திங்கள், 29 ஜூன், 2020

காவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத்து குவிப்பு , அதிகார துஸ்பிரயோகம் ஊரடங்கில் டாஸ்மார்க் ..போன்றவையும்

சிவசங்கர் எஸ்எஸ் : சாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான். பானை முழுதும் இதே நிலை தான். இதை ஒரு சாதாரண லாக்கப் டெத் ஆக கடந்து விட வேண்டாம்.
எப்படி துணை ஆய்வாளருக்கு இவ்வளவு தைரியம் வந்தது. எப்படி இன்னொரு துணை ஆய்வாளரும் அதே கொடூர மனதோடு இருந்தார். எப்படி இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல் நிலைய ஆய்வாளர் துணை நின்றார். எப்படி அரசு ஊழியர் அல்லாத காவல் நண்பர்கள் அடியாளாக பணியாற்றினார்கள். கேள்விகள் இத்தோடு நிற்கவில்லை.
எப்படி துணை ஆய்வாளர் மீது வந்த பல புகார்களை விசாரிக்காமல் காப்பாற்றினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்?
எப்படி காயத்தோடு வந்த கைதிகளை மருத்துவமனையில் அனுமதிக்காமல் அனுப்பினார் மருத்துவர். எப்படி கைதிகளை நேரில் பார்க்காமல் காவலில் வைக்க அனுமதித்தார் நீதிபதி. எப்படி ரத்தம் சொட்ட, சொட்ட வந்த கைதிகளை சிறையில் அடைக்க ஒப்புக் கொண்டார் சிறைக்காவலர்.
அத்தனைக்கும் ஒரே காரணம், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தான். கீழே நடக்கின்ற அத்தனைக்கும் எப்படி ஒரு முதல்வர் பொறுப்பாவார் என்று கேட்கலாம். முதல்வர் தான் பொறுப்பு.
நடைபெறுகிற எடப்பாடி ஆட்சியில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். யாரும், யாரையும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை. அதனால், அரசில் அதிகாரம் செலுத்தும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும், அரசாங்கத்தில் பணியாற்றும் "மனசாட்சி இல்லாத" ஒவ்வொரு அதிகாரியும் ஒரு 'குட்டி முதல்வராக' செயல்படுகிறார்கள். அவர்கள் பகுதியில், அவர்கள் வைத்தது தான் சட்டம், அவர்கள் நினைத்தது தான் நடக்கும். இது இன்றைய தமிழகத்தில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.

கோயம்புத்தூருக்கு முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான். அந்த மாவட்டத்தில் அவரது மனதுக்கு பிடித்தவர்கள் தான் அதிகாரிகளாக இருக்க முடியும். அதனால் அவரது ஊழல்களை பேசுபவர்கள் மீது, எதிராக செயல்படுபவர்கள் மீது வழக்கு பாய்கிறது. கொரோனா காலத்தில் கூட தி.மு.க மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் அப்படி தான் கைது செய்யப்பட்டார் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.கவினர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கூட சேலத்தில் அவ்வளவு அதிகாரம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான். அப்படி தனக்கு உடன்படுகிற அதிகாரிகளை, அவர்கள் இஷ்டத்திற்கு ஆடுவதற்கு அனுமதிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
காவல்துறை மட்டுமல்ல, அனைத்து துறை அதிகாரிகளும் இப்படி தான். இரண்டு நாட்களுக்கு முன், தமிழக அரசின் ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான 'பாரத் நெட் டெண்டர்' மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. அந்த டெண்டருக்கான நிபந்தனைகளை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன் வசதிக்கு தக்க மாற்றியமைத்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன் இந்த டெண்டர் நிபந்தனைகளை மாற்றியமைக்க ஒப்புக்கொள்ளாத அய்.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மாற்றப்பட்டார். மனசாட்சி உள்ள அதிகாரி ஒருவர் 'விருப்ப பணி ஓய்வு' கோரினார். இப்போது மனசாட்சியை விற்ற அதிகாரிகள் ஒப்புக் கொண்டு டெண்டரை அனுமதித்தார்கள். 10% கமிஷனில் அவர்களுக்கும் பங்கு உண்டு. தவறுக்கு ஒப்புக் கொள்ளும் அதிகாரிக்கு, துறையில் தன் போக்கில் செயல்பட அனுமதிக்கப்படுவார்.
இந்த ஆட்சி நடைபெற ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அவசியம் என்ற நிலை. அதனால், "கூவத்தூர் ஒப்பந்தப்படி" அவரவர் தம் தொகுதிக்கு முதலமைச்சர் ஆக செயல்படுகின்றனர். தன் வார்த்தைகளை கேட்பவர்களை மாத்திரமே பணி மாற்றம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். போடாத ரோடுக்கும், வெட்டாத ஏரிக்கும் பில் போட்டு தருபவர்கள் தான் கலெக்டராக நீடிக்க முடியும். திருட்டு மணலுக்கு 'பந்தோபஸ்து' கொடுப்பவர் தான் காவல்துறை அதிகாரியாக இருக்க முடியும்.
இந்த தவறுக்கு துணை நிற்பதற்கு அந்த அதிகாரிகளுக்கு சன்மானமும் உண்டு. அந்த அதிகாரி தன் விருப்பம் போல் செயல்பட அனுமதியும் உண்டு, இல்லை என்றால் அவர்களே எடுத்துக் கொள்வார்கள்.
இதற்கு முன் எந்த தமிழக முதலமைச்சரின் ஆட்சியிலும் இல்லாத "சுதந்திரம்" இது. இருக்கும் காலத்திற்குள், எவ்வளவு சுருட்ட முடியும் என்பது ஒன்று தான் நோக்கமாக இருக்கிறது. அதற்கு துணை நிற்போர் அத்தனை பேரும் அதிகாரம் பெற்று நிற்கிறார்கள். அந்த அதிகாரத்தை யார் மேல் பாய்ச்சவும் துணிகிறார்கள்.   அப்படி துணிந்தவர்கள் தான் அந்த சாத்தான்குளம் காவல் நிலைய துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர். அவர்கள் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்புக்கு துணை போயிருப்பார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தவறுக்கு இவர்கள் மூவரும் துணை போயிருப்பார்கள். இவர்கள் மொத்தமாக அ.தி.மு.க அமைச்சரின் மணல் திருட்டு, ஊரடங்கு நேரத்தில் நடந்த டாஸ்மாக் திருட்டு விற்பனை, சொத்து குவிப்பு, மற்ற பிற அதிகார துஷ்பிரயோகங்களுக்கு துணை போயிருப்பார்கள். அதனால் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு, ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு என்ற உறவோடு இருந்திருப்பார்கள்.
அதனால் தான் இதை ''லாக் அப் கொலை" இல்லை என வெட்கம் இல்லாமல் சொல்கிறார் மந்திரி கடம்பூர் ராஜு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு ஊர்வலம் வந்த போராட்டக்கார்களை குருவி சுடுவது போல் சுட்டுக் கொன்ற கொலைகாரர்களை இன்றைக்கும் காத்து வருகிறவர் தானே முதலமைச்சர் பழனிச்சாமி.
அந்த தைரியம் தான் இந்த "வக்கிர கொலை" செய்ய இவர்களுக்கு தைரியம் கொடுத்துள்ளது.
ஒரு புள்ளி வரை எல்லாம் நினைத்தது போலவே நடக்கும். சறுக்கும் போது அத்தனை தவறுகளும் வெளி வரும்.
மரணித்தாலும், கயவர்களை நாட்டுக்கு அடையாளம் காட்டி விட்டார்கள் ஜெயராஜும், பெணிக்ஸும். தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த "லாக்கப் கொலைகள்" வெளி வர ஆரம்பித்துள்ளன. நெல்லை மாவட்ட செய்தியும் வெளி வந்துள்ளது. இன்னும் ஒவ்வொன்றாக வெளி வரும்.
எடப்பாடி கும்பலின் கூட்டுக் களவாணித்தனங்கள் அம்பலமாகும். மக்கள் விரோத நடவடிக்கைகள் வெளிவரும். எதிர்காலத்தில் இது அத்தனைக்கும் பதில் சொல்லும் காலம் வரும்.
# ஆடித் தீருங்கள். சிறை செல்ல தயாராகுங்கள் !
-எஸ்.எஸ்.சிவசங்கர்.

கருத்துகள் இல்லை: