வியாழன், 2 ஜூலை, 2020

சென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சிறுமி, அயனாவரம் சிறுமி, தேனி சிறுமி ராகவி, சிவகாசி பிரித்திகா, சேலம் பூங்கொடி,... சிறுமிகள் மீது பாலியல் பயங்கரவாதம்

புதுக்கோட்டையில் 7வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்! மின்னம்பலம் : தமிழகத்தில் பெண்களுக்குக் குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சிறுமி, அயனாவரம் சிறுமி, தேனி சிறுமி ராகவி, சிவகாசி பிரித்திகா, சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த பூங்கொடி, திருச்சி, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி என தமிழகத்தில் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்படுவது என்பது தொடர்கதை என்பதையும் தாண்டி சாதாரணமாகிவிட்டது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்து கொலை செய்தால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு போக்சோ சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த போதும் இதுபோன்று சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஜெயப்பிரியாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் ஏம்பல் காவல் நிலையத்தில் 30ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள கருவேல மரங்கள் சூழ்ந்த பகுதியில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமியின் உடல் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆடைகள் கலைந்து ரத்த காயங்களுடன் சிறுமி இறந்து கிடந்துள்ளார். சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்.பி அருண் சக்திகுமார் இச்சம்பவம் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் ஏம்பல் பகுதியைச் சேர்ந்த, ராஜேஷ் என்பவரைச் சிறுமி கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று ராஜேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சிறுமியை வன்கொடுமை செய்து அடித்துக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குற்றச்செயலில் மேலும் சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதனால் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்று வந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இது புதுக்கோட்டை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் #JusticeforJayapriya என்ற ஹேஷ்டேக்கில் பல்வேறு தரப்பினம் பாதிக்கப்பட்ட சிறுமிக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குச் சீர்கேடும் படுவேகமாகப் பரவி வருவது கவலையடையச் செய்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான், இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்குள்ளானது தாமதமாக வெளியே தெரிய வந்தது. இப்போது மீண்டும் ஒரு சிறுமி!
இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
பெண்கள் - சிறுமிகள் - பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டிட வேண்டும்; இத்தகைய கொடூரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: