செவ்வாய், 19 நவம்பர், 2013

டெல்லியில் ராகுலின் கூட்டத்திற்கு கூட்டமே இல்லை !

ராகுலின் பேச்சை கேட்பதென்றால், ‘தண்ணீர் குடித்தபடி’ கேட்கவேண்டும். இல்லாவிட்டால், “ராகுலின் பேச்சே வேண்டாம்” என ஆட்கள் தண்ணீர் குடிக்க போய் விடுகிறார்கள்” இவ்வாறு சொல்லியிருப்பவர், பா.ஜ.க.காரர் அல்ல, டில்லி முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, ஷீலா தீட்ஷித்!
தண்ணீருக்கும் ராகுலுக்கும் இடையே போட்டி வைத்தால், தண்ணீர் ஜெயிக்கிறது என்ற ரகசியத்தை, ஷீலா தீட்ஷித் ஏன் வெளியிட்டுள்ளார்?
டில்லியில், முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம் 4-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க., அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இடையே, மும்முனை போட்டி நிலவுகிறது.

மும்முனை போட்டி என்றால் பிரசாரம் இல்லாது இருக்குமா? டில்லி தக்சின்புரியில், காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் பேசும் கூட்டத்துக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்வரை, அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளில் பெரும்பாலானவை, காலியாகவே இருந்தன.
முதல்வர், ஷீலா தீட்ஷித் மட்டும், மேடையில் சோகமாக அமர்ந்திருந்தார்.
இந்த நிலையில்தான் கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து இறங்கினார் ராகுல். அவர் வந்ததும் ஓரளவு கூட்டம் வந்தது. ஆனாலும் இவர்கள்  எதிர்பார்த்ததை விட, குறைவான கூட்டமே வந்ததது. அப்படி வந்தவர்களும் என்ன நினைத்தார்களோ, கூட்டம் முடிவதற்குள் கும்பல் கும்பலாக எழுந்து செல்ல தொடங்கினர்.
பதறிப்போன ஷீலா தீட்ஷித், “அய்யா.. அம்மா.. யாரும் செல்ல வேண்டாம். இதோ, ராகுல்ஜி பேச போகிறார். அவர் பேசி முடிக்கும் வரையாவது அமர்ந்திருங்கள்” என, மீண்டும் மீண்டும் அறிவித்தார். கலைந்து சென்ற ஆட்கள் இந்த அறிவிப்பை கேட்டபோது, ஷீலா தீட்ஷித்தை பரிதாபமாக பார்த்துவிட்டு, தத்தமது சோலியை பார்க்க சென்று கொண்டிருந்தனர்.
இறுதியில், ராகுல் பேச எழுந்தார். அப்போது மிகக் குறைந்த கூட்டமே இருந்தது. அவர்களும், ராகுல் பேசும்போதே எழுந்து செல்லத் தொடங்கியதில், தன் பேச்சை ஏழு நிமிடங்களிலேயே முடித்துக் கொண்டார் ராகுல்ஜி.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்ததையடுத்து, “காங். கட்சியின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கே காலி நாற்காலிகள்தானா?” என ஆளாளுக்கு கேலி செய்ததில் நொந்துபோன டில்லி முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்ஷித், ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
காலி நாற்காலி கேலிக்கு அவர் கொடுத்த விளக்கம்: “கூட்டத்துக்கு வந்த தொண்டர்களிடம், போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர். இதனால் பலரால் கூட்டம் நடந்த இடத்துக்கு வர முடியாமல் போய் விட்டது. முறையான குடிநீர் வசதியும் இல்லை. தொண்டர்கள் தம்முடன் குடிநீர் கொண்டு வருவதற்கு, போலீசார் அனுமதிக்க இல்லை. இதனால், தொண்டர்களுக்கு களைப்பும், தாகமும் ஏற்பட்டு விட்டது. எனவே தண்ணீர் குடிக்க, பாதியிலேயே எழுந்து சென்று விட்டனர்” என்பதுதான்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: