செவ்வாய், 20 டிசம்பர், 2016

இந்திய பொருளாதாரம் .. எமர்ஜென்சியை விட மோசமான பள்ளத்தை நோக்கிய பாதை ,,


 ரவிக்குமார் : 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சட்டவிரோதமான முறையில் அறிவிப்புச்செய்து மோடி அரசு, இந்தியாவில் மறைமுகமாக ஒரு ‘பொருளாதார அவசரநிலையை’ப் பிறப்பித்திருக்கிறது. பாஜக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கையால் ஏழை-எளிய மக்கள் சொல்லமுடியா இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். உழைத்து சம்பாதித்த தமது சொந்தப் பணத்தைக்கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாமல் நூறுபேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்புச்செய்து, நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணை (எண் 2652 நாள் 2016 நவம்பர் 8) அதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிட்டிருக்கிறது.
1. குறிப்பிடப்பட்ட கரன்சி நோட்டுகளைப்போலவே கள்ள நோட்டுகள் ஏராளமாக புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றைப் பிரித்தறிவது சிரமமாக இருக்கிறது. கள்ள நோட்டுகளின் புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது.
2. உயர் மதிப்புகொண்ட இந்த ரூபாய் நோட்டுகள், கணக்கில் காட்டாத செல்வத்தைப் பதுக்கிவைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது நாட்டின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திலிருந்து தெரிய வருகிறது.

3. கள்ள நோட்டுகள் போதை மருந்து கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகள் போன்ற சீர்குலைவு வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் பாதுகாப்பும் நாசப்படுத்தப்படுகின்றன.
கருப்புப் பணத்துக்கு எதிராக பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக பாஜக-வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது உண்மைதானா? என்று பார்ப்போம்:
லீஷ்டென்ஸ்டைன் வங்கியில் கருப்புப் பணத்தைப் பதுக்கிவைத்திருக்கும் 1400 பேர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை தருவதற்குத் தயாராக இருப்பதாக ஜெர்மன் அரசு அறிவித்தபோதிலும், அந்தப் பட்டியலை கேட்டுப் பெறுவதற்கு இதுவரை பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபோலவே, ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணம் பதுக்கியிருப்போரின் பட்டியலை வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக-வை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி நவம்பர் 15ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது குற்றம்சாட்டி கடிதம் எழுதியிருக்கிறார். அவர்மீது வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்திருக்கிறார்.
எச்.எஸ்.பி.சி. வங்கியின் ஸ்விஸ் நாட்டுக் கிளையில் 25,420 கோடி ரூபாய் கருப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த 1195 பேரின் பட்டியல் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டது. இதுவரை, அவர்களில் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை, அந்த கருப்புப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை.
பனாமா நாட்டில் உள்ள மொஸாக் ஃபொன்சேகா என்ற நிறுவனத்தின்மூலம், உலகின் பல்வேறு நாடுகளில் போலி கம்பெனிகளைத் தொடங்கி கருப்புப் பணத்தைப் பதுக்கிவைத்திருக்கும் முப்பத்தேழாயிரம் இந்தியர்களின் பட்டியலை 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டது. அதில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் வினோத் அதானி உள்ளிட்டோரின் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களில் எவரும் கைது செய்யப்படவில்லை, அந்த கறுப்புப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. எனவேதான், இந்த ’செல்லா நோட்டு’ நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கானது அல்ல என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
‘ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்படுவதற்கு முன்போ, அதற்குப் பின்போ இந்தியாவிலுள்ள கருப்புப் பணம் குறித்து மத்திய அரசு மதிப்பீடு எதையும் செய்யவில்லை’ என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி இப்போது கூறியிருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்றால், இந்தியாவில் புழங்கிவந்த பணத்தில் கள்ள நோட்டுகள் எவ்வளவு என்பதை மத்திய அரசு துல்லியமாக மதிப்பிட்டிருக்க வேண்டும். அதுவும் செய்யப்படவில்லை. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி டி.என்.ஏ. நாளேட்டில் வெளிவந்த செய்தியின்படி, இந்தியாவில் புழங்கும் கள்ள நோட்டுகளில் 100 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்தான் அதிகம் எனத் தெரியவந்தது. அப்படிப் பார்த்தால், 100 ரூபாய் நோட்டுகளைத்தான் செல்லாது என அறிவித்திருக்க வேண்டும்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதோ, கள்ள நோட்டுகளை ஒழிப்பதோ மோடி அரசின் நோக்கமல்ல. மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தை ஒழிப்பதும் பாராளுமன்ற ஜனநாயக முறையை ஒழிப்பதும்தான் பாஜக அரசின் நோக்கம். அதற்காகத்தான் இந்த அறிவிப்பு.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மூன்றுவிதமான அவசரநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. உள்நாட்டு அவசரநிலை
2. மாநில அவசரநிலை
3. பொருளாதார அவசரநிலை.
உள்நாட்டு அவசரநிலை என்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அந்நிய படையெடுப்பாலோ அல்லது உள்நாட்டுக் கலகங்களாலோ ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என குடியரசுத் தலைவர் உறுதிசெய்துகொண்டால், அரசியலமைப்புச் சட்ட பிரிவு 352ன் கீழ் பிறப்பிக்கப்படுவதாகும். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, இந்தப் பிரிவின் அடிப்படையில்தான் நெருக்கடி நிலையை அறிவித்தார்.
மாநில அவசரநிலை என்பது, ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டால் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356ன் கீழ் ஒரு மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதாகும். தமிழக அரசே பலமுறை அப்படிக் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்திருக்கிறது.
பொருளாதார அவசரநிலை என்பது, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து வந்திருப்பதாக குடியரசுத் தலைவர் உறுதிசெய்துகொண்டால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 360ன் கீழ் அறிவிக்கப்படுவதாகும். அரசு ஊழியர்களின் சம்பளம், படி முதலானவற்றை குறைப்பதற்கு இது அதிகாரமளிக்கிறது.
கள்ள நோட்டும், கருப்புப் பணமும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன என்றால், குடியரசுத் தலைவரின் மூலமாக பொருளாதார அவசரநிலையைப் பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், நிர்வாக உத்தரவின்மூலம் மோடி அரசு இதைச் செய்திருப்பதற்குக் காரணம், இவர்கள் அப்படிக் கேட்டிருந்தால் குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கமாட்டார் என்பதுதான். அதனால்தான், அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு சட்டவிரோதமான இந்த குறுக்குவழியை மோடி தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க வேண்டுமானால், அதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்க வேண்டும் அல்லது அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். 1978ஆம் ஆண்டு, ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்தில் அவசரச் சட்டத்தின்மூலம்தான் ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. அதன்பின்னர் அது சட்டமாக்கப்பட்டது. அப்படி சட்டத்தின்மூலம் அல்லாமல் முன்பே ’ரெக்கார்டிங்’ செய்யப்பட்ட ஒரு தொலைக்காட்சி உரையின்மூலம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க பிரதமர் மோடிக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை. அவர், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதமர்தானே தவிர, ராணுவ சர்வாதிகாரி இல்லை. இது, அப்பட்டமாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய சட்டவிரோதச் செயலாகும். அதனால்தான், மோடியின் அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என ஆய்வு செய்வதற்காக ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு அது தொடர்பான வழக்குகளை இப்போது உச்சநீதிமன்றம் அனுப்பியிருக்கிறது.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்குத்தான் உள்ளது. ரிசர்வ் வங்கி சட்டத்தின் செக்‌ஷன் 26ல் தான் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் வழிமுறை குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. செக்‌ஷன் 26ன் உட்பிரிவு 2ன் படி, ‘ஒரு அரசாணையின் மூலமாக மத்திய அரசு பரிந்துரை செய்தால் அதை ஏற்று ரிசர்வ் வங்கி 1000, 500, 100 என ஒரு குறிப்பிட்ட மதிப்புகொண்ட ரூபாய் நோட்டின், குறிப்பிட்ட வரிசைகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வரிசை எண்கள் கொண்ட ரூபாய் நோட்டுகளைத்தான் திரும்பப் பெறலாமே தவிர, ஒட்டுமொத்தமாக 1000 ரூபாய் செல்லாது, 500 ரூபாய் செல்லாது என அறிவிக்க அந்தச் சட்டத்தில் இடமில்லை.
ரிசர்வ் வங்கி சட்டத்துக்கு எதிரான, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான மோடி அரசின் இந்த அறிவிப்பை நாம் அனுமதித்தால் இதே முறையைப் பின்பற்றி ஒரு நிர்வாக உத்தரவின்மூலம் உள்நாட்டு அவசரநிலையை அறிவிக்கவும் மோடி தயங்கமாட்டார்.
ஏ.டி.எம்-களில் ரூபாய் நோட்டுகள் இல்லை, பணத்தை எடுக்க முடியவில்லை என்பதெல்லாம் மோடி அரசின் அறிவிப்பால் நேரிட்டுள்ள பக்கவிளைவுகள்தான். மோடி அரசின் இந்த சர்வாதிகார அறிவிப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே தகர்க்கிறது. இப்போதிருக்கும் பாராளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக்கட்டி, ஒரு ராணுவ சர்வாதிகாரத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? என்பதே நம்முன் உள்ள கேள்வி.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: