வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தோழர் பியசீலி விஜேகுணசிங்காவின் காலமானார்.

பியசீலி விஜேகுணசிங்கா காலமானார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உறுப்பினரான தோழர் பியசீலி விஜேகுணசிங்காவின் அகால மரணத்தை ஆழ்ந்த இழப்புத் துயருடன் அறிவிக்கிறோம். பியசீலி வாழ்நாள் முழுவதும் ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியாக, மார்க்சிச சிந்தனையாளராகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு போராடுபவராகவும் விளங்கினார்.
மார்பகப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து முக்கிய உறுப்புக்கள் செயல்படாத நிலையில் வியாழன் அதிகாலையில் பியசீலி காலமானார். முன்னதாகப் பல ஆண்டுகள் அவர் புற்றுநோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றுவந்தார். இடைப்பட்ட ஆண்டுகளில் பல நோய்களாலும் அவதியுற்றார். அவருக்கு 67 வயதுதான் ஆகியிருந்தது.
பியசீலி சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸின் மனைவியும் துணைவியுமாவார். இவர் மகன் கீர்த்தி ரணபா விஜேகுணசிங்கா (42 வயது), மருமகள் அஞ்சனா மற்றும் 7 மாதப் பேத்தி ஜனார்த்தி ஆகியோரை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
கட்சி உறுப்பினர்கள், சக ஊழியர்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள், நண்பர்கள், குடும்பம் என்று பியசீலியை அறிந்தவர்கள் அனைவரும் அவருடைய பெருந்தன்மை, கலாச்சாரம் மற்றும் கண்ணியத்தைப் பாராட்டுவார்கள். அவருடைய அறிவுஜூவித்தன தீவிர ஆர்வமான இலக்கியக் கல்வியில் ஒரு தலைமுறை மாணவர்களுக்கு அவர் சவாலாகவும் ஆர்வத்துடனும் கற்பித்தார். அவருடைய அரசியல் மற்றும் கல்விசார்ந்த விரோதிகள்கூட அவரைப் பெரும் மதிப்புடன் நடத்தினர்.
கட்சித் தோழர்களிடையே பியசீலி ஒரு தாராள விருந்தோம்பல் செய்பவராக இருந்தார். இவருடைய இல்லம் எப்பொழுதும் பிறரை வரவேற்றுத் திறந்திருந்தது. பொதுவாக ஒதுங்கிச் செல்லும் இயல்பினராயினும், தேவைப்பட்டால் அவர் நாடகங்களில் நடிக்க ஊக்குவிக்கப்பட்டதுடன், தன்னுடைய இனிய குரலிலும் பாடினார். அவர் இலக்கியத்தின் மீது கொண்டிருந்த நேசத்துடன் பீத்தோவன் உட்பட பலதர இசைகளையும் ரசிப்பவராக இருந்தார்.
தென் இலங்கையின் காலிக்கு அருகில் ஹபுகல என்னும் கிராமத்தில் பியசீலி பெப்ருவரி 23, 1943ல் பிறந்தார். அவருடைய வாழ்வில் பெரும் தாக்கத்தைக் கொடுத்ததாக பின்னர் அவர் நினைவு கூர்ந்த காலி Southland பெண்கள் கல்லூரியில் கற்பதற்கு முன் அவர் மகாமோதர கிராமப் பாடசாலையில் பயின்றிருந்தார். ஆங்கில இலக்கியத்திற்கு அவர் அறிமுகப்படுத்தபட்டு, தன்னுடைய அறிவார்ந்த, வனப்புரை சொல்லாற்றல் திறமைகளை பாடசாலை விவாதக் குழுக்களுக்கு தலைமை தாங்கிய விதத்திலேயே முதலில் வெளிப்படுத்தினார்.
ஆனால் பியசீலியின் வாழ்வு, அடிப்படையில் ட்ரொட்ஸ்கிசத்தால் வடிவமைக்கப்பட்டது. பெரதெனியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்கு முன்பே அவர் அரசியலினால் ஈர்க்கப்பட்டு கல்லூரி விடுதி வசதியின்மை போன்றவற்றை எதிர்த்து, 1965லேயே மாணவர் எதிர்ப்புக்களுக்கு தலைவராக வெளிப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸ் தடிகளுடனும் கண்ணீர்ப்புகையுடனும் அடக்கியது. அவருடைய தோழராக அப்பொழுது இருந்த மாணவர் சங்கத் தலைவர் விஜே டயஸ் உட்பட மற்றவர்களுடன் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு நீக்கப்பட்டிருந்தார்.
திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் 1964ம் ஆண்டு லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) நுழைந்து, ட்ரொட்ஸ்கிசத்தை வரலாற்று காட்டிக்கொடுப்பிற்கு உட்படுத்தியதை புரிந்து கொள்ள முயன்று செயற்பட்ட தீவிரமயப்பட்ட இளைஞர்கள் குழுவில் விஜே டயஸ் இருந்தார். இந்த சோசலிச சர்வதேசக் கொள்கைகளை அடிப்படையில் கைவிட்டது ஒரு சர்வதேச சந்தர்ப்பவாதப் போக்கின் விளைவாகும். அப்போக்கிற்கு மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமை தாங்கினர். அது லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் பின்வாங்குதலுக்கு பல ஆண்டுகள் ஒப்புதல் கொடுத்திருந்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), பப்லோவாத சந்தர்ப்பவாதத்தை எதிர்ப்பதற்கு 1953ல் நிறுவப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிகழ்த்திய போராட்டங்களில் இருந்து படிப்பினைகளை பெற்ற புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) 1968ல் அதன் இலங்கைப் பிரிவாக அமைக்கப்பட்டது. இதற்கு கீர்த்தி பாலசூரியா தலைமை வகித்தார். விஜே ஒரு ஸ்தாபக அங்கத்தவர். பியசீலி விரைவில் அதில் இணைந்தார்.
1967ல் பியசீலி விஜேயை திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒரு துணை விரிவுரையாளர் ஆனார். மறுஆண்டு அதேபோன்ற பதவியை விஜேயும் பெற்றுக்கொண்டார். அப்பொழுது அவர்களுடைய மகன் கீர்த்தி பிறந்தார். 1969ல் பியசீலியும் விஜேயும் பட்டப் பின்படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்றனர். ஆங்கில இலக்கியத்தில் சிறப்புப் பட்டத்தை லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் இருந்து பியசீலி பெற்றார்.
பியசீலி இங்கிலாந்தில் இருந்தபோது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவராக இருந்தார். அது 1961-63ல் பப்லோவாத முகாமுடன் கொள்கையற்ற முறையில் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) மறு ஐக்கயத்தை எதிர்த்த போராட்டத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. SLL (சோசலிச தொழிலாளர் கழகம்) இன் பிரச்சாரங்களிலும், கல்வி முகாம்களிலும் தான் பங்கு பெற்றது தன்னுடைய சர்வதேச பார்வையை வலிமைப்படுத்தியது என்று அவர் பின்னர் நினைவுகூர்ந்தார்.

கருத்துகள் இல்லை: