சனி, 5 அக்டோபர், 2019

18 தொகுதிகளில் திமுகவின் வெற்றியை திருடிய அதிமுக + பாஜக + தேர்தல் ஆணைய கூட்டணி

டிஜிட்டல் திண்ணை: திமுக தவறவிட்ட ராதாபுரங்கள்!மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் யார் எம்எல்ஏ என்பதை நிர்ணயிக்கும் மறு வாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக நேற்று நடந்து முடிந்திருக்கிறது. முடிவை உச்சநீதிமன்றம் வெளியிடத் தடை விதித்திருக்கும் நிலையில் திமுக வழக்கறிஞர்கள் மத்தியில் நம்பிக்கை தென்பட்ட அதேவேளை இப்படிப் பல ராதாபுரங்களை நாம் தவறவிட்டுவிட்டோம் என்ற குமுறல் ஒலியும் நேற்று நீதிமன்ற வளாகத்திலேயே கேட்டது.
இதுபற்றி விசாரித்தபோது அவர்களைவிட கூடுதல் சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக 500 வாக்குகள் குறைவாக ஐந்து தொகுதிகளிலும், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான்கு தொகுதிகளிலும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வாக்குகள் இடைவெளியில் நான்கு தொகுதிகளிலும் 2000 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆக 18 தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு அப்போது கடைசி நேரத்தில் சூறையாடப்பட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.

சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போதே இப்போதைய பிரதமர் மோடி தமிழகத்தில் முதல்வராக இருந்து தேர்தலைச் சந்தித்த ஜெயலிதாவுக்கு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வாழ்த்துக்கள் என்பது தனிப்பட்ட மோடி தனிப்பட்ட ஜெயலிதாவுக்கு தெரிவித்த வாழ்த்தாக கருதப்பட்டாலும் வாழ்த்து தெரிவித்த நிமிடத்திற்கு பிறகான வாக்கு எண்ணிக்கை நிலவரம் முற்றிலும் மாறிவிட்டதாக அப்போதைய எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.
பிரதமரிடம் இருந்து முதல்வருக்கு வாழ்த்து வந்ததும் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் கடைசிகட்ட வாக்கு எண்ணிக்கையில் கடுமையான முறைகேடுகள் நடந்ததாகவும் இதன் பிறகே பல்வேறு தொகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுகவினரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஒருமித்த முடிவுக்கு வந்து அதிமுக வெற்றி பெற்றதாக பல இடங்களில் அறிவிக்கப்பட்டது என திமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த வாக்கு எண்ணிக்கையின் கடைசிகட்ட நிலவரத்தை திமுக வழக்கறிஞர்கள் குழு ஒவ்வொரு தொகுதியிலும் கண்காணித்து பல்வேறு ஆதாரங்களை திரட்டி திமுக தலைமை கழகத்திடம் அளித்தனர்.
இதன்படி மொத்தம் 18 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவிடம் தோற்காமல் தேர்தல் ஆணையத்திடம் தோற்றதாக திமுகவின் வழக்கறிஞர்கள் கட்சித் தலைமையிடம் கட்டுக் கட்டான ஆதாரங்களை அளித்தனர். தேர்தல் வழக்கு என்பது தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் தொடரப்பட வேண்டும். அந்த வகையில் மேற்கண்ட 18 தொகுதிகளிலும் அந்தந்த திமுக வேட்பாளர்கள் மூலமாக தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவையெல்லாம் இப்போது ராதாபுரம் போல ஒரு முடிவை நோக்கி வந்திருக்கும்.அதுவே ஆட்சி மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணியாக அமைந்திருக்கும்.
இந்த 18 தொகுதிகள் மட்டுமல்ல திமுக வேட்பாளர்கள் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே மொத்தம் 31 தேர்தல் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தொடுத்து அவற்றை உரிய காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆணைப் பெற்று வழக்குகளை நடத்த வேண்டும் என்ன 2016 சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரக் களத்தை நன்கு உணர்ந்த திமுக வழக்கறிஞர்கள் அப்போதைய தலைவர் கலைஞரிடம் கொண்டு சென்றனர்.
அறிவிக்கப்பட்ட தேர்தல் தோல்வி மற்றும் கலைஞரின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை காரணமாக அந்த நேரத்தில் இதுபற்றி தலைமை உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்ட நிலையில் ராதாபுரம் வேட்பாளர் அப்பாவு தொடுத்த வழக்கு மட்டும் இன்று வளர்ந்து இந்தியாவிலேயே மறு வாக்கு எண்ணிக்கை தீர்ப்பை பெற்று தந்த முதல் வழக்காக மாறியிருக்கிறது.
ஒரு ராதாபுரம்தான் இன்று தலைப்புச் செய்தியாக இருக்கிறது ஆனால் திமுக சுமார் 18 க்கும் மேற்பட்ட ராதாபுரங்களைத் தவறவிட்டு விட்டது என்று நேற்று நீதிமன்ற வளாகத்திலேயே திமுக வழக்கறிஞர்கள் பகிர்ந்து கொண்டார்கள்” இந்த மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைனில் போனது வாட்ஸ்அப்

கருத்துகள் இல்லை: