செவ்வாய், 19 நவம்பர், 2013

மதுரவாயலில் பறக்கும் சாலை திட்டத்தை ஜெயலலிதா முடக்குவது ஏன் ? அதிமுகவுக்கு ஒட்டு போட்டவங்ககிட்ட கேளுங்க ? `!

  சென்னை: மதுரவாயல் பறக்கும் சாலை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை மேம்பால சாலை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்தது. 1,200 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் 2010ம் ஆண்டு தொடங்கி வைத்தார். ஒரு ஆண்டுவரை இந்த பணிகள் நடைபெற்றன. இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டத்துக்கு அதிமுக அரசு தடை விதித்தது. பறக்கும் சாலைபணிகளை நிறுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை நோட்டீஸ் கொடுத்தது. இதை ரத்து செய்யக்கோரி தேசிய நெஞ்சாலைத்துறை சார்பாக, மத்திய அரசின்  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் நேற்று உயர்நீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்தார்.அதில் கூறியிருப்பதாவது:‘மதுரவாயல் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத் துக்கு தமிழக அரசு விதித்த தடை தொடர்ந்து நீடித் தால் திட்டத்தை உடனே மத்திய அரசு வாபஸ் பெறும்.


மத்திய அரசு திட்டத்தை கைவிட்டால் தமிழகத்துக்கு இழப்பு ஏற்படும். சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளில் 80 சதவீதம் சாலை மார்க்கமாகத்தான் வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டம் நடப்பதால் இப்போது சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்கூட வருவதில் சிக்கல் உள்ளது. தென் பகுதி வழியாக இரவில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. துறைமுகத்துக்கு வரும் சுமார் 70 சதவீத சரக்குகள் தென் பகுதியில் இருந்து வருகின்றன. இந்த சாலை அமைக்கப்பட்டால் துறை முகம் மேலும் வளர்ச்சி அடையும். இந்த சாலையை நம்பி ஸ்ரீபெரும்புதூரில் 3000 கோடி செலவில் கன்டெய்னர் டெர்மினல் அமைக்க 121 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள் ளது. நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக  235 கோடி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை&பெங்களுர் சாலையில் மப்பேட்டில் உலர் துறைமுகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகளை தொடருமாறு உத்தரவிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடல், ஆறுகள், ஏரிகள் ஆகியவற்றின் மீது பல்வேறு இடங்களில் பாலம் அமைத்து சாலைகள் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூவம் ஆற்றில் மட்டும் பாலம் கட்டி ஏன் சாலை அமைக்க கூடாது? இந்த திட்டத்தில்  1800 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 900 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பில்லர் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தூண்கள் நினைவு தூண்கள் போல மக்கள் பார்வையில் உள்ளது. இந்த சாலை திட்டம் பொதுமக்களின் நலனுக்காக உருவாக்கப்பட் டது.

தனிநபரின் நலனுக்காக அல்ல. எனவே இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும் .மக்களுக்கு பயன்தரும் இந்த மிகப்பெரிய திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தற்போது சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இந்த திட்டம் வந்த பிறகு துறைமுகத்தில் இருந்து பறக்கும் சாலை வழியாக 25 நிமிடத்தில் மதுரவாயல் சென்றுவிடலாம். லாரிகள் தற்போது இரவு நேரங்களில் மட்டும்தான் துறைமுகத்துக்கு மதுரவாயலில் இருந்து செல்கிறது. இந்த திட்டத்திற்கு பிறகு 24 மணி நேரமும் லாரிகள் செல்ல வசதி ஏற்படும். போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே இந்த திட்டத்திற்கு அனுமதி தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மத்தியஅரசு பதில் மனுவில் கூறியுள் ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது dinakaran.com

கருத்துகள் இல்லை: