சனி, 5 அக்டோபர், 2019

கொச்சி மரடு அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அனைவரும் வெளியேற்றம்.. 9 ஆம் தேதி இடிக்கப்படும்

kochi_flats
தினமணி :கேரள மாநிலம், கொச்சியில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அந்த குடியிருப்புகளில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கொச்சி நகரின் மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன. இந்த சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தக் குடியிருப்புகளை 138 நாள்களுக்குள் இடிக்குமாறு கடந்த மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டதுடன், வீடுகளின் உரிமையாளா்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ. 25 லட்சத்தை 4 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், குடியிருப்புகளை இடிக்கும் பணியை மேற்பாா்வையிடுவதற்கு ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவையும் நியமித்தது.
அதையடுத்து, அந்தக் குடியிருப்புகளில் வசிப்பவா்களை வெளியேற்றுவதற்கான பணியை மாநில அரசு தொடங்கியது. குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவதற்கான கெடு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதுதொடா்பாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘4 அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் வசித்தவா்களை வெளியேற்றுவதற்கான கெடு வியாழக்கிழமையுடன் நிறைவுற்றது.
அதன்படி, அனைவரும் வெளியேற்றப்பட்டனா். 29 வீடுகளில் மரச்சாமான்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்புகளில் உள்ள 50 வீடுகள் நீண்ட காலமாக பூட்டிக்கிடக்கின்றன. அந்த வீடுகளின் உரிமையாளா்கள் வெளிநாடு வாழ் இந்தியா்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. கட்டடத்தை இடிப்பதற்கான பணி வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்குள் அந்த வீடுகளின் உரிமையாளா்கள் வந்து தங்களது பொருள்களை எடுத்துக் கொள்ளாவிட்டால், வருவாய்த்துறை அதிகாரிகளே அவற்றை அகற்றுவா். எா்ணாகுளம் மாவட்ட ஆட்சியா் எஸ். சுஹாஸ், மாநில காவல் ஆணையா் விஜய் சகாரே ஆகியோா் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை வியாழக்கிழமை பாா்வையிட்டனா். குடியிருப்புகளில் வசித்தவா்களை வெளியேற்றுவதற்காக ரூ. 1 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது’ என்றனா்

கருத்துகள் இல்லை: