வெள்ளி, 10 செப்டம்பர், 2010

13 திருத்தத்துக்கு எதிராகச் TNA செயற்படுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம்.

திருப்பி அடிக்கும் எதிர்ப்புக் கணைகள
பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் கூறும் காரணங்கள் அக்கட்சிகளையே திருப்பித் தாக்குபவையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம் தனி நபருக்குச் சகல அதிகாரங்களையும் வழங்கி ஜனாதிபதியைச் சர்வாதிகாரி ஆக்குகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுகின்றனர். நிலையியற் கட்டளை தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனையை அரசியலமைப்புத் திருத்தத்துக்கான ஆட்சேபனையாகக் கருத முடியாது. அது நடைமுறை சார்ந்த ஆட்சேபனை. திருத்தத்தின் உள்ளடக்கத்தை எதிர்ப்பதற்கான காரணமாகவே தனிநபரிடம் அதிகாரங்கள் குவிவது பற்றிக் கூறுகின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்பும் இந்த வகையானதே. தமிழ் மக்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பதினெட்டாவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி தனக்குக் கீழ் எடுக்கின்றார் என்று கூட்டமைப்பினர் கூறுகின்றார்கள்.  பதின்மூன்றாவது அரசியலமைப்பின் கீழான பகிரங்க சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றையே இவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இக்குழுக்கள் தொடர்பாக மத்திக்கு ஒரு நீதியும் மாகாணங்களுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது. மேலும், பதின்மூன்றாவதுதிருத்தத்தால் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை என்று நேற்று வரைகூறியவர்கள் இன்று வேறு குரலில் பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது.
பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்குச் சில உரிமைகள் கிடைத்தன என்பதை இன்று ஏற்றுக்கொள்கின்ற கூட்டமைப்புத் தலைவர்கள் அத்திருத்தம் நடைமுறைக்கு வருவதற்குத் தடையாகச் செயற்பட்டது ஏன் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தொடர்ச்சியாக இவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு பதின்மூன்றாவது திருத்தம் வழங்கும் நன்மைகளைத் தமிழ் மக்கள் அனுபவிப்பதற்கு இடமளிக்க விரும்பாத செயலெனக் கருதலாமல்லவா. பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வுக்காக முயற்சிக்கத்தான் வேண்டும். அதற்காக, பதின்மூன்றாவது திருத்தத்துக்கு எதிராகச் செயற்படுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம்.
(தினகரன்)

கருத்துகள் இல்லை: