வெள்ளி, 23 டிசம்பர், 2016

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு....அரசு தேர்வாணைய உறுப்பினர்கள் நீக்கம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) புதிய உறுப்பினர்கள் 11 பேர் கடந்த ஜனவரி 31–ந்தேதி நியமிக்கப்பட்டனர். இதில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்று திமுக முன்னாள் எம்.பி.யும் செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜனவரி 31-ம்தேதி பிறப்பிக்கப்பட்ட நியமன அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேரின் நியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் வைகை செல்வன் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. தமிழக அரசு சார்பில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும். இதன் உள் விவகாரங்களில் எதில் எல்லாம் உயர் நீதிமன்றம் ஐயப்பாடுகளாக எழுப்பி இருக்கிறதோ, அதற்குரிய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை, போதுமான விவர குறிப்புகளை, கருத்துக்களை உச்சநீதிமன்றத்திலே எடுத்து வைப்பதற்கு சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாலைமலர்.காம்


கருத்துகள் இல்லை: