வெள்ளி, 10 செப்டம்பர், 2010

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை

தற்போது நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.
இச்சட்டம் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறைப்படி மூன்றிலொரு பங்கும், ஏற்கனவே நடைமுறையிலிருந்த வட்டார முறைப்படி மூன்றிலிரண்டு பங்கும் என்ற வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடாத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் புதிதாக மேற்கொள்ளப்படவி ருக்கும் திருத்தத்திற்கு அமையவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட் டார்.
அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான யோசனையை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார்.
அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கேற்ப இந்த யோசனை சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கென நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் தற்போதைய தேர்தல் முறையை ஏற்கனவே நடைமுறையிலிருந்த வட்டார முறைப்படி மூன்றிலிரண்டு பங்கும், தற்போதைய விகிதாசார முறைப்படி மூன்றிலொரு பங்கும் என்றபடி உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரி வித்துள்ளன.
இத்திருத்தத்திற்கு அமைவாக பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள் என்பவற்றின் தேர்தல்கள் நடாத்தப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: