ஞாயிறு, 28 ஜூன், 2020

போலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை "Justice For Jeyaraj And Fenix"

  மின்னம்பலம்:  போலீஸ் ஹீரோக்கள்: ஹரி வேதனை!
காவல்துறையைப் பெருமைப்படுத்தி 5 படங்கள்
எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்ஸிற்கு நீதி கிடைக்க வேண்டும் என டிவிட்டரில் "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் கடந்த சில நாட்களாக டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில், காவல்துறையினரை கதாநாயகனாக வைத்து அதிக படங்கள் எடுத்த இயக்குநராக அறியப்படும் ஹரி, இன்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்தத் துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன்<" என அந்த அறிக்கையில் இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையினரை கதாநாயகனாக கொண்டாடிய பல தமிழ்ப்படங்கள் மீது மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை தெரிவித்த வண்ணமிருந்தனர். இந்தச் சூழலில் சாமி, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, சாமி ஸ்கொயர் எனக் காவல்துறையை மையமாக வைத்து 5 படங்கள் இயக்கிய இயக்குநர் ஹரியின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது அதிகமாகப் பகிரப்பட்டும் வருகிறது.
-முகேஷ் சுப்ரமணியம்

கருத்துகள் இல்லை: