ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

லைகா Vs கருணாமூர்த்தி: நடப்பது என்ன?

லைகா Vs கருணாமூர்த்தி: நடப்பது என்ன?  மின்னம்பலம்: ஐங்கரன் கருணாமூர்த்தி நிதி மோசடி செய்ததால் லைகா நிறுவனத்துக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்பட்டது என அந்த நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
செப்டம்பர் 26ஆம் தேதி லைகா நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்த ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் கருணாமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர் பானு மீது லைகா நிறுவனம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தது. லைகா நிறுவனர் நீலகண்ட் நாராயண்பூர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
லைகாவின் புகார்
‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ கருணாமூர்த்தியும் அவரது உதவியாளர் பானுவும் இணைந்து லைகா நிறுவனத்துக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். லைகா நிறுவனத்தின் ஆலோசகராக ஐங்கரன் கருணாமூர்த்தி கடந்த 2014ஆம் ஆண்டில் இணைந்தார். அவர் ஓர் இலங்கைத் தமிழர், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். ஏற்கெனவே சினிமா தயாரிப்பில் அனுபவம் உள்ளவர் என்பதால் அவர் மீது லைகா பெருமதிப்பும் முழு நம்பிக்கையும் கொண்டிருந்தது. லைகா நிறுவனத்துக்காக கதை கேட்பது, கதையை உறுதி செய்வது, நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களை முடிவு செய்வது, அவர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது என அனைத்துப் பணிகளையும் கருணாமூர்த்தி செய்துவந்தார். அவருக்கு பானு உதவியாக இருந்தார்.

நிதி மேலாண்மை பொறுப்பு முழுவதுமாக நம்பிக்கையின் அடிப்படையில் கருணாமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடைய கையெழுத்து இருந்தால்தான் எந்த ஒரு காசோலையும் செல்லுபடியாகும். அந்த அளவுக்கு அவருக்கு லைகா நிறுவனம் அதிகாரம் கொடுத்திருந்தது.
ஆனால், கருணாமூர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே லைகாவின் நம்பிக்கையைச் சிதைத்து வருகிறார். சாட்டிலைட் உரிமைகளில் நிதி மோசடி, ஓவர்சீஸ் உரிமையில் மோசடி, ரொக்கப் பணம் கையாடல் என ஈடுபட்டு வந்துள்ளார்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 2014ஆம் ஆண்டு கத்தி படத்தைத் தயாரித்து லைகா நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன்’ உள்ளிட்ட படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்தது. ‘கத்தி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன்’ ஆகிய படங்களின் வெளிநாட்டு உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமையில் 90 கோடி ரூபாயைக் குறைத்து காட்டி ஐங்கரன் மோசடி செய்துள்ளார்.
லைகாவுக்கு தெரியாமலேயே, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் ரூ.14 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ என்ற படத்தை எடுக்கும் விஷயமே எங்களுக்குத் தெரியாது. ‘இந்தியன் 2’ படத்தின் மூலமாகவும் ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்.
'இப்படை வெல்லும்', 'தியா', 'கோலமாவு கோகிலா' ஆகிய படங்களில் நிறுவனத்தின் நன்மையைக் கருத்தில்கொள்ளாமல் பணத்தை சூறையாடியுள்ளார். மேலும் அவருக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.25 கோடி சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் பானு உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து லைகா நிறுவனம் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (செப்.28) பணமோசடி தொடர்பாக லைகா நிறுவனம் தன்மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என ஐங்கரன் கருணாமூர்த்தி பதில் அளித்துள்ளார்.
லைகா புகாருக்கு கருணாமூர்த்தியின் பதில்
‘லைகா நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வந்து படங்கள் தயாரித்து, லாபகரமாக விநியோகம் செய்ய, 32 வருடங்களுக்கு மேல் அனுபவமும், தொடர்புகளும் உடைய கருணாமூர்த்தி என்ற நான் தேவைப்பட்டது. நட்பின் அடிப்படையில் எனது 'ஐங்கரன்' நிறுவனத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளையும் நிறுத்திவிட்டு 'லைகா'வுக்குத் தோள் கொடுத்து முன்னணி திரைப்பட நிறுவனமாகக் கொண்டுவர முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறேன்.
'லைகா' என்ற நிறுவனத்தின் எல்லா வகையான பணப் பரிவர்த்தனைகளும் 'டி.எல்.எஃப்' என்ற கட்டடத்தில் இயங்கும் திரு.சுபாஷ்கரனின் இன்னொரு அலுவலகத்திற்குச் சென்று, அங்கிருந்து, லண்டன் அலுவலகத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே அனைத்து செக், டிராஃப்ட் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளும் நடைபெற்றிருக்கின்றன. 'லைகா'வின் கன்சல்டன்ட்டான எனக்கு 1,000/- ரூபாய்க்குக் கூட செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை . எனவே, திரு. சுபாஷ்கரனுக்கோ அல்லது அவரது குழும கம்பெனி உறுப்பினர்களுக்கோ தெரியாமல் எந்தவொரு பணப்பட்டுவாடாவும் நடந்ததில்லை .
'எமன்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற இரண்டு படங்களின் மொத்தத் தயாரிப்புச் செலவே ரூ.10 கோடிக்குள்தான் ஆனது. வெளிநாட்டு உரிமை என்பது படத்தின் தயாரிப்புச் செலவில் அதிகபட்சம் 15% வரை மட்டுமே கிடைக்கும். அவ்வாறு கணக்கிட்டால் மேற்சொன்ன இரண்டு படங்களின் வெளிநாட்டு உரிமை அதிகபட்சம் ரூ.1.50 கோடிக்குள்தான் வரும். ஆனாலும், வெளிநாட்டு உரிமைகள் 'லைகா'விடம் ரூ.1.60 கோடிக்கு 'ஐங்கரன்' வாங்கியது. மேற்சொன்ன இரண்டு படங்களின் மொத்தத் தயாரிப்புச் செலவே ரூ. 10 கோடிக்குள்தான் எனும் பட்சத்தில், வெளிநாட்டு உரிமை மட்டுமே எப்படி ரூ.95 கோடிக்கு விற்றிருக்க முடியும்? இதனை அவர் முறையாக தயாரிப்பு நிறுவனங்களில் பேசி விவரம் அறிந்து கொள்ளலாம். சந்தை நிலவரம் எதுவும் முறையாகத் தெரியாதவர்களின் பேச்சைக் கேட்டு குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
'கத்தி' திரைப்படத்தின் பிரச்சினைகள் அனைவரும் அறிந்ததே. 'லைகா' என்ற பெயர் பொறித்த ஒரே காரணத்திற்காகப் படத்தையே வெளியிட முடியாமல் நிறுத்திவைக்குமளவுக்குப் பிரச்சினை சென்றபின், என்னுடைய முயற்சியினால் நல்லவிதமாக வெளிவந்து, பெரிய வெற்றி பெற்றது.
'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' மற்றும் 'இந்தியன் - 2' என்ற இரண்டு திரைப்படங்களை அவருக்குத் தெரியாமலேயே நான் ஆரம்பித்து நஷ்டப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். ஆனால், ஜனவரி 18, 2019 அன்று 'இந்தியன் - 2' திரைப்படத்தின் துவக்கவிழா பூஜைக்கு சுபாஷ்கரன் வந்திருந்தது தற்செயலா? அதுவும் 'லைகா' தயாரிப்பு என்று பெயர் போட்டு பணம் கொடுத்தது எல்லாம் அவருக்குத் தெரியாமல்தான் நடந்ததா? இப்போதும் 'இந்தியன் - 2' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவும் அவருக்குத் தெரியாமல்தான் நடக்கிறதா?
எனது பூர்வீகம், குடியிருக்கும் விவரங்கள், கம்பெனி விவரம் கொடுத்திருக்கும் அவரும் என்னைப் போலவே இலங்கையைச் சேர்ந்தவர். இங்கிலாந்து குடியுரிமை கொண்டவர் மற்றும் இந்தியாவில் கம்பெனி ஆரம்பித்து நடத்துபவர். அவர் ஒன்றும் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து தொழில் செய்பவர் அல்லர்.
சுபாஷ்கரன் என்னை சுரண்டல் பேர்வழி என்று குற்றச்சாட்டு கூறி மிகவும் தரக்குறைவாகவும், பெயரைப் பாழ்படுத்துமாறும் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், நான் அவரது அளவிற்குத் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை .
நான் எப்போதுமே சட்டத்தை மதிப்பவன். சட்ட ரீதியில் அவரது குற்றச்சாட்டை எதிர்கொள்வேன். அதேநேரம், சுபாஷ்கரனின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால், அவரது தவறான செயல்பாடுகளைப் பொதுவெளிக்கு விரைவில் கொண்டு வரும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.’
இவ்வாறு கருணாமூர்த்தி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட் படம் எடுக்கும் மிகச் சில தயாரிப்பு நிறுவனங்களுள் லைகா நிறுவனமும் ஒன்று. சமீபத்தில் வெளியான காப்பான், உருவாகிக் கொண்டிருக்கும் தர்பார், இந்தியன் 2, வருட இறுதியில் தொடங்கவுள்ள பொன்னியின் செல்வன் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களை லைகா நிறுவனம்தான் தயாரித்தது, தயாரிக்கிறது, தயாரிக்கவுள்ளது. இந்த நிலையில், லைகா நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்த கருணாமூர்த்தியின் மீது லைகா அளித்துள்ள புகாரும், அதனைத் தொடர்ந்து கருணாமூர்த்தி அளித்துள்ள விளக்கமும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லைகா போன்ற பெருநிறுவனத்தில் இவ்வாறான முறைகேடுகள் சாத்தியமா என சாதாரணமாக கேள்விகள் எழுந்தாலும், தொடர்ந்து செய்திகளில் வெளியாகி வரும் இந்தியன் 2 படத்தை எடுக்கும் விஷயமே தங்களுக்கு தெரியாது என தடாலடியாக தெரிவித்துள்ள லைகா நிறுவனத்தின் புகார் ஆச்சர்யத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், 'கத்தி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன்' ஆகிய படங்களின் வெளிநாட்டு உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமையில் 90 கோடி ரூபாயை குறைத்து காட்டி கருணாமூர்த்தி மோசடி செய்துள்ளதாக லைகா அளித்துள்ள புகாருக்கு, கருணாமூர்த்தி ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன்’ ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டும் தான் தனது தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளார். கத்தி படத்தின் வெளிநாட்டு உரிமம் தொடர்பாக அவரது விளக்கத்தில் இல்லை.
இவையனைத்தையும் கடந்து, பெரும் பணம் விளையாடும் இரு தரப்பின் புகாருக்கும் நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று நீதி அளிக்கப்பட வேண்டும் என்பதே திரையுலகினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில், பெருநிறுவனம் சார்ந்த வர்த்தகங்களும், அதன் சிக்கல்களும் அது சார்ந்த துறையையும் பாதிக்கும் என்பதால் இவ்விவகாரத்தில் உண்மையை கண்டறிய வேண்டியது சட்டத்தின் கைகளில்தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: