உலகம் முழுக்க 3000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று-வியாழக்கிழமை-எந்திரன் படம் சென்னையில் வெளியாகும் திரையரங்குகள் உள்ளிட்ட விவரங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
சத்யம் (3), தேவி (2), எஸ்கேப் சினிமாஸ் (3), ஐநாக்ஸ் (2), அபிராமி (4), சங்கம் (2), ஆல்பட் (2), உதயம் (3), கமலா (2), பிவிஆர் (5), ஐட்ரீம், மகாராணி ஆகிய திரையரங்குகளில் எந்திரன் வெளியாகி்றது. இவை அனைத்தும் சென்னை நகர எல்லைக்குட்பட்ட திரையரங்குகள்.
காசி, பிருந்தா, தியாகராஜா, தேவி கருமாரி, மாயாஜால், பிரார்த்தனா, ராக்கி போன்ற திரையரங்குகள் சென்னை நகர எல்லைக்குள் வராதவை. புறநகர்ப் பகுதியில் மட்டும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரனைக் காணலாம். 10 ஸ்கிரீன்கள் கொண்ட மாயாஜாலில் நாளொன்றுக்கு 60 காட்சிகளுக்கும் மேல் எந்திரன் திரையிடப்படுகிறது.
நாளை மறுதினம் (செப் 11) படத்தின் அதிரடியான முன்னோட்டக் காட்சிகள் வெளியிடப்படுகிறது. இதனை சத்யம் திரையரங்கில் வைத்து ஒரு தனி விழாவாகவே நடத்துகிறார்கள். அதே நேரம் அம்பத்தூர் ராக்கி, கேகே நகர் காசி திரையரங்குகளிலும் ட்ரைலர் வெளியாகிறது.
அனைத்து ஏரியாக்களும் 'ஹாட் சேல்ஸ்'!
இதற்கிடையே, எந்திரன் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவுக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. இன்னும் ஓரிரு நாள் பணிகள் மட்டுமே மிச்சம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் அனைத்து ஏரியாக்களும் படு பரபரப்பாக விற்றுத் தீர்ந்துள்ளன. இன்றைய நிலையில் எந்திரன் விற்பனை மட்டுமே பல நூறு கோடிகளைத் தாண்டியுள்ளது. அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளிவரும்போது, இந்தியத் திரையுலகமே பிரமித்துப் போகும் என்கிறார் எந்திரன் யூனிட்டைச் சேர்ந்த முக்கிய டெக்னீஷியன் ஒருவர்.
இந்தியாவின் அவதார்!
படம் வெளியாகும் முன்பே எந்திரனுக்கு இந்திய திரையுலகில் கிடைத்திருக்கும் முக்கியத்துவம், சர்வதேச அளவிலான வெளியீடு, ஆடியோ விற்பனை சாதனை போன்றவற்றை மையமாக வைத்து, 'இந்தியாவின் அவதார்' என வர்ணித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது பிரபல டிவி சேனல். அதில் எந்திரன் மூலம் ரூ 1600 கோடிக்கும் மேல் வசூல் குவியும் என புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளனர்.
"இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு படத்துக்கு இத்தனை எதிர்ப்பார்ப்பும், விற்பனையும் அமைகிறதென்றால் அதற்கு ஷங்கர் யூனிட்டின் கூட்டு முயற்சியும் ஒரு காரணம் என்றாலும், ரஜினி என்ற ஒற்றை மனிதரால் மட்டுமே இது சாத்தியமாகிறது. இந்திய சினிமா சரித்திரம் காணாத சாதனை இது" என்று அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக