ஞாயிறு, 12 அக்டோபர், 2014

கலைஞர்: தமிழகத்தில் (Nokkia ) தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா ! 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் நடுத்தெருவில் ?

இதுவரையில் தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கை எடுக்க பட்டிருக்கிறது ?
நோக்கியா ஆலையை திறக்க கோரி 17-ந் தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலை, வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் மூடப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ள செய்தி, தொழிலாளர்களிடமும், எதிர்க்கட்சிகளிடமும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்ற போதிலும், அது பற்றி தமிழகத்தை ஆளுங்கட்சி ஏதாவது காதில் போட்டுக்கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே வேதனையோடு கூற வேண்டியுள்ளது. இந்த தொழிற்சாலையை மூடுவது பற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோக்கியா மொபைல் போன் உற்பத்தி ஆலையை, கடந்த ஏப்ரல் மாதம் முதல், மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையும் ஒன்று. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல் போன்களுக்கான ஆர்டரை அளிக்கவில்லை. ஆர்டர் இல்லாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆலை, நவம்பர் 1-ந் தேதி முதல் மூடப்படுகிறது. மொபைல் போன்கள் வாங்க, நோக்கியா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம், நவம்பர் 1-ந் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளதால், ஆலையை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கவனிக்க அதிமுக அரசுக்கு  நேரம் இல்லை ஊழல் பெருசாளிகளுக்காக கிளிசரின் வாங்கவே நேரம் போகிறது,
இந்த தகவல் நிறுவனத்தின் பங்குதாரர்கள், தொழிலாளர் ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தை மற்றொருவருக்கு விற்றாலோ அல்லது வேறு நிறுவனம் வாங்கினாலோ இந்திய கம்பெனி சட்டத்தின் அனுமதியைப் பெற வேண்டும். ‘கம்பெனி லா போர்டு’, மத்திய, மாநில அரசுகளின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் ஒரு நிறுவனத்தை விற்கவோ, வாங்கவோ இயலாது.

2013-ம் ஆண்டு ஜனவரியில் இந்திய வருமான வரித்துறை நோக்கியா தொழிற்சாலையில் சோதனை நடத்தியது. இந்திய வருமான வரித்துறைக்கு, சென்னை நோக்கியா நிறுவனம், 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதை செலுத்த வேண்டுமென்று சம்மன் அனுப்பியது. அந்த தொகையை தவணை முறையில் கட்ட சலுகையும் வழங்கியது. ஜூன் 2013-ல் நோக்கியா நிறுவனம் 700 கோடி ரூபாயை முதல் தவணையாக இந்திய வருமான வரித்துறைக்கு செலுத்தியது. செப்டம்பர் 2013-ல் நோக்கியா நிறுவனம் இந்தியாவில் உள்ள தங்களது தொழிற்சாலை, சேவை மற்றும் அனைத்துச் சொத்துக்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அமெரிக்க டாலர் 7.7 பில்லியன், அதாவது இந்திய மதிப்புப்படி 47 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்போவதாக அறிவித்தது. எனவே வருமான வரியை செலுத்தும் வரை சென்னை நோக்கியா தொழிற்சாலையின் சொத்துகள் மற்றும் கணக்குகளை முடக்கியது. அதை எதிர்த்து நோக்கியா நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் நோக்கியா நிறுவனத்தின் கணக்குகளை மட்டும் ரிலீஸ் செய்ய உத்தரவிட்டது. சொத்துகளை அல்ல.

டிசம்பர் 2013-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் நோக்கியா நிறுவனத்தின் சொத்துகளையும் ரிலீஸ் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்க சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. அந்த நிபந்தனைகளுக்கு எதிராக பிப்ரவரி 2014-ல் நோக்கியா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தடைவிதிக்கக் கூறி மார்ச் 2014 அன்று இந்திய வருமான வரித்துறையும், உச்சநீதிமன்றத்தை அணுகியது.

மேலும், தமிழக வணிக வரித்துறைக்கு 2,400 கோடி ரூபாய் நோக்கியா நிறுவனம் விற்பனை வரி செலுத்த வேண்டும் என்று வணிக வரித்துறை நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பியிருக்கிறது. இந்த சட்ட சிக்கல்களாலும், சென்னை நோக்கியா நிறுவனம் செய்து கொண்ட விற்பனை ஒப்பந்தம் முடங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்து கொண்ட விற்பனை ஒப்பந்தம் முடங்கியதால், நோக்கியா நிறுவனம், மொபைல் போன் உற்பத்தியை படிப்படியாக குறைத்தது. அதைத் தொடர்ந்துதான் நிரந்தர ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்து தொழிலாளர்களை வலியுறுத்தியபோது, 7 ஆயிரம் ஊழியர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். 1,600 தொழிலாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள்.

2014 ஏப்ரல் 25-ந் தேதியன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்டது. அதைத் தொடர்ந்துதான் நோக்கியா நிறுவனம் தங்களது தொழிற்சாலையை நவம்பர் மாதம் முதல் மூடப்போவதாக அறிவித்துள்ளது. அதை எதிர்த்து நோக்கியா தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு பலன் ஏற்படவில்லை. தற்போது எஞ்சியிருக்கும் 1,100 தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பும் முயற்சியிலே உற்பத்தியை நிறுத்தி வைப்பு என்ற போர்வையில் நிறுவனத்தை மூட முயன்றுள்ளது.

நோக்கியா தொழிற்சாலைகள் மாத்திரமல்ல; மேலும் பல நிறுவனங்கள் தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து மூடப்பட்டதின் காரணத்தினால் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்கக்கோரி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்ற 17-10-2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில் மாவட்ட தி.மு.க. சார்பில், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவைச் செயலாளர் மு.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

ஆனால் தமிழகத்தில் அரசு என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அந்த அரசின் சார்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டபோது மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெற்ற இந்நிறுவனம், ஆலையை நிறுத்தும்போது மட்டும் மத்திய, மாநில அரசுகளைக் கேட்கவேண்டாமா? இந்த தொழிற்சாலையை தொடர்ந்து நடத்துவதற்கு என்ன பிரச்சினையை அந்த நிறுவனம் சொல்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?

மிக லாபகரமாக நடைபெற்ற இந்த தொழிற்சாலையினை ஏன் மூட வேண்டும்? அங்கே பணியாற்றிய தொழிலாளர்களின் வருங்காலத்தை உத்தேசித்துப் பார்த்து, அந்த தொழிற்சாலையை தமிழக அரசே கையகப்படுத்தி, தொடர்ந்து நடத்தலாம் அல்லவா? அதைப்பற்றி எல்லாம் அந்த துறையின் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டாரா? இனியாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு, நோக்கியா ஆலைத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியிலே ஈடுபடுவார்களா என்றுதான் நாடு எதிர்பார்க்கிறது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். maalaimalar .com

கருத்துகள் இல்லை: