புதன், 2 அக்டோபர், 2019

நீட் தேர்வு விவகாரம்- மதிப்பெண்களை திருத்தி மோசடி

இர்பான்மாலைமலர் : நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மதிப்பெண்களை திருத்தி மோசடியில் ஈடு பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை: மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வில் மோசடி நடந்து இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது நீட் தேர்வில் மேலும் பல மாணவர்கள் மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள தகவல்கள் வெளியானது.
இதையடுத்து காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவின், அவரது தந்தை சரவணன், குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல், அவரது தந்தை ஜெகதீஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.< கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாணியம்பாடியைச் சேர்ந்த டாக்டர் முகமது‌ஷபியின் மகன் இர்பான் நீட் தேர்வில் மோசடி செய்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் முகமது‌ஷபி மூலம் ரஷித் என்ற இடைத்தரகர் அறிமுகம் ஆனதும் தெரிய வந்தது.



இதையடுத்து முகமது ‌ஷபியை போலீசார் கைது செய்தனர். இர்பான் இன்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 9-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாணவர் இர்பான் படித்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இன்று தேனி சி.பி.சி. ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் இர்பான் சேர்ந்தபோது அவருடைய ஆவணங்கள் எந்த வகையில் சரி பார்க்கப்பட்டன? இதில் வேறு யாரேனும் அழுத்தம் கொடுத்தார்களா? என்று விசாரிக்கப்படும்.

மாணவர் இர்பான் நீட் தேர்வில் தான் பெற்ற 270 மதிப்பெண்ணை 470 ஆக திருத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதற்கிடையே நீட் தேர்வு விவகாரத்தில் ஆள் மாறாட்ட மோசடியை போன்று மதிப்பெண்களையும் திருத்தி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்கும்போது குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற்றதாக கம்ப்யூட்டரில் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

மோசடியில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர் இடைத்தரகர்கள் மூலம் மருத்துவத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் உதவியுடன் மதிப்பெண்களை திருத்தி தங்களது பிள்ளைகளை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக உள்ளவர்களும் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு இருப்பதாகவும் போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களும் இதுபோன்ற மோசடிகளுக்கு உடந்தையாக இருந்து இருக்கலாம் என்றும் பயிற்சி மைய நிர்வாகிகள் மூலமாகவும் இடைத்தரகர்கள் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

முதலில் நீட் தேர்வு விவகாரத்தில் ஆள் மாறாட்ட மோசடி மட்டுமே நடந்து இருப்பதாக கருதி வந்த நிலையில் தற்போது மதிப்பெண்களை திருத்தி, நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பயிற்சி மையங்கள் ஆகியவையும் மோசடிக்கு உடந்தையாக இருந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதிப்பெண்களை திருத்துவதற்கு உடந்தையாக இருந்த மருத்துவ துறை அதிகாரிகள், ஊழியர்கள் யார்-யார் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு இருக்கிறார்கள்.

மேலும் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பயிற்சி மைய நிர்வாகிகள் ஆகியோரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறார்கள். இந்த விசாரணையின் முடிவில் மருத்துவத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சிக்கலாம்

கருத்துகள் இல்லை: