சனி, 24 டிசம்பர், 2016

என்ன ஆகும் சொத்துக்குவிப்பு வழக்கு ?

jaya-sasiSavukku · அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்படும் வரை, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் எப்போது வெளியிடும் என்று மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மீதம் உள்ள குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை கிடைக்குமா அல்லது அந்த வழக்கின் ஒரே பொது ஊழியர் மற்றும் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்படுவார்களா என்று வாதம் நடைபெறுகிறது.

மூத்த வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் பிளவுபட்டே இருக்கின்றனர்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் 66.5 கோடி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளார் என்று திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.   இந்த வழக்கு முதலில் சென்னை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
   2001ம் ஆண்டு, ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பிறகு, பெரும்பாலான சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியதால், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இவ்வழக்கை தமிழகத்தை விட்டு மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.   உச்சநீதிமன்றம் வழக்கை பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது. பிறகும் கடுமையாக தாமதம் செய்யப்பட்டு, ஒரு வழியாக செப்டம்பர் 2014ல் சிறப்பு நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா அனைத்து குற்றவாளிகளுக்கும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அவர் தனது தீர்ப்பில் லஞ்ச ஒழிப்பு சட்டம் பிரிவு 13 (1) (இ) மற்றும் 13 (2)ன் கீழ், முதல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என்று உத்தரவிட்டார். கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120 பி யின் கீழ், ஜெயலலிதாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதித்தார்.   இதர குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு குற்றவாளிக்கு உதவிபுரிந்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109ன் கீழ் தலா நான்காண்டு சிறை தண்டனை, தலா பத்து கோடி அபராதம் விதித்தார். கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இவர்கள் மூவருக்கும் ஆறு மாத சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் செய்த மேல் முறையீட்டின் முடிவில், அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்து, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை அடுத்தே, இடைத்தேர்தலில் நின்ற ஜெயலலிதா ஆர்.கேநகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுகவும் மேல் முறையீட்டுக்கு சென்றன. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜுன் 7ம் தேதி, இவ்வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த சூழலில் தான், ஜெயலலிதா இறந்துவிட்டதால் சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா என்று விவாதம் நடைபெறுகிறது.
இதேபோன்ற சூழலில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. டெல்லி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமை மேலாளர் பிகே.சமால் மற்றும் மூன்று தனியார் நிறுவன உரிமையாளர்கள் கூட்டு சதியில் ஈடுபட்டு போலியான ஆவணங்கள் மூலம் வங்கிக்கு 3.50 கோடி நஷ்டம் ஏற்படுத்தினர் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடைபெறுகையில் சமால் இறந்துபோகிறார். இதர குற்றவாளிகள், வழக்கின் ஒரே பொது ஊழியர் இறந்துவிட்டதால் தங்கள் மீது வழக்கை நடத்த முடியாது என்றும், விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.  உயர் நீதிமன்றமோ, “இவ்வழக்கில் பொது ஊழியர் இருப்பதால் லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பொது ஊழியர் இறந்துவிட்டதால், சிறப்பு நீதிமன்றம் அந்த பிரிவுகளை நீக்கிவிட்டு குற்றப்பத்திரிகை பதிவு செய்ய வேண்டும்” என்று உத்தரவிடுகிறது.
இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றம் சென்றது. அந்த வழக்கில்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர், ‘ஒரு வழக்கில் இருக்கும் பொதுஊழியர், வழக்கு விசாரணை முடியும் தருவாயில் இறந்து போவதன் காரணமாக ஒரு வழக்கை முழுமையாக ரத்து செய்வது என்பது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் நோக்கத்தையே தோல்வியடைய செய்யும். இது ஊழலை எதிர்த்து போராடுவதற்கு, லஞ்சத்தை ஒழிப்பதற்கு உருவான சட்டம். இதன் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுவிட்டால், வழக்கை ரத்து செய்ய வேண்டியதில்லை. இறந்து போன பொது ஊழியரை தவிர்த்து மீதம் உள்ளோர் மீது விசாரணை தொடரலாம்’ என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு, விசாரணையை மேற்கொண்ட கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பான வழக்கு. ஜெயலலிதாவின் வழக்கு அப்படிப்பட்டதல்ல. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மீதான விசாரணை நடைபெற்று, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு. ஜுன் 7 அன்றே தீர்ப்பு ஒத்திவைத்துள்ள நிலையில் ஆறு மாதங்கள் கழித்து நடந்த ஜெயலலிதாவின் மரணத்தை கவனத்தில் கொள்ளாமல்தான் உச்சநீதின்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.
மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் அனுமதித்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்தால், ஜெயலலிதாவால் சிறை செல்ல முடியாது என்பதைத் தவிர வழக்கில் எந்த மாற்றமும் நிகழாது. ஜெயலலிதா இறந்துவிட்டாலும், அவருடைய சொத்துக்களை விற்று, அதில் வரும் பணத்திலிருந்து 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஜெயலலிதா இறந்தாலும் இந்த அபராதத்தை செலுத்தியே தீர வேண்டும் என்றே சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கர்நாடக சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, “ஜெயலலிதா இறந்தாலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான வழக்கு உயிரோடுதான் இருக்கிறது.  லஞ்ச ஒழிப்பு சட்டம் தவிர, கூட்டுச் சதியில் ஈடுபட்டது, மற்றும் பொது ஊழியர் சொத்து சேர்க்க உடந்தையாக இருந்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை தனியானவை.  ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு மட்டுமே ரத்து செய்யப்படும்.    வாத பிரதி வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய முடியாது.  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியே ஆகவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நீண்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை இந்தியாவே உற்று நோக்குகிறது.
நன்றி
நம்ம அடையாளம்

கருத்துகள் இல்லை: