வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையாம். தேர்தல் விபச்சாரமாம். த.தே.கூ.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அரசின் பக்கம் தாவியுள்ள அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கூட்டம் கூடித் தீர்மானம் எடுத்திருந்தது. அந்தக் கூட்டத்தில் பியசேனவும் பங்கேற்றிருந்தார். அத்துடன் அவர் இறுதி நேரம் வரை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார். உள்ளூர் வானொலி ஒன்றுக்கும் அவர் இது தொடர்பில் செவ்வி வழங்கினார்.

இந்நிலையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு விளக்கம் கோரி இன்று கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனையடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நேற்று பாரளுமன்றில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி கட்சித் தாவல்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் விபச்சாரிகள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர், ஒரு கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகிவிட்டு, வேறு கட்சிகளுக்கு மாறுபவர்கள் மாறலாம் ஆனால் முன்னர் இருந்த கட்சி மூலம் கிடைக்கப் பெற்ற பாராளுமன்ற ஆசனத்தை அவர்கள் இராஜினாமா செய்யவேண்டும்.

அவ்வாறு கட்சிகள் மாறுபவர்கள் பாராளுமன்ற ஆசனத்தை இழக்க வேண்டுமென அரசியல்யாப்பினிலோ தேர்தல் சட்டத்திலேயோ மாற்றத்தினைக் கொண்டு வரவேண்டும். இனிவரும் காலங்களிலும் நான் தேர்தல் விபச்சாரத்தை விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: