வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படலாம்,புலிகள் சார்பில் 12நாடுகளுக்கு விஜயம் செய்த குழுவில்

கனடாவில் உள்ள இலங்கையர் ஒருவரை நாடுகடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்று அகதி அந்தஸ்து கோரிய நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு இவர் கனடாவுக்கு சென்றார்.எனினும் இவருக்கு கனடா அரசாங்கம் அகதி அந்தஸ்து கொடுக்க மறுத்தது. இந்தநிலையில், 2009 ஆம் ஆண்டு நைய்கரா நீர்வீழ்ச்சியின் ஊடாக இவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
எனினும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில், அமெரிக்கா அவரை ஏற்றுகொள்ளவில்லை.
இதனடிப்படையில் இவர் மீண்டும் கனடாவுக்கு திருப்பியனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கனேடிய நீதிமன்றம் இவரின் அகதி கோரிக்கையை கடந்த முதலாம் திகதி நிராகரித்துள்ளது.
இதனை அடுத்து அவர் எதிர்வரும் வாரங்களில் நாடுகடத்தப்படலாம் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, எம் வீ சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த அகதிகளில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என டொரன்டோ சன் தெரிவித்துள்ளது.
இவர் தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர் என்ற காரணத்தினாலே, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உறுப்பினர் தமிழீழ புலிகள் சார்பில் ஆழிப்பேரலை நிதிகளை சேகரிப்பதற்காக, 12 ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்த குழுவில் இருந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இவர் இலங்கையில் இருந்து வேறு எந்த நாட்டுக்கும் சென்றதில்லை என தெரிவித்தாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த இலங்கையர் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ள போதும் அவர் தமிழீழ விடுதலை புலிகளின் சார்பில் சென்று வந்தவர் என நிரூபிக்க முடியாது என அவரின் சட்;டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: