வியாழன், 22 டிசம்பர், 2016

சசிகலா புஷ்பாவின் நகர்வுகளால் போயஸ் கார்டன் வரை சோதனை பாயும்?

கரூர் அன்புநாதனில் ஆரம்பித்த விவகாரம், நத்தம் விசுவநாதனை அடைந்து, வேலூர் சேகர் ரெட்டியிடம் சென்று, தற்போது தலைமைச் செயலர் ராம் மோகன் ராவிடம் வந்து நிற்கிறது. இத்தனை காலமும் அமைதியாக இருந்த வருமான வரித் துறை, ஜெயலலிதா மறைந்த பின், ஏன் வேகமாகி இருக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது; சதி இருக்கிறது என்று சொல்லி, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் சில, பா.ஜ.,வை நோக்கி சுட்டு விரல் நீட்டுகின்றன. ஆனால், இந்த விஷயம் இன்று - நேற்று ஆரம்பமானதல்ல. என்றைக்கு, சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் வைத்து அடித்ததாக, ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பரபரப்பு கிளப்பினாரோ, அன்றைக்கே துவங்கி விட்டது பா.ஜ.,வின் ஆட்டம். சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய பின், சில நாட்களில், பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று அவர் கேட்க, தயாராக வைத்திருந்த மொத்த விஷயங்களையும் அவர் ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார்.

 தமிழகத்தில் இருக்கும் ஆட்சி அதிகாரங்களின் மோசடிகளை மட்டும் ஆதாரங்களுடன் திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் விவரங்களை சொல்லி விடுகிறேன். அவர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று சொன்ன பிரதமர் மோடி, சொன்னபடியே, சசிகலா புஷ்பாவுக்கு முழு பாதுகாப்பு வழங்கினார்.
தன்னை கைது செய்யும் ஆபத்து இருந்த நிலையிலும், துளியும் கவலையின்றி சசிகலா புஷ்பா தமிழகம் வந்து போனது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், பின்புலத்தில் பா.ஜ.இருந்ததால்தான், அவர் தைரியமாக தமிழகம் வந்தார்.

 சென்னை, அண்ணா நகரில் உள்ள தன் வீட்டில் தங்கியபடியே அவர், தமிழக அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியுடன் உள்ள பலரையும் சந்தித்தார். விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பினார். அவர் அனுப்ப அனுப்ப விவரங்களை திரட்டிக் கொண்ட மத்திய அரசு, தான் ஏற்கனவே திரட்டி வைத்திருந்த விவரங்களை சேர்த்துக் கொண்டு, அதிரடி ஆபரேஷனை துவங்கியது. அந்த ஆபரேஷனில்தான், அன்புநாதன், நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் என வரிசையாக பலரும் சிக்கினர்.
 சேகர் ரெட்டியிடம் தொடர்புடையவர்களாக சொல்லப்படும் அமைச்சர்கள் ஐந்து பேரும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கூட விரைவில் சிக்குவர் என்கிறது வருமான வரித் துறை வட்டாரங்கள். ராம் மோகன் ராவ் போலவே, தமிழக அரசு அதிகார மட்டங்களில் இருந்து கொண்டு, அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் அதிகாரிகள் பலரது பெயர்களையும், பிரதமர் மோடி, சேகரித்து வைத்துள்ளார். விரைவில் அவர்களை நோக்கியும் வருமான வரித் துறையினரை பாய விடுவார் என்கிறது, டில்லி அதிகார வட்டாரங்கள்.

ஆதாரங்கள் :


தமிழக பா.ஜ., தலைவர்கள் மூலமாகவும் பல்வேறு தகவல்களை திரட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர் செல்வத்தையும், முழுமையாக தன் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டார் என்றும், முதல்வர் பன்னீர்செல்வமும், தமிழகத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அதிகார மட்டம் குறித்து, நிறைய விஷயங்களை சொல்லி இருப்பதாகவும் டில்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  தினமலர்.

கருத்துகள் இல்லை: