வெள்ளி, 23 டிசம்பர், 2016

முதல்வர் நாராயணசாமி : பண அட்டை பரிவர்த்தனை முடியாது! ... ஆளுநர் கிரண் பேடி :டிஜிடல் கக்கூஸ் கட்டியே தீருவேன்


போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் பண அட்டை பரிவர்த்தனையை புதுவையில் நிறைவேற்ற முடியாது என நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பணத்தட்டுப்பாடு காரணமாக பணமில்லா பரிவர்த்தனையை நாடு முழுவதும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. புதுவை மாநிலத்தில் 100 சதவீதம் பண அட்டை மூலமான பரிவர்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு புதுவை தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுவையின் கிராமப்புறங்களில் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் இல்லை. அனைவரிடமும் வங்கி கணக்கும் இல்லை. போதுமான அளவிற்கு ஸ்வைப் மி‌ஷன்களும் இல்லை என்பதால் பண அட்டை மூலமான வர்த்தகத்தை புதுவையில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் புதுவை கவர்னர் கிரண்பேடி பண அட்டை மூலமாக பரிவர்த்தனைய நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்காக அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பண அட்டை வர்த்தக விவகாரத்தில் கவர்னர் கிரண் பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோருக்கு இடையிலான கருத்து மோதலும் எதிரெதிரான செயல்பாடும் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி மாநாட்டில் பங்கேற்ற முதல்- அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றார். அங்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் புதுவையில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் பண அட்டை பரிவர்த்தனையை புதுவையில் உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறினார். மேலும், இது தொடர்பாக புதுவை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் அவ்வாறு அழுத்தம் கொடுத்தாலும் நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: