயிலும் ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் தங்கிப்பயில ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கென அண்ணா ஸ்டேடியம் அருகில் ஒரு விடுதியும், முதுகலை மாணவர்களுக்கென ராஜாகாலனி அருகில் ஒரு விடுதியும்தான் உள்ளது. மகளிருக்கோ கண்டான்மெண்ட் பகுதியில் இயங்கி வரும் ஒரே ஒரு விடுதிதான் இருக்கிறது.
ஆண்டொன்றிற்கு 60 இடங்களுக்கு மேல் இவர்கள் மாணவர்களைத் தேர்வு செய்வதில்லை. கிராமப்புறங்களிலிருந்து தினமும் பேருந்துப் பயணம் மேற்கொண்டு கல்லூரிக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களாடு ஒப்பிடும் பொழுது, இந்த எண்ணிக்கை யானைப் பசிக்கு சோளப்பொரி கதைதான். இந்த 60 இடங்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் முட்டி மோதுகின்றனர். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, மாணவர் சேர்க்கைக்கு ஆயிரக்கணக்கில் இலஞ்சம் வாங்குகின்றனர். இது ஒரு புறமிருக்க, அரசு விடுதியில் இடம் கிடைக்காத மாணவர்களைக் குறி வைத்து பல தனியார் மாணவ, மாணவியர் விடுதிகள் கல்லா கட்டி வருவது தனிக்கதை.
திருச்சி மாவட்டத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலிலுள்ள கிராமப்புறத்திலிருந்து திருச்சி நகரில் இயங்கும் அரசு உதவி பெறும் கல்லூரியொன்றில் பயிலும் மாணவி அவர். கல்லூரி மாணவியருக்கான ஆ.தி.நலத்துறையைச் சேர்ந்த கண்டான்மெண்ட் மகளிர் விடுதியில் சேருவதற்கு விண்ணப்பிக்கிறார்.
பள்ளி இறுதித் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பயண தூரம், அவரது சாதி, அனைத்தும் விதிகளுக்குட்பட்டுதான் இருக்கிறது. ஆனாலும், விடுதி மாணவியரின் தேர்வுப் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. பேருந்து பயணத்தின் பொழுது, அறிமுகமான அவரது தோழியோ, “8000 காசு கொடுத்தேன். எம்.எல்.ஏ. பரிந்துரை கடிதம் வாங்கிக் கொடுத்தேன். எனக்கு செலக்சன் ஆயிருச்சி” என வெள்ளந்தியாக உண்மையைப் போட்டுடைத்திருக்கிறார்.
மாணவியர்களிடமிருந்து, எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன? தகுதியுள்ள எத்தனை பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டன? என்பதெல்லாம் பரம இரகசியம். எம்.எல்.ஏ., பரிந்துரை கடிதங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களுக்கு இங்கே மதிப்பு இல்லை. இவ்வாறுதான் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டுமென்று, அரசாணை ஆயிரம் விதிமுறைகளை வகுத்து சொல்லட்டும்; அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. துட்டு இருக்கா? எம்.எல்.ஏ. ரெக்கமென்டசன் இருக்கா? ரெண்டுதான் இங்க முக்கியம்.
60 மாணவர்களுக்கும் தலா 5000 என்று கணக்கிட்டால் கூட, ஆண்டொன்றுக்கு மூன்று இலட்சம் ரூபாய் இலஞ்சம் கைமாறுகிறது. அமைச்சர்களின் அல்லக்கைகளான இந்த அடிப்பொடிகளுக்கு ஆண்டுக்கொருமுறை இது கூட கிடைக்கவில்லையென்றால், எதற்கு கட்சிப்பதவி, கவுன்சிலர் பதவி என்பது அவர்களது உள்ளக்கிடக்கை.
ஆதி திராவிடர் நலத்துறையா? ஆளும் கட்சியின் கூலிப்படையா?
“கண்டோன்மெண்ட் கல்லூரி மாணவியர் விடுதி மாணவியர் சேர்க்கையில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாமே? தேர்வுக்குழு உறுப்பினர்கள் இலஞ்சப்பணம் பெற்றுக்கொண்டு பயனாளிகளை தேர்வு செய்துள்ளதாக பேசப்படுகிறதே?” என்ற கேள்விக்கு, ஆதி திராவிடர் நல அலுவலர் முருகையனிடமிருந்து இதுவரை நேரடியாகப் பதிலில்லை. அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட பொழுது, மருத்துவ முகாம் ஒன்றில் இருப்பதாக தெரிவித்த அவர் பின்னர் தொடர்பு கொள்வதாகக் கூறினார். தொடர்ச்சியாக நாமும் அவரை தொலைபேசியில் அழைத்த பொழுதெல்லாம் அழைப்பை ஏற்கத்தான் அவர் தயாரில்லை. ஆதி திராவிடர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் இரவிச்சந்திரனோ பட்டும் படாமல் பேசுகிறார். “”வெல்பேர் ஆபிசர்ட்ட பேசினேன். செலக்சன் சரியாத்தான் நடந்துருக்குன்னு சொல்லிட்டாரு…” என்றார். இடைமறித்து “அவர் சொல்வது இருக்கட்டும்; நீங்க என்ன சார் சொல்றீங்க” என்ற ளேள்விக்கு… “எனக்கு மேலே ஆபிசர் இருக்கிறப்ப.. நான் கருத்து சொல்லக் கூடாது சார்” என்பது அவரது பதில். “என்ன சார் நீங்கதான் ஸ்ட்ரெய்ட் பார்வர்டு ஆபிசர்னு டிபார்ட்மென்ட்ல பேசிக்கிறாங்க… நீங்களே இப்படி சொல்லலாமா?” என்ற கேள்விக்கு “அதுதான் சார் இங்க பிரச்சினையே” என்கிறார் அவர்.
இதே பிரச்சினையை ஆதி திராவிடர் நலத்துறையின் நலக்குழு உறுப்பினரான கலைச்செழியனிடம் கொண்டு சென்றோம். “எதையும் ஆதாரத்தோடதான் தம்பி நாம டீல் பண்ணணும்; எடுத்தேன் கவிழ்த்தேனு பண்ணிடக் கூடாது… ஆய்வு பண்ணுவோம். நீங்க சொல்ற மாதிரி இருந்ததுனா நடவடிக்கை எடுக்கலாம்” என்றார் அவர். அவரும் நீ…ண்ட ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வுகளின் முடிவில்.. “டிபார்ட்மெண்ட்ல பேசிட்டேன்.. மேலிடம் சம்பந்தப்பட்டதா இருக்கு தம்பி.. அவங்க (சிட்டிங் எம்.எல்.ஏ. பரஞ்சோதி; அ.தி.மு.க. கொறடா மனோகரன் வகையறாக்கள்!) டிக் பண்ணி தர்றதை செலக்சன் லிஸ்ட் ல கொண்டு வர்ராம் எங்களால என்ன பண்ண முடியும்னு கேட்கிறாங்க” இது அவரது பதில். அட இதுக்கு எதுக்கு சார் ஆய்வு எல்லாம்.
ஆதி திராவிடர் நலத்துறை அலுவலரும், தனி வட்டாட்சியரும், நலக்குழு உறுப்பினரும் இலஞ்சம் வாங்கினார்கள் என்பதல்ல நமது குற்றச்சாட்டு. தேர்வுக்குழு உறுப்பினர்கள் இலஞ்சப்பணத்தைப் பெற்றுக்கொண்டு, அரசு விதிகளை புறந்தள்ளிவிட்டு தமது விருப்பப்படிதான் பயனாளிகளைத் தேர்வு செய்துள்ளனர் என்ற புகார் மீது அவர்கள் காட்டும் அலட்சியம்தான் இங்கே கவனிக்கத்தக்கது. “நான் யார்கிட்டேயும் கை நீட்டி காசு வாங்கல.. நமக்கென்ன வம்பு” என ஒதுங்கிப் போவதை என்ன வென்று சொல்வது?
இதே புகாரை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். 29.08.2013 இல் இணைய வழி கோரிக்கை பிரிவில் அளித்த புகாருக்கு “மனு பரிசீலனையில் இருக்கிறது” என்ற ஒற்றை வரி பதிலுக்கு மேல் மரியாதை இல்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட இதே புகாரை, “அரசு விதிமுறையின் படிதான் தேர்வு நடைபெற்றுள்ளது” எனப் பதிலளித்து பத்தே நாளில் மூடி விட்டார்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியும் இம்முறைகேடு தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுவரை பதில்தான் வந்து சேரவில்லை.
சரி, நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க?
அட, சொல்றதுக்கெல்லாம் இனி ஒண்ணும இல்லீங்க. செய்யறதுக்குத்தான் கடமைகள் நிறைய இருக்கு. இப்போ நாம பேசிகிட்டிருக்கிற இந்த ஆதி திராவிடர் விடுதிகள் எல்லாம் சந்திர மண்டலத்திலயா இருக்கு? தமிழகத்துலதான இருக்கு? இந்த விடுதிகளின் அவலம் பற்றி அதிகாரிகள் யாருக்கும தெரியாதா என்ன? அதிகாரிகளுக்குத் தெரியாமல்தான் விடுதி காப்பாளர்கள் மட்டத்திலேயேதான் நாம் பட்டியலிடும் இலஞ்ச முறைகேடுகளும் நிர்வாக சீர்கேடுகளும் நடைபெறுகின்றனவா என்ன?
கொடநாட்டிலும், கோபாலபுரத்திலும் போராட்டம் நடத்தாதது ஒன்றுதான் பாக்கி என்ற அளவிற்கு, ஆண்டுக்கொரு முறை தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறும் இவ்விடுதி மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் பலவும் விடுதிகளின் அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ள போதிலும், அவை தீர்க்கப்படவில்லையே, என்ன காரணம்?
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் அமைப்பாக அணி திரள்வதும்; அடையாளப் போராட்டங்களும் அதனைத் தொடர்ந்த அதிகார வர்க்கத்தின் கண்துடைப்பு நடவடிக்கைகளையும் கண்டு மயங்காமல்; தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதும்தான் இன்றைய தேவை என்பதை, இவையெல்லாம் உணர்த்தவில்லையா?
“தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன” எனக் கூசாமல் பேசும் கனவான்களை விடுதிக்கு அழைத்து “‘விருந்து’ கொடுப்போம்! “கழிவறை கட்டித் தா!” எனக் கேட்டு ஓய்ந்தாயிற்று, ஆ.தி.நலத்துறை அலுவலக முற்றத்தில் அவற்றை “இறக்கி’ வைப்போம்!
போராட்ட முறைகளில் மட்டுமல்ல; போராடும் சங்கத்திலும் மாற்றம் வரட்டும். அது, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியாக இருக்கட்டும்! vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக