செவ்வாய், 30 ஜூன், 2020

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே மிரட்டிய சாத்தான்குளம் போலீஸ்!


 “உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே  மிரட்டிய சாத்தான்குளம் போலீஸ்!

  மின்னம்பலம் : சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்ற சித்திரவதையால் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பரிதாபமாக ஜூன் 22 ஆம் தேதி உயிரிழந்தனர். இந்த விவகாரம் பற்றி மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. இதன் அடிப்படையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசனையும், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமாவையும் விசாரணை நடத்த நியமித்தது.
விசாரணையின் ஒரு பகுதியாக நீதிபதி பாரதிதாசன் ஜூன் 28 ஆம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணையைத் தொடங்கினார். அடுத்த நாள் அதிகாலை வரை விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை நேற்று (ஜூன் 29) மதுரை உயர் நீதிமன்றத்தில் இ மெயில் மூலம் சமர்ப்பித்தார் கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன்.

இதன் அடிப்படையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் நேற்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தனர்.அதில், “மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கையைப் படிக்கிறபோது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மாஜிஸ்திரேட்டின் விசாரணையைத் தடுப்பதற்காக தங்கள் அதிகாரத்தை எல்லா வகையிலும் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.
இதன்படி தூத்துக்குடி ஏ.எஸ்.பி.யான டி.குமார், டி.எஸ்.பி.யான பார்த்திபன் ஆகியோர் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையின்போது ஆஜராகியிருந்தனர். அவர்களின் உத்தரவுப்படியே காவலர்கள் மாஜிஸ்திரேட் விசாரணையை வீடியோ படம் பிடித்துள்ளனர்.
விசாரணை நீதிபதி கேட்ட பதிவுகளையும், விவரங்களையும் சாத்தான்குளம் போலீஸார் தர மறுத்திருக்கிறார்கள். நீதிபதியின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கும் மகாராஜன் என்பவர் மாஜிஸ்திரேட்டை பார்த்து, ‘உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா’ என்று மரியாதைக் குறைவான மலிவான வார்த்தைகளில் மிரட்டியிருக்கிறார்.
 இந்த அறிக்கையின்படி ஏஎஸ்பி டி.குமார், டி.எஸ்பி. பார்த்திபன், காவலர் மகாராஜன் ஆகியோர் கிரிமினல் அவமதிப்பு குற்றத்தை செய்திருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகிறது. இவர்கள் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுகிறோம்
சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகளையும், போலீஸாரையும் உடனடியாக மாற்றாவிட்டால் வெளிப்படையான நேர்மையான விசாரணை நடப்பது கடினம். மாஜிஸ்திரேட்டை மிரட்டிய வகையில் ஏ.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பார்த்திபன், காவலர் மகாராஜன் ஆகியோரை ஜூன் 30 காலை 10.30க்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடுகிறோம்” என்று அந்த ஆணையில் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து ஏஎஸ்பி டி.குமார், டி.எஸ்பி. பார்த்திபன் ஆகியோர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் கொடூரத்தை மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரிக்க வந்த நீதிபதியையே, ‘உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா’ என்று சாத்தான்குளம் போலீஸார் மிரட்டியது போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 10.30க்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: