ஞாயிறு, 28 ஜூன், 2020

சாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம்


sathankulam-incident-affair-dispute-face-book-issue-record-a-r-constable-suspend

மலைமலர் : சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை, சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கருத்தை பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதால் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்துவை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதால் ஆணையர் விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தனது முகநூல் முகவரி, பாஸ்வேர்டை கொடுத்து நண்பர்கள் மூலம் கருத்து பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது



.hindutamil.in/ :தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எதிர்ப்பைக் காட்ட வணிகர்கள் கடையடைப்பை நடத்தினர். ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசம் முழுவதும் பிரபலங்கள் இதை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை ஆயுதப்படை காவலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் டேய் தம்பிகளா வாங்க, அடுத்த லாக்கெப் டெத்துக்கு ஆள் கிடைக்கலைன்னு பார்த்தோம், ஆள் கிடைச்சிருச்சு என போட்டு மிக அவதூறாக பதிவிட்டிருந்தார். எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக அவரது பதிவு இருந்தது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இதையடுத்து ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்துவை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே தான் பதிவிடவில்லை என்றும், சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக தனது முகநூலை யாரோ தவறாக பதிவிட்டுள்ளார்கள். ஆகவே எல்லோரும் என்னை உங்கள் சகோதரனாக நினைத்து மன்னிக்கவேண்டும் என சதீஷ் முத்து கோரியுள்ளார்

கருத்துகள் இல்லை: