வெள்ளி, 17 அக்டோபர், 2014

அரசு மருத்துவ மனைகளின் அலட்சியம் ! தனியார் மருத்துவ மனைகளுக்கு கொண்டாட்டம் ?

ஸ்டேன்லி மருத்துவமனைசென்னையிலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் 30-க்கும் மேற்பட்ட சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு ஒரே சமயத்தில் ஹெச்.சி.வி (ஹெபடைட்டிஸ் சி வைரஸ்) என்ற கொடிய, உயிருக்கே உலைவைக்கக்கூடிய மஞ்சள்காமாலையை விளைவிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. டயாலிசிஸ் கருவியையும், அச்சிகிச்சை நடைபெறும் அறையையும் நோய் தொற்று ஏற்படாதவண்ணம் பாதுகாப்பாக வைக்காததாலேயே அந்த முப்பது பேரையும் மஞ்சள்காமாலையை விளைவிக்கக்கூடிய கிருமி எளிதாகத் தாக்கியிருக்கிறது. மாதத்திற்கு இருமுறையோ அதற்கு மேலோ டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொண்டால்தான் உயிர் பிழைத்திருக்க முடியும் என்ற நிலையில் வாழ்ந்துவரும் இவர்களை, தமது அலட்சியத்தால் மரணத்தில் வாசலில் கொண்டுபோய்த் தள்ளியிருக்கிறது ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம்.
இதனைவிடக் கொடிய சம்பவம் கோவையில் நடந்திருக்கிறது. கோவை மாநகர சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கலைவாணி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்து போனார். அம்முகாமில் அறுவை சிகிச்சைக்கு உரிய மேசைகளை ஏற்பாடு செய்யாமல், மருத்துவமனையில் நோயாளிகள் அமரும் பெஞ்சுகளை ஒன்றின் மீது ஒன்றாகச் சாய்த்துக் கட்டி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
இப்படி அலட்சியமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலேயே கலைவாணிக்கு வலிப்பு ஏற்பட்டு சுயநினைவையும் இழந்து, நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக இறந்து போனார்.


நோயாளிக்கு வலிப்பு நோய் இருந்ததை மறைத்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி மாநகராட்சியும் மருத்துவர்களும் தப்பிக்க முயன்றதை எதிர்த்து கலைவாணியின் உறவினர்கள் போராட வேண்டி இருந்தது. ஆம் ஆத்மி கட்சியினர் ஹெச்.சி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அணிதிரட்டி போராடிய பிறகுதான் இது குறித்து விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் ஒத்துக் கொண்டது.
ஒருவேளை இந்த அகால மரணமும் அலட்சியம் நிறைந்த சிகிச்சையும் தனியார் மருத்துவமனைகளில் நடந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் அந்நிர்வாகத்தை எதிர்த்து சுண்டுவிரலைக்கூட நீட்டியிருக்க முடியாது. அது மட்டுமல்ல, பணத்தைக் கட்டிய பிறகுதான் கல்யாணியின் பிணத்தைத் தூக்கவிட்டிருப்பார்கள்.
அரசு மருத்துவமனைகளில் மருந்தில்லை, படுக்கை வசதியில்லை, சுத்தம் இல்லை, சுகாதாரமாக இல்லை என ஓராயிரம் குறைபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனாலும், பிணத்துக்கே வைத்தியம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் கொள்ளைக்கூடாரமாக மாறிவிடவில்லை. அது மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளில் காணப்படும் இத்துணை ‘இல்லை’களுக்கும் மூலகாரணம் மருத்துவ சேவை தனியார்மயமாகி வருவதுதான். இத்தனியார்மயத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பதை நாம் உத்தரவாதம் செய்ய முடியும். வினவு.com
__________________________________

கருத்துகள் இல்லை: