ஒரேநாளில் சுமார் 10,000 பேரை விடுதலை செய்து மொத்த கைதிகளின் எண்ணிக்கையை 17,000 ஆகக் குறைக்கும் திட்டமொன்றை வகுத்து வருவதாக புனர்வாழ்வு அமைச்சர் டியூ. குணசேகர அறிவித்துள்ளார்.யாழ், போகம்பறை, காலி, மாத்தறை, வெலிக்கடை சிறைச்சாலைகளை இடம் மாற்றவும் திட்டமிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,”500 ரூபா முதல் 2000 ரூபா வரை அபராதத் தொகையைச் செலுத்த முடியாத 10,000 பேர் சிறைக்கூடங்களில் இருக்கின்றனர். இவர்களைப் பொது நலப் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் தற்போது தண்டனை பெற்று வரும் 27,000 கைதிகளை, ஒரே நாளில் 17,000 ஆகக் குறைக்க முடியும்.
ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 261 ரூபா செலவாகின்றது. இத்தொகையை ஒரே நாளில் குறைப்பதுடன் பாரிய வீண் விரயத்தையும் தவிர்க்க முடியும்.500 ரூபா அபராதம் செலுத்த வேண்டியவரை மாதக்கணக்கில் கைதியாக வைத்து பல ஆயிரங்கள் செலவிட வேண்டியிருக்கின்றது.
அத்துடன் யாழ்ப்பாணம், போகம்பறை, வெலிகடை, காலி, மாத்தறை முதலான சிறைகள் நகரங்களில் இருப்பதனால் இடநெருக்கடி காணப்படுகின்றது. எனவே இவற்றை வேறு இடங்களுக்கு மாற்றவும் உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக