திங்கள், 18 நவம்பர், 2013

ராகுல் மன்னிப்பு: ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்த அபிப்பிராயம்: காங்கிரஸ்

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்த கருத்து என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
ராகுல் காந்தி பேச்சு
சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூரில் நடந்த கலவரத்துக்கு பாரதீய ஜனதாதான் காரணம் என்றும், அந்த கலவரத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு தொடர்பு கொண்டு இருப்பதாகவும் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாரதீய ஜனதா, இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தது. இதைத்தொடர்ந்து, வருங்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் பேசுமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்தது.
மன்னிப்பு கேட்கும் விவகாரம்  காங்கிரசில் அவரவருக்கு சொந்த அபிப்பிராயங்கள் வேறு இருக்குதாமே ?


இந்த நிலையில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மந்திரி ஜெய்ராம் ரமேசை சந்தித்து பேசிய மூத்த உருது பத்திரிகையாளர்கள் சிலர், முசாபர்நகர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி இருப்பதாகவும், எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தனர்.
அதற்கு ஜெய்ராம் ரமேஷ், இந்த கோரிக்கையை ராகுல் காந்தி பரிசீலிக்கலாம் என்று கூறினார். அத்துடன், ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு படுத்தி ராகுல் காந்தி கூறிய கருத்து பற்றி முஸ்லிம்கள் அல்லாத தனது நண்பர்கள் சிலர் கூட வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். என்றாலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் ராகுல் காந்தி பேசி இருக்கமாட்டார் என்றும் அப்போது ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார்.
ஜெய்ராம் ரமேஷின் சொந்த கருத்து
தனது கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தொனியில் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியது பற்றி காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் கூறுகையில்; ”ஜெய்ராம் ரமேஷ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் என்ன கூறி இருந்தாலும் அது அவருடைய சொந்த கருத்துதான். காங்கிரஸ் கட்சியின் கருத்து ஆகாது” என்றார்.
பாரதீய ஜனதா
மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியது பற்றி பாரதீய ஜனதாவும் கருத்து தெரிவித்து உள்ளது. ”முஸ்லிம்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கப் போகிறாரா? அல்லது தான் கூறிய கருத்துக்காக ராகுல் காந்தியிடம் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கேட்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சித்தார்த்நாத் சிங் கூறினார்.
முஸ்லிம்களின் உணர்வுகளை ராகுல் காந்தி புண்படுத்தி விட்டதாகவும், இதற்காக அவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அப்போது சித்தார்த்நாத் சிங் கூறினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: