சாமானிய, நடுத்தர வர்க்கத்தினர் நிறைந்த கொல்கத்தா நகரம் குறுகலான தெருக்களைக் கொண்டதாகும். இதர பெருநகரங்களை ஒப்பிடும்போது, கொல்கத்தாவில்தான் சைக்கிள்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொல்கத்தாவின் குறுகலான தெருக்களில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும் கார்களால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதேயன்றி, சைக்கிளால் போக்குவரத்து தடைபட்டுத் தாமதமாகிறது என்கிற வாதமே அபத்தமானது.
இலண்டனைப் போல கொல்கத்தாவை மாற்றுவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த மம்தா, கொல்கத்தாவின் சாலைகளிலிருந்து சாமானியர்களை விரட்டியடித்து விட்டு, அந்நகரை கார்களில் பறக்கும் மேட்டுக்குடியினருக்கானதாக மாற்றிவிடத் துடிக்கிறார். தனியார்மய – தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இதர மாநிலங்களின் ஆட்சியாளர்கள் நகரை அழகுபடுத்துவது எனும் பெயரால் குடிசைகளை அப்புறப்படுத்தி சாமானியர்களைத் துரத்துவதும், கொல்கத்தாவில் சைக்கிள்களில் பயணிக்கும் உழைக்கும் மக்களைச் சாலைகளிலிருந்து அகற்றுவதும் வேறுவேறல்ல.
அனுமதிக்கப்படாத இடங்களில் கார்களை நிறுத்துவோரை மென்மையாகக் கையாள்வதும், அதே இடங்களில் சைக்கிளையோ ஆட்டோவையோ நிறுத்துவோர் மீது பாய்ந்து குதறுவதும் நாடெங்கும் போலீசின் பொது விதியாகவே உள்ளது. குடிசை மாற்று வாரிய வீடுகளின் வாடகையை விட மிகவும் குறைவான வாடகையைத்தான் கார்கள் நிறுத்துமிடங்களுக்கு அரசு வசூலிக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளிலும் சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளிலும் தொடர்வண்டி, பேருந்து போன்றவற்றுக்கு அரசு முக்கியத்துவம் தருகின்றபோது இங்கோ, பொதுப்போக்குவரத்தைப் படிப்படியாகக் குறைக்கும் அரசு, இருசக்கர வாகனங்கள் வாங்குவோருக்குக் கடனுதவியும் கார்களுக்குக் குறைவான சாலை வரியையும் விதித்து திட்டமிட்டே கார்-மோட்டார் சைக்கிள் கம்பெனி முதலாளிகளின் நலனுக்காகச் செயல்படுகிறது.
நகரங்களை மாற்றியமைக்கும் அரசு, அங்கே மாடுகளை வைத்துப் பிழைப்போர் இருக்கக் கூடாது, சைக்கிள் ஓட்டிப் பிழைப்போர் இருக்கக் கூடாது – எனப் பல கூடாதுகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்து உழைக்கும் மக்களை நகரங்களிலிருந்தே விரட்டியடித்து வருகிறது. சாமானியர்களை அற்பமாகவும் தேவையற்றவர்களாகவும் கருதும் கண்ணோட்டத்திலிருந்து பிறக்கும் இந்த வக்கிரமான உத்தரவுகள் ஒவ்வொன்றும் உழைக்கும் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதால், இத்தடைகளுக்கு எதிராகவும் இவற்றுக்குக் காரணமான தனியார்மய-தாராளமயத்துக்கு எதிராகவும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சைக்கிள்களுக்கு சாலைகளில் தடை கொண்டுவர முயன்றபோது, உழைக்கும் மக்கள் அதை எதிர்த்துப் போராடி அரசைப் பணியவைத்த வீர வரலாறு நம்முன்னே உள்ளது.
-அன்பு vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக