வெள்ளி, 23 டிசம்பர், 2016

அதிமுக + பாஜக பார்ட்னர்களுக்குள் குத்து வெட்டு ... இரட்டை இலைக்குள் தாமரை.. பார்பன சூழ்ச்சி!

தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். ‘ஒரு வார காலத்திற்கு யாரும் வீட்டுப் பக்கமே வந்துவிட வேண்டாம்’ எனவும் ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். வேலூரைச் சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரரும் கார்டன் வட்டாரத்திற்கு மிகவும் நெருக்கமானவரான சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட, வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ஆவணங்களை வைத்துக் கொண்டும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை நெருக்கினர். நேற்று காலை முதலே தலைமைச் செயலாளரின் அண்ணா நகர் வீட்டை வளையத்திற்குள் கொண்டு வந்தனர் அதிகாரிகள். துணை ராணுவப் படையின் பாதுகாப்போடு சோதனை நடத்தப்பட்டதையும் அதன்பிறகு, கோட்டைக்குள் நுழைந்ததையும் அமைச்சர்களால் நம்ப முடியவில்லை. “தலைமைச் செயலகத்திற்குள் வருவமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தவுடனே, பல அமைச்சர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அடுத்து எங்கே ரெய்டு என தங்களுக்குத் தெரிந்த வட்டாரத்திற்குப் போன் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர். நேற்று இரவு பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் தலைவராக இருக்கும் சேலம் கூட்டுறவு வங்கிகளில் ரெய்டு நடத்தும் தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போனார்கள் சேலம் அ.தி.மு.கவினர்” என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,

” எடப்பாடியின் நிழலாக வலம் வருபவர் இளங்கோவன். கூட்டுறவு வங்கிக்குள் நுழைந்த வருமான வரித்துறையினர், ‘ நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு புதிய கணக்குகளைத் தொடங்கிய வி.ஐ.பிக்கள் யார்?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு, ‘யாரும் புதிதாகத் தொடங்கவில்லை’ என கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 64 கூட்டுறவு சங்கங்களின் அதிகாரியை வரவழைத்த, ஐ.டி அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கினர். ரெய்டு முடிந்து செல்லும்போது 2 அட்டைப் பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர். இது முழுக்க எடப்பாடியை குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டுதான்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பிறகு, கூட்டுறவு வங்கிகள் மூலம் முக்கிய பரிவர்த்தனைகள் நடந்தன. இதை அறிந்த பிறகே, கூட்டுறவு வங்கிகளில் பரிவர்த்தனைக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இதனை ஆளும்கட்சியினர் விரும்பவில்லை. அரசின் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் குரல் எழுப்பினர். பொதுப்பணித்துறையின் மூலம் பெறப்பட்ட கமிஷன் தொகைகளை மாற்றுவதற்கு கூட்டுறவு வங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது” என்கிறார்.
“சீனியர் அமைச்சர் முதற்கொண்டு ஜூனியர் அமைச்சர்கள் வரையில் அனைவரது முகங்களிலும் கலவரம் தென்படுகிறது. என்ன நடக்கிறது என்பதையே அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. தலைமைச் செயலகத்திற்கு அமைச்சர்களை சந்திக்க வருபவர்களிடம், ‘ நிலைமை சரியில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு வாருங்கள்’ எனக் கையெடுத்துக் கும்பிடு போட்டு அனுப்பிவிடுகின்றனர்.
தொலைபேசியில் அழைத்தாலும், அமைச்சர்கள் யாரும் பேசுவதில்லை. ரெட்டியோடு தொடர்பில் இருந்த நான்கு அமைச்சர்கள்தான் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். துறைரீதியாக தலைமைச் செயலாளருக்கு ஆதரவாக திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள்; புதிய தொழில்கள் என அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாப்பது குறித்துத்தான் ஆலோசித்து வருகிறார்கள். ‘எப்போது வேண்டுமானாலும், ரெய்டு நடவடிக்கை பாயலாம்’ என்பதால் முக்கிய ஆவணங்களை மறைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கொங்கு மண்டலப் புள்ளியின் சொத்து ஆவணங்கள் அனைத்தும் கொல்லிமலைப் பக்கம் கொண்டு செல்லப்படுவதாகவும் அ.தி.மு.கவினர் சொல்கின்றனர். தலைமைச் செயலரையே வீதிக்கு வரவழைத்த ஐ.டி அதிகாரிகள், ‘அடுத்ததாக அமைச்சர்களையும் விட்டு வைக்க மாட்டார்கள்’ என உறுதியாக நம்புகிறார்கள். கார்டன் தரப்பில் இருந்தும் எந்தப் பதிலும் இல்லை. பொதுக்குழு முடிவதற்குள் என்னென்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம்தான் அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.
– ஆ.விஜயானந்த்
vikatan

கருத்துகள் இல்லை: