வியாழன், 9 செப்டம்பர், 2010

158 பேரை பலி ,தூக்க கலக்கத்திலேயே விமானத்தை இயக்கியுள்ளார்

டெல்லி: மங்களூரில் விபத்துக்குள்ளாகி 158 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை செலுத்திய விமானி லேட்கோ குளூசிகா நல்ல தூக்கத்தில் இருந்ததன் காரணமாகவே ரன்வேயை தவற விட்டு விட்டு, அவசர கோலத்தில் நிலைமையை சமாளிக்க முயன்று விபத்துக்குள்ளானதாக விசாரணை அறிக்கை கூறியுள்ளது.

கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாகி விட்டது மங்களூர் விமான நிலையத்தில் நடந்த அந்த கோர விபத்து நடந்து. இந்த நிலையில் தற்போது இதுகுறித்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.

முற்றிலும் விமானி குளூசிகா செய்த தவறுகளால்தான் விபத்து நேரிட்டதாக தெரிய வந்துள்ளது இந்த அறிக்கை மூலம்.

10,000 மணி நேரத்திற்கும் மேல் பறந்த அனுபவம் கொண்ட குளூசிகா பல தவறுகளை செய்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்திற்கு, விமான நிலைய கட்டுப்பாட்டுஅறையிலிருந்து வந்த பல்வேறு எச்சரிக்கைகளை அவர் செவிமடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தின்போது எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் சரிவர செய்யவில்லை, துணை விமானியின் அறிவுரைகளையும் அவர் கேட்கவில்லையாம். அனைத்தும் சேர்ந்து விமானத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டது.

கருப்புப் பெட்டி எனப்படும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கருவியில் பதிவாகியுள்ள தகவல்களைக் கொண்டு இந்த முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ள முக்கியத் தகவல்கள்...

1. விமானம் துபாயிலிருந்து கிளம்பியதும் தூங்க ஆரம்பித்துள்ளார் குளூசிகா. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களுக்கு அவர் தூங்கியுள்ளார். பலத்த குறட்டை சப்தமும், பலத்த மூச்சு விடும் சப்தமும் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது. அவரிடமிருந்து எந்த சப்தமும் வரவில்லை. நீண்ட தூர பயணத்தின்போது விமானி தூங்குவதும், துணை விமானிகள் விமானத்தை செலுத்துவதும் வழக்கமானதுதான். ஆனால் குளூசிகா மிக நீண்ட நேரம் தூங்கியுள்ளார். தரையிறங்க சிறிது நேரம் இருக்கும்போது தான் முழித்துள்ளார். இதனால் தூக்க கலக்கத்திலேயே விமானத்தை இயக்கியுள்ளார்.

2. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போதுதான் விழித்த குளூசிகா தொடர்ந்து அடுத்தடுத்து தவறுகளை செய்துள்ளார். ரன்வேயில் இறக்க வேண்டிய இடத்தை விட்டு அவர் தாண்டி வந்து விட்டார். இதுகுறித்து துணை விமானி அலுவாலியா, குளூசிகாவை எச்சரித்துள்ளார்.

3. பாதி ரன்வேயில் விமானம் இறங்கியதை உணர்ந்த விமானி உடனடியாக அதை கிளப்ப முயன்றுள்ளார். மீண்டும் வானில் ஒரு சுற்று வந்துவிட்டு இறங்கலாம் என அவர் முடிவு செய்திருக்கலாம். ஆனால் அதற்குள் மேல் போக ரன்வே இல்லாததால் விமானம் லோக்கலைசரில் தட்டி மலைப்பகுதியி்ல் போய் விழுந்து நொறுங்கி விட்டது.

4. விமானி அலுவாலியா ஆபத்தை உணர்ந்து, இனிமேலும் விமானத்தை டேக் ஆப் செய்ய நமக்கு போதிய ரன்வே இல்லை என்று கூறியதும் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது.

அறிக்கை குறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: