சனி, 5 அக்டோபர், 2019

திமுகவுக்கு எதிராக பாஜக எம்பி சசிகலா புஷ்பா முறையீடு!

திமுகவுக்கு எதிராக சசிகலா புஷ்பா புகார்!மின்னம்பலம் : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுத்த விவகாரம் அடுத்த கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு திமுக தேர்தல் நிதியாக 25 கோடி ரூபாய் கொடுத்ததாக அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த கணக்கு வழக்கு அறிக்கையை மேற்கோள் காட்டி கடந்த மாத இறுதியில் செய்திகள் வெளிவந்தன. இந்த விவகாரத்தில் அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் திமுகவிடம் விளக்கம் கேட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், ‘இதுபற்றி உரியவர்களிடம் விளக்கம் சொல்லிவிட்டோம். மற்றவர்களிடம் சொல்ல அவசியம் இல்லை’ என்று பதிலளித்தார்.
இந்நிலையில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் டிஜிட்டல் திண்ணை பகுதியில், தேர்தல் நிதி: ஸ்டாலினை வளைக்கும் டெல்லி தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில் , “இந்த விவகாரத்தில் பாஜக இதுவரை ஒரு மௌனப் பார்வையாளராகவே இருந்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் பல்வேறு புகார்களை தயாரித்துவைத்திருக்கும் பாஜக, அது சம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கும் நோக்கில், அரசியல் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமர்சனங்கள் வரும் என்று கருதுகிறது.

 அதேநேரம், தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்திருக்கும் இந்தக் கணக்கு வழக்கு அறிக்கை மீது விசாரணை நடத்தினால் திமுகவுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடும் பல விஷயங்கள் அதில் வெளிவரும் என்று பாஜகவின் டெல்லி தலைமைக்குத் தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதையடுத்து பாஜக சார்பில் இல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக ஆதரவு எம்.பி.யாக தற்போது செயல்பட்டுவரும் சசிகலா புஷ்பா மூலம் விவகாரத்தைக் கையில் எடுப்பது என முடிவெடுத்துள்ளது மத்திய அரசு. விரைவில் தேர்தல் ஆணையத்திடம் உள்துறை அமைச்சகத்திடம் இதுபற்றி சசிகலா புஷ்பா புகார் அளிப்பார் என்றும் அதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கும் அவர் செல்வார் என்றும் டெல்லி வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன” என்று தெரிவித்திருந்தோம்.
மின்னம்பலம் வெளியிட்ட செய்தியின்படியே இன்று (அக்டோபர் 5 ) ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் 5 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை அளித்திருக்கிறார்.
அம்மனுவில் சசிகலா புஷ்பா, “ஜனநாயகத்தை காக்க கூடிய தேர்தல் ஆணையத்தின் மாண்பையும், மதிப்பையும் குறைக்கச் செய்யும் வகையில் பல கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அவை தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை குறைக்கு வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயல்படுகின்றன.
இந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாநிலக் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக 25 கோடி ரூபாய் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களின் வாயிலாக செய்திகள் வந்திருக்கின்றன.
எந்த அடிப்படையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் கொடுத்தது?
இந்த 25 கோடி ரூபாய்க்கான ஆதாரம், அதாவது வந்த வழி என்ன என்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் கொடுத்திருக்கிறார்களா?
திமுகவால் உதவி பெற்ற கட்சிகளும் இந்த நிதிபற்றி தங்களது தேர்தல் வரவு செலவு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்களா?
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி என்ற ஒரு கட்சி நாமக்கல் என்ற ஒரே தொகுதியில்தான் போட்டியிட்டது. தேர்தல் செலவுக்காக பணம் கொடுத்ததாக சொல்லும் திமுக, ஒரு தொகுதியில் போட்டியிட்ட கட்சிக்கு 15 கோடி ரூபாய் தேர்தல் நிதி கொடுத்துவிட்டு, அதைவிட அதிகமான தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஏன் குறைந்த நிதியை திமுக கொடுத்தது? இது சந்தேகத்தை வரவழைப்பதாக உள்ளது.
இந்த நிதி தேச விரோத சக்திகளிடம் இருந்து, தீவிரவாத சக்திகளிடம் இருந்து கிடைத்ததா என்ற சந்தேகம் வருகிறது. தேசத்தின் பாதுகாக்கும் நிலைப்புத் தன்மைக்கும் இதனால் அச்சுறுத்தல் வரக் கூடும். எனவே இந்த விவகாரத்தை சிபிஐ போன்ற உயர் விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும்.
இதுபற்றி திமுகவிடம்விளக்கம் கேட்க வேண்டும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தில் தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகத்துமிடமின்றி திருப்தி இல்லையென்றால், திமுக தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்” என்று தன் புகாரில் கூறியிருக்கிறார் சசிகலா புஷ்பா.

கருத்துகள் இல்லை: