திங்கள், 30 செப்டம்பர், 2019

காஷ்மீரில் திடீர் வட்டார தேர்தல்... இம்ரான் கான் . Effect in UN?


காஷ்மீரில் திடீர் தேர்தல்!மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தடைச் சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வட்டார வளர்ச்சி கவுன்சில்களுக்கான தேர்தல் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அலுவலர் சைலேந்திர குமார் நேற்று (செப்டம்பர் 29) இதை அறிவித்துள்ளார்.
பஞ்சாயத்துகளும் துணை பஞ்சாயத்துகளும் இணைந்து வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அதன்பிறகு வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர்கள் இணைந்து மாவட்ட வளர்ச்சி ஆணையத்தை அமைப்பார்கள். இவர்கள் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துவார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி இந்தத் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மொத்தமுள்ள 316 வட்டாரங்களில் 310 வட்டாரங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 172 இடங்கள் பட்டியல் வகுப்பினருக்கு, பழங்குடியினருக்கு மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள வட்டாரங்களில் 168 காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018 அக்டோபர் மாதம் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் 23,629 பஞ்சாயத்துகளுக்கும் 3,552 துணை பஞ்சாயத்துகளுக்குமான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள்தான் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
ஆனாலும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 60 சதவிகித பஞ்சாயத்து வார்டுகள் காலியாகவே இருக்கின்றன. 18,833 பஞ்சாயத்து வார்டுகளில் 7,596 வார்டுகளுக்கு மட்டுமே உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இதேபோல சர்பஞ்ச் எனப்படும் 2,375 துணை பஞ்சாயத்து வார்டுகளில் 1,558 உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான பஞ்சாயத்து உறுப்பினர் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலை எப்படி நடத்த முடியும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்குக் காலியிடங்களுக்குப் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் நாம் புதிய வாக்காளர்கள் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று பதிலளித்தார் தேர்தல் அலுவலர்.
காஷ்மீர் விவகாரம் பற்றி ஐ.நா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றிய அடுத்த நாளே வட்டார வளர்ச்சி கவுன்சில்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

கருத்துகள் இல்லை: