வியாழன், 21 நவம்பர், 2013

ம பியில் மீண்டும் BJP ஆட்சியை பிடிக்கிறது ? அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ?

மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா 3–ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்– மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த மத்திய பிரதேசத்தில் 2003–ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து அங்கு பாரதீய ஜனதாவே 4 முறை ஆட்சியில் இருந்து வருகிறது.
உமாபாரதி, பாபுலால் கவுர் ஆகியோருக்குப் பின் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்து 2–வது முறையாக முதல்– மந்திரி பதவி வகித்து வருகிறார்.
வருகிற 25–ந்தேதி மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே நடந்த கருத்துக்கணிப்புகளில் பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது.
இப்போது புதிதாக நடந்த கருத்துக் கணிப்பில் பாரதீய ஜனதா 3–ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சிப் பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஏ.பி.பி. நியூஸ் என்ற செய்தி நிறுவனத்துக்காக ஏ.சி. நீல்சன் நிறுவனம் இந்த புதிய கருத்துக்கணிப்பை நடத்தியது.

அதில் மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளில் பாரதீய ஜனதா 155 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரசுக்கு 65 இடங்களே கிடைக்கும் நிலையில் உள்ளது. இது கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு கிடைத்ததை விட 7 தொகுதிகள் கூடுதல் ஆகும்.
காங்கிரசுக்கு 2008 தேர்தலில் 32.1 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. இந்த தேர்தலில் 33 சதவீத வாக்குகள் கிடைக்கும். பாரதீய ஜனதாவுக்கு கடந்த தேர்தலில் 37.9 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. தற்போது 41 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.
முன்னாள் முதல்– மந்திரி உமாபாரதி கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவில் இருந்து பிரிந்து சென்று தனித்துப் போட்டியிட்டார். அவரது கட்சி 4.9 சதவீத ஓட்டுகளை பெற்றது.
தற்போது பாரதீய ஜனதாவில் அவரது கட்சியை இணைந்து விட்டதால் அந்த கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுகள் சதவீதம் அதிகரித்துள்ளது.
கருத்துகணிப்பில் பங்கேற்றவர்களில் 55 சதவீதம் பேர் முதல்– மந்திரி சவுகான் ஊழலற்ற முறையில் சிறப்பான ஆட்சி நடத்துவதாக பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: