உயிருக்கு உலை வைத்த உடற்பயிற்சி! ம.பிரியதர்ஷினி காதல் மனைவியின் சோகக் கதை
" 'உயிர் குடியிருக்கும் கோயில், இந்த உடம்பு. இதனை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை!'னு எங்கயோ, எப்பவோ படிச்சிருக்கேன். இந்த வரிகள, அடிக்கடி என் கணவர்கிட்ட நினைவூட்டி, 'எக்ஸர்சைஸ் பண்ணுங்க'னு சொல்வேன். ஆனா, அந்த எக்ஸைர்சைஸே அவர் உயிருக்கு எமனாகும்னு நான் கனவுலயும் நினைக்கல!"
- நம் அலுவலகத்துக்கு கண்ணீர் கலந்து வந்திருந்த இந்தக் கடிதம்,அதிர்ச்சி தந்தது நமக்கு.
அதை அனுப்பியிருந்த பல்லாவரத்தை சேர்ந்த நம் வாசகி ஜெயந்தியை நேரில் சந்தித்தோம். அவர் வாழ்க்கையில் நடந்த விபரீதத்தை உடற்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வுக்கான அனுபவப்பாடமாக பகிர்ந்துகொண்டார் நம்மிடம்.
"நானும் என் கணவரும் ஆறு வருஷத்துக்கு முன்னால காதல் திருமணம் செஞ்சுட்டோம். ரெண்டு பேருக்கும் ஐ.டி. துறையில வேலை. சந்தோஷமா போனது வாழ்க்கை. குழந்தை இல்லைங்கற ஒரு குறையைத் தவிர, பணம், பாசம்னு வேற ஒண்ணும் குறைவில்லை எங்களுக்கு" என்றவர்,
"நாங்க ரெண்டு பேருமே காலேஜ் காலத்துல அத்லெட்ஸ். அதனால எப்பவுமே உடம்பை ஃபிட்டா வச்சிருப்போம். ஆனா, கல்யாணத்துக்கு அப்பறம் ரெண்டு பேருமே ஃபிட்னெஸ் விஷயத்துல மெத்தனமா இருந்துட்டோம். ஆறரை அடி உயரம் இருந்த என் கணவருக்கு பெரிய தொப்பை விழ, நானும் வெயிட் போட்டுட்டேன். டயட், வீட்டிலேயே உடற்பயிற்சினு மறுபடியும் எங்க ஃபிட்னெசுக்காக மெனக்கெட ஆரம்பிச்சோம்" என்ற ஜெயந்தியின் கணவருக்கு... அதன் பிறகுதான் ஏற்பட்டிருக்கிறது அந்த ஆசை.
"போன வருஷம் 'சிக்ஸ்பேக்' உடம்பு சம்பந்தமான சி.டி-யை எனக்கு போட்டுக் காட்டினவரு, 'இப்படித்தான் நானும் என் உடம்பை மாத்தப் போறேன்'னு சொன்னாரு. சென்னையில இருக்கற பிரபலமான ஜிம்முல, போன ஜூன் மாசம் சேர்ந்தார். அதுலயிருந்து தினமும் காலை ஜிம்முக்கு போக ஆரம்பிச்சார். இந்த பிப்ரவரியிலதான் 'சிக்ஸ்பேக்' முயற்சி எடுக்க ஆரம்பிச்சார்"
என்றவர், இடையில் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு பற்றியும் பகிர்ந்தார்.
"இதுக்கிடையில, இத்தனை வருஷம் குழந்தையில்லாம இருந்த நாங்க டெஸ்ட் டியூப் முறையில குழந்தை பெத்துக்க முடிவெடுக்க, அதே பிப்ரவரியிலதான் நான் கருவுற்றேன். அந்த சந்தோஷத்தைக் கொண்டாட, 'ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வாங்க'னு சொல்லிவிட்டேன். ஜிம்முல கை தசைகள் இறுகறதுக்கான பளு தூக்கற பயிற்சி செஞ்சுட்டு, அப்படியே ஸ்வீட்ஸ் வாங்கப் போயிருக்காரு. கொஞ்ச நேரத்துல எனக்கு போன் பண்ணினவரு, 'எனக்கு என்னவோ பண்ணுது ஜெயந்தி...'னு சொல்லும்போதே அவரோட நாக்கு குழறுச்சு. எங்க இருக்காருனு கேட்டுகிட்டு என் தம்பியோட பதறியடிச்சுக்கிட்டு ஓடினேன்..." எனும் ஜெயந்திக்கு குரல் கம்முகிறது.
"கார்லயே மயக்கமா இருந்தவரை, உடனடியா மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனோம். 'பிரெய்ன் ஹேமரேஜ் (brain hemorrhage), அதாவது ரத்த அழுத்தம் அதிகமாகி, மூளையில இருக்கற ரத்த குழாய்கள் வெடிச்சிருக்கு'னு டாக்டர்ஸ் சொல்ல, இடிஞ்சு போயிட்டேன் நான். 'உங்க கணவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்திருக்கு. அதோட இவ்வளவு ஸ்ட்ரெயின் பண்ணி உடற்பயிற்சி செஞ்சதே தப்பு'னு டாக்டர்ஸ் சொன்ன காரணத்துல, இன்னும் அதிர்ந்துட்டேன்.
கல்யாணமான ஆறு வருஷத்துல சாதாரண காய்ச்சல் தவிர வேற எந்த நோயும் வந்ததில்ல அவருக்கு. அதனாலேயே, அவர் ரொம்ப ஆரோக்கியமா இருக்கறதா பெருமையா நினைச்சிட்டிருந்த எனக்கு, அவருக்கு பி.பி. இருக்கறதே அப்போதான் தெரிய வந்தது. தாமதிக்காம, ரத்தக் கசிவை கண்டுபிடிச்சு உடனடியா சரி செஞ்சாங்க டாக்டர்ஸ்" எனும் ஜெயந்தியின் வேதனை அதோடு முடிந்துவிடவில்லை."ஆனாலும் நிலைமை மோசமாக, உடனடியா பிரபல மருத்துவமனையில சேர்த்தோம்.திடீர்னு வயிறு பெருசாயிட்டே வர, வரிசையா டெஸ்ட்கள் செய்த டாக்டர்கள்,'குடல்ல ஓட்டை விழுந்திருக்கு. அதனால, ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கு'னு அடுத்த இடியை இறக்கினாங்க. வயித்துல ஆபரேஷன் பண்ணணும்னு அவரை கூட்டிட்டுப் போன டாக்டர்ஸ், 'பி.பி. அதிகமா இருக்கு, கிட்னி வேல செய்யல,டயாலிசிஸ் செய்யறோம்'னு ஒவ்வொரு தகவலா சொல்லிட்டே இருந்தாங்க. இறுதியா பிப்ரவரி 27-ம் தேதி, இறந்துட்டார்ங்கற இறுதி செய்தியோட நிறுத்தினாங்க.அதைக் கேட்ட நிமிஷமே என் கருவும் கலைஞ்சுடுச்சு" என்றபோது, நம் கண்களையும் நிறைத்தது நீர். நிதானித்து தொடர்ந்தவர்...
"முப்பத்தி நாலு வயசுல எனக்கு எல்லாம் முடிஞ்சுடுச்சு. என் கணவரோட இழப்பு, மத்தவங்களுக்கு பாடமா இருக்கட்டுமேனுதான் அவள் விகடனுக்குக் கடிதம் எழுதினேன். உயர் ரத்த அழுத்தத்தோட உடற்பயிற்சி செஞ்சு, உயிரையே பலி கொடுத்த இந்தத் தவறுக்கு இனி எந்த உயிரும் பலியாயிட வேண்டாம்!" என்று முடித்தபோது, தன் துயரத்தை மீறிய அவரின் அக்கறை நம்மை நெகிழ்த்தியது.
நம் உடல் நலம் சம்பந்தப்பட்ட அடிப்படை பரிசோதனைகளை எந்த வயதிலிருந்தே எடுக்க வேண்டும், எந்தெந்த சூழல்களில் எல்லாம் உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது என்பது பற்றி பேசினார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் டாக்டர் முத்துசெல்வகுமார்.
"நிறையபேருக்கு பிறவியிலேய இதய வால்வு போன்ற கோளாறுகள் இருக்கலாம். எனவே,உடற் பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள்தான் என்றில்லை. அனைவருக்குமே மருத்துவ பரிசோதனைகள் அவசியம்தான். ரத்த அழுத்தம், சர்க்கரை, ஆஸ்துமா என்று உடல் நலம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, உடலைப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது.
குழந்தைகளாக இருந்தால், 5 வயதிலேயே இந்தப் பரிசோதனைகளை ய்துகொள்ளலாம். வளர்ந்தவர்கள் என்றால், 18 வயதுக்கு மேல் இத்தகைய பரிசோதனைகளை செய்துகொள்ளலாம். அதிலும்... விளையாட்டு, உடற்பயிற்சி என்று தீவிரம் காட்டுபவர்கள், கட்டாயம் பரிசோதனைகளை செய்யவேண்டும். 'எந்தப் பிரச்னையும் இல்லை' என்று உறுதிபடுத்திய பின்னர், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் தைரியமாக... தீவிரமாக ஈடுபடலாம். நோய் ஏதேனும் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைகளோடு களத்தில் இறங்கலாம். ஏனெனில்,சிலசமயம் உடற்பயிற்சிகள் நம் உயிருக்கே உலை வைக்கும் என்பது உண்மையே''என்ற டாக்டர் தொடர்ந்தார்...
''உதாரணமாக, இதய தசை நோய் பல்வேறு வகைப்படும். அவற்றில் 'ஹைபெர்ட்ரோஃபிக் கார்டியோ மையோபதி' என்பது ஒரு வகை. இது சிலருக்கு பிறவிலேயே இருக்கும்,சிலருக்கு இடையிலும் வரும். இந்த நோய் இருப்பவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இதய தசைகள் இறுக்கமாகி, உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
அதேபோல ஆஸ்துமா நோயாளிகள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, அவர்கள் நிலைமை இன்னும் சிக்கலாகலாம். எனவே, நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கும் எளிய பயிற்சிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்!" என்றார் டாக்டர் எச்சரிக்கையாக.
இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த பிரபல உடற்பயிற்சி சென்டரான 'பிட்னெஸ் ஒன்' பிராஞ்ச் மேனேஜர் 'கம்' டிரெயினியான நிரஞ்சனியிடம் பேசினோம். அவர் நம்மிடம், "பொதுவாக, எங்கள் ஜிம்முக்கு வருபவர்களை நாங்கள் நேரடியாக உடற்பயிற்சி கூடத்துக்குள் அனுப்பி வைப்பதில்லை. முதலில் எங்கள் ஃபிஸியோதெரபிஸ்ட்கள், அவர்களின் மெடிக்கல் ஹிஸ்டரியை முழுமையாக கேட்டறிவார்கள்.கூடவே, வர்களின் மெடிக்கல் டெஸ்ட் சர்டிஃபிகேட்களையும் சரிபார்த்து,'ஃபிட்' என்றால் மட்டுமே உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்துவார்கள்.அப்படியில்லாமால், இதய நோய், சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகளை அவர்களின் உடலின் தன்மை பற்றி அறியாமல் உடற்பயிற்சிகளில் ஈடுபட அனுமதித்தால் அது விபரீதத்தில்தான் முடியும். எனவே, மேற்சொன்ன இந்த முறைகள் எல்லாமே,அனைத்து ஜிம்முகளிலும் பின்பற்றப்பட வேண்டியது அவசியம்!" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக