செவ்வாய், 20 டிசம்பர், 2016

ரூ.500, 1000 புதிய கட்டுப்பாடு.. வங்கிக்கு திருப்தி அளித்தால் மட்டுமே டெபாசிட் செய்யப்பட முடியும்... (அல்லது லஞ்சம் கொடுத்தாலும் ok?)

மின்னம்பலம்,காம்
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்தபோது, அந்த ரூபாய் நோட்டுகளை வரம்பின்றி எவ்வளவு வேண்டுமானாலும் வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவித்தது.
மத்திய அரசு அறிக்கை
இதனிடையே, அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக, மத்திய அரசு கடந்த 17ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கையின்கீழ் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு
திங்கள்கிழமை (டிச.19) வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது குறித்து மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஐந்து வாரங்கள் கடந்துவிட்டநிலையில், பெரும்பாலானோர் தங்கள் வசமிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்தியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனிவரும் நாள்களில், ரூ.5,000க்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ஒரே தவணையில் மட்டுமே செலுத்த முடியும். இவ்வாறு பணம் செலுத்தப்படும்போது, இத்தனைக் காலமாக பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் போனதற்கான காரணத்தை வாடிக்கையாளரிடமிருந்து எழுத்துபூர்வமாக கேட்டுப் பெற வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் ரூ.5,000க்கும் குறைவான தொகையை வழக்கமாக, வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு அனுமதிக்கப்படும். இருந்தாலும், ரூ.5,000க்கும் குறைவான தொகை, ஒரு கணக்கில் பலமுறை டெபாசிட் செய்யப்படும்பட்சத்தில், அதன் ஒட்டுமொத்த தொகை ரூ.5,000ஐ தாண்டும்போது, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி மட்டும் டெபாசிட் செய்ய முடியும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிக்கை
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கியும் ஓர் அறிவிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: ரூ.5,000க்கும் அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்படியே செலுத்த முடியும். அந்தச் சட்டத்தின்படி, கருப்புப் பணம் வைத்திருப்போர், கணக்கில் காட்டப்படாத தொகையை வங்கியில் செலுத்தும்போது, அந்தத் தொகைக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும். எஞ்சிய தொகையில் 25 சதவிகிதத்தை 4 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. அந்தத் தொகைக்கு வட்டி ஏதும் கிடையாது.
ரூ.5,000க்கு அதிகமான தொகையை வங்கியில் செலுத்தும்போது, பணம் செலுத்துபவர் தரப்பில் தெரிவிக்கும் விளக்கம், வங்கி அதிகாரிகளுக்கு திருப்தி அளித்தால் மட்டுமே, அந்தத் தொகை டெபாசிட் செய்யப்பட முடியும். ஒரே வங்கிக் கணக்கில், வெவ்வேறு இடங்களிலிருந்து பணம் டெபாசிட் செய்யப்படுவதை ‘கோர் பேங்கிங்' (சிபிஎஸ்) முறையில் கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளையும் வங்கிகள் வாங்குவதற்கு மறுக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: