வெள்ளி, 23 டிசம்பர், 2016

முருங்கை காய் உலகின் சுப்பர் தாவரம் .. Superfood and Natural Multivitamin காஸ்ட்ரோவும் சேகுவேராவும் தேடி தேடி ....


அண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள், அதன் ஒரு பாகத்தை மட்டுமே சொல்கின்றன. காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்துவந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு மக்களிடையே காஸ்ட்ரோ உரையாற்றியுள்ளார். அதை அதிசயமான தாவரம் என்று புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், வீடுதோறும் முருங்கை மரத்தை வளர்க்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்குக் காரணம் முருங்கை இலையில் பொதிந்து கிடக்கும் 46 வகையான எதிர் ஆக்சிகரணிகள் (Anti oxidant), 36 தாபிதங்களை (காய்ச்சல்) நீக்கும் வேதி பொருட்கள், வைட்டமின்கள், 18 வகை அமினோஅமிலங்கள், கனிம உப்புகள் ஆகியவையே. (ஆதாரம்: http://en.cubadebate.cu/news/2012/10/24/fidel-castro-praises-nutritious-properties-moringa-and-mulberry)
மக்களைக் காப்பாற்றிய முருங்கை
எந்தப் போரையும் நடத்தாமல் கண்ணில் தென்படும் உயிரை எல்லாம் காப்பாற்றி ஒவ்வொரு நாட்டையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்த பெருமையைப் பெற்றது முருங்கை. ஆங்கிலத்திலும்கூட, தமிழ் பெயராலேயே அழைக்கப்படும் சிறப்பையும் கொண்டிருக்கிறது.
காஸ்ட்ரோ மட்டுமில்லை, முருங்கையால் உலக நாடுகள் பெற்ற பயன்கள் ஏராளம். உலகில் மிகவும் வறுமையான நாடுகள் பட்டியலில் உள்ளது ஹைதி. அங்கு 2010-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2012-ல் ஏற்பட்ட கடுமையான சூறாவளியால் அந்நாடு மோசமான வறுமையின் பிடியில் தள்ளப்பட்டது. பச்சிளங் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிக்கு உள்ளானார்கள். கடைசியில் முருங்கை இலைப்பொடியை தொடர்ந்து உட்கொண்டதால், அந்நாட்டு மக்கள் உயிர் பிழைத்தார்கள். இதனால் ஹைதி அரசு ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதியைத் தேசிய முருங்கை நாளாகக் கொண்டாடி வருகிறது.
அற்புத முருங்கை
1997-ம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் சர்ச் ஆஃப் வேர்ல்ட் சர்வீஸ் நிறுவனம் முருங்கை இலைப்பொடியை உணவாக வழங்கியபோது, அவர்கள் ஆரோக்கியம் பெற்றார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்குத் தினமும் ஆறு மேசைக்கரண்டி முருங்கை இலைப்பொடியை வழங்கியபோது, அவர்களும் ஆரோக்கியமான நிலையை அடைந்தார்கள். இது தொடர்பாக Lowell fugile என்பவர் ஆய்வு மேற்கொண்டு முருங்கையைப் பற்றி ‘The miracle tree: The multiple attributes of Moringa’ என்று விரிவான நூலையே எழுதியுள்ளார். இந்த ஆய்வில் பல விஷயங்கள் தெரியவந்தன.
இரும்பு சத்து
வெளிநாட்டில் விளையும் ஸ்பினாச் (பசலை வகை) கீரையைவிட ஒரு கிராம் முருங்கை இலையில் உள்ள இரும்பு சத்து மூன்று மடங்கு அதிகம் என்றும், அதேபோல உலர்ந்த முருங்கை இலைப்பொடியில் ஸ்பினாச் கீரையைவிட 25 மடங்கு அதிக இரும்புச்சத்தும் உள்ளது.
கேரட்டை விஞ்சி
ஒரு கிராம் முருங்கை இலையில் பார்வை இழப்பைத் தடுக்கும் வைட்டமின் ஏ , கேரட்டைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. உலர்ந்த முருங்கை இலையில் 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ உள்ளது.
முட்டை புரதத்தைவிட
ஒரு கிராம் உலர்ந்த முருங்கை இலையில், நான்கு முட்டைகள் மூலம் கிடைக்கும் புரதம் கிடைக்கிறது. முருங்கையில் கால்சியம் சத்து பாலைவிட அதிகம், பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தைவிட அதிகமாக உள்ளது என்ற குறிப்பு பல நாடுகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது.
செனகல் நாட்டில் ‘முருங்கை மருத்துவர் என்றும், அது இருந்தால் மரணம் இல்லை’ என்றும் சொல்கிறார்கள். இந்தப் பெருமைகள் அனைத்தையும் உடைய முருங்கை, நம் வீட்டுப் புழக்கடையில் காசில்லாமல் ஆரோக்கியத்தை வாரி வழங்கிவந்ததை யாரும் மறுக்க முடியாது.
டாக்டர். ஜெ.ஸ்ரீராம்  சலசலப்பு

கருத்துகள் இல்லை: