செவ்வாய், 1 அக்டோபர், 2019

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவு... திமுக அப்பாவு எம் எல் ஏவாகிறார்...


நீதி, நியாயம் ஒருபோதும் தோற்காது...!'- மறுவாக்கு எண்ணிக்கை தீர்ப்பு குறித்து அப்பாவு 
விகடன் :   நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் அத்தாட்சி பெற்ற ஓட்டுகள் செல்லாது என்றும் தேர்தல் அலுவலர்கள் கூறியதாகத் தகவல் வெளியாகின. 2016 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டார் அப்பாவு. அ.தி.மு.க வேட்பாளராக இன்பதுரை உட்பட மொத்தம் 15 பேர் அங்கு போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர், மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி என அறிவித்தபோது, தபால் ஓட்டுகளில் பல ஓட்டுகளைச் செல்லாது எனத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததாகப் புகார் எழுந்தது. ஒரு சில ஓட்டுகளில் பெருக்கல் குறியும் ஒரு சில ஓட்டுகள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் அத்தாட்சி பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் அத்தாட்சி பெற்ற ஓட்டுகள் செல்லாது என்றும் தேர்தல் அலுவலர்கள் கூறியதாகத் தகவல் வெளியாகின.
இன்பதுரை
இதை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் அப்பாவு வாக்கு எண்ணும் மையத்திலேயே போராட்டம் நடத்தினார். ``தேர்தல் அலுவலர்கள் எண்ண மறுத்த வாக்குகள் செல்லத்தக்க வாக்குகள், அதற்கான அரசாணை உள்ளது. இந்த ஓட்டுகள் செல்லத்தக்கவைதான். இதன் மூலம் 151 வாக்குகளில் நான் வெற்றிபெற்றுள்ளேன்'' எனத் தேர்தல் அலுவலரிடம் வாதம் செய்தார். ஆனால், பெருக்கல் குறியுள்ள வாக்குகளை மட்டும் ஏற்க தேர்தல் ஆணையம் கூறியுள்ளதால் மற்ற வாக்குகளை ஏற்க முடியாது எனக் கூறியதுடன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அத்தாட்சி அளித்த 200 ஓட்டுகளைச் செல்லாது எனவும் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். மேலும் இன்பதுரை 69,590 வாக்குகளும் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை, அப்பாவுவை விட 49 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் போலீஸாரால் வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளிவிடப்பட்டார் அப்பாவு. இதையடுத்து, இந்த விவகாரத்தை நீதிமன்றதுக்கு எடுத்துச் சென்றார் அப்பாவு. பல கட்டமாக நடந்துவந்த இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது 203 தபால் வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் 19, 20, 21 என மூன்று சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்ததாக முறையிட, அதை விசாரித்த நீதிமன்றம் இந்த மூன்று சுற்றுகளின் வாக்கு எந்திரங்களை வரும் 4ம் தேதிக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பாக அப்பாவுவைத் தொடர்புகொண்டு பேசினோம். ``நீதி வென்றது. நல்ல தீர்ப்பு நமக்குச் சாதகமாகக் கிடைத்துள்ளது. நல்ல முடிவை அறிவித்த நீதிமன்றத்துக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். தபால் வாக்கு எண்ணும்போது 19, 20, 21 என மூன்று சுற்றுகளிலும் எங்களை வெளியே அனுப்பிவிட்டு இரண்டு மணி நேரமாக அவர்களை மட்டும் உடன் வைத்துக்கொண்டு வாக்கு எண்ணி 49 வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றிபெற்றுவிட்டதாகக் கூறினார்கள். இதுதவறான செயல். நாங்கள் இல்லாமல் வாக்குகள் எண்ணக்கூடாது. இதேபோல் 203 தபால் வாக்குகளை செல்லாது எனத் தேர்தல் அலுவலர்கள் கூறியதையும் ஏற்க மறுத்து மீண்டும் அதை எண்ணச் சொல்லியுள்ளது நீதிமன்றம். தி.மு.கவுக்கு விரோதமாகச் செய்யப்பட்ட செயல் இது. தற்போது கிடைத்துள்ள உத்தரவு மக்களின் தீர்ப்புக்குக் கிடைத்த வெற்றி. நியாயம், நீதி ஒருபோதும் தோற்காது. காலம் கடந்தாலும் நீதி வெல்லும்" என்றார் உற்சாகத்துடன். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்துக் கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ இன்பதுரை, ``உயர் நீதிமன்றத் தீர்ப்பு இறுதித் தீர்ப்பல்ல. இந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்வோம்" எனக் எனக் கூறியவர் தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி அவசர வழக்காக மனு தாக்கல் செய்துள்ளார். இதில் அப்பாவு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: