வியாழன், 22 டிசம்பர், 2016

தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்திய சோதனை பழிவாங்கும் செயல்: மம்தா பானர்ஜி கண்டனம்


கொல்கத்தா: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரி இலாகா நடத்திய சோதனை பழிவாங்கும் செயல் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு சொந்தமான சென்னை அண்ணா நகர் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் நேற்று வருமான வரி இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வருமான வரி இலாகாவின் இந்த சோதனைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்த பழிவாங்கும், நெறிமுறையற்ற, தொழில்நுட்ப ரீதியாக முறையற்ற செயல் ஏன் எடுக்கப்பட்டது? இது கூட்டாட்சி தத்துவ முறைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் நடவடிக்கை. இதுபோன்ற சோதனைகள் அமித்ஷா மீதும் மற்றவர்கள் மீதும் ஏன் எடுக்கப்படவில்லை.
ஊழல் மிகவும் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்தான். அதே நேரம் தமிழகத்தின் தலைமைச் செயலாளரின் வீட்டில் மத்திய முகமைகள் நடத்திய சோதனை சிவில் சர்வீஸ் அமைப்பின் மதிப்பை இழிவுபடுத்தும் செயலாகும். தலைமைச் செயலாளருக்கு எதிரான இந்த சோதனையை நடத்துவதற்கு முன்பு சில வரைமுறைகளை பின்பற்றி இருக்கவேண்டும். வருமான வரித் துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் ஏதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்திருந்தால் அவரை முதலில் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதன்பிறகு இந்த திடீர் நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும். இதுபோன்ற சோதனை முன்பு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அவர் தொல்லைப்படுத்தப்பட்டார். இப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மீது இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி பா.ஜனதாவின் தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங், தனது டுவிட்டர் பதிவில், “மம்தா பானர்ஜி ஊழல்களின் சாம்பியன். எனவே தான் அவர் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்” என்று குறிப்பிட்டு உள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “அரசியல் சாசனத்தின் பொறுப்பில் உள்ள ஒருவர் ஆவார். அவருக்கு சட்ட நடைமுறைகளை முழுமையாக தெரியும். அப்படி இருந்தும் அவர் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக பேசுவது ஏன் என்பது புரியவில்லை” என்றார். maalaimalar.com


கருத்துகள் இல்லை: