வியாழன், 17 செப்டம்பர், 2026

ஏமாற்றிய பாகிஸ்தான்! இஸ்ரேலிடம் உதவி கேட்ட சவுதி அரேபியா! ஹவுதிகளால் மாறும் நிலவரம்

tamil one india : ரியாத்: சவுதி அரேபியா மீது ஏமனின் ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும் வகையில் கடல் வழிப்பாதைகளை ஹவுதிகள் கைப்பற்றி வருகின்றன. ஹவுதிகளை சமாளிக்க பாகிஸ்தான் உதவி செய்ய மறுத்த நிலையில் சவுதி அரேபியா தற்போது தனது எதிரியான இஸ்ரேலிடம் உதவி கோரியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.


மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. தற்போது சவுதி அரேபியா - ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகள் இடையே மோதல் வலுத்துள்ளது. இது, ஈரான் - அமெரிக்கா போரின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏமனில் இயங்கும் ஹவுதிகளுக்கு ஈரானின் ஆதரவு உள்ளது.

அதேவேளையில், சவுதி அரேபியா, அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. இதனால் அமெரிக்கா - ஈரான் போருக்கு நடுவே சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வந்தது. 

தற்போது மோதல் தீவிரமாகி உள்ளது. சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் போக்குவரத்தை தடுக்கும் வகையில் ஹவுதிகள் செயல்பட்டு வருகின்றனர். செங்கடல் வழிப்பாதையை கைப்பற்றி ஹவுதிகள் அடுத்ததாக பாப் எல் மண்டேப் ஜலசந்தியையும் கைப்பற்றி சவுதி அரேபியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. 

அதுமட்டுமின்றி சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏவுகணைகள், ட்ரோன்களை பயன்படுத்தி சவுதியின் பல்வேறு இடங்களை ஹவுதிகள் டார்க்கெட் செய்து வருகின்றன. 

இந்நிலையில் தான் ஹவுதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானிடம், சவுதி அரேபியா உதவி கோரியது. பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே 'மெக்கா' ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது சவுதி அரேபியா அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் யார் மீது தாக்குதல் நடத்தினாலும் இருநாடுகளும் சேர்ந்து தாக்குதல் நடத்தும் என்பது தான் இதன் சாராம்சமாகும். ஆனால், பாகிஸ்தான் உதவி செய்யவில்லை

இந்நிலையில் தான், ஹவுதிகளை சமாளிக்க சவுதி அரேபியா தனது எதிரியாக உள்ள இஸ்ரேலிடம் உதவி கோரியுள்ளது. இஸ்ரேலும், சவுதி அரேபியாவும் தொடக்கம் முதலே எதிரிகளாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால் இஸ்ரேலை, சவுதி அரேபியா இன்னும் கூட தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. 

காசா போர் உள்பட மத்திய கிழக்கில் நடக்கும் இஸ்ரேல் நடவடிக்கைகள் பலவற்றையும் சவுதி அரேபியா கடுமையாக எதிர்த்து வருகிறது. இப்படி சவுதி அரேபியா, இஸ்ரேல் இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது. ஆனால் ஹவுதிகளின் தாக்குதலால் தற்போது நிலைமை மாறியுள்ளது.

சவுதி அரேபியா தற்போது இஸ்ரேலிடம் உதவி கோரியுள்ளது. இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்காவுக்கு நெருக்கமாக உள்ளன. 

அதேபோல் அமெரிக்கா- இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் ஹவுதிகளுக்கும் பிரச்சனை உள்ளது. இப்படியான சூழலில் தான் ஹவுதிகளுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலும், சவுதி அரேபியாவும் ஒன்று சேர்ந்துள்ளது. 

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பார்மூலாவில் இருநாடுகளும் கைகோர்த்துள்ளன. இதற்கு அமெரிக்கா தான் மத்தியஸ்தம் செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா சென்ட்ரல் கமாண்ட் (CENTOM or US Central Command) மையத்தை தனியே வைத்துள்ளது. 

இந்த கமாண்ட் மையத்தில் உள்ள அதிகாரிகள் மத்தியஸ்தம் செய்ய ஹவுதிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றி இஸ்ரேல் - சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி ஹவுதிகளின் ராணுவம் பற்றிய உளவுத்துறை தகவல்களை இஸ்ரேலிடம், சவுதி அரேபியா கேட்டுள்ளதாம். இஸ்ரேல் மட்டுமின்றி பிற மத்திய கிழக்கு நாடுகள், எகிப்து உள்ளிட்ட நாடுகளிடம் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உதவி கோரியுள்ளார். ஹவுதிகளை கட்டுப்படுத்த தேவையான சவுதி அரேபியாவின் நடவடிக்கைக்கு உதவி செய்யும்படி அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: