‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளிவந்தபிறகு, மெட்ராஸில் சாதி எப்படி இயங்குகிறது
என்று மெட்ராஸுக்கு சமீபத்தில் குடியேறியவர்கள் பக்கம் பக்கமாக இணையத்தில்
கருத்து தெரிவித்து வருகிறார்கள். மெட்ராஸ் எக்மோரில் நான் பிறந்து
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. வளர்ந்ததெல்லாம் தென்சென்னைதான்
என்றாலும், ஒட்டுமொத்த மெட்ராஸின் சுற்றளவே நூறு கி.மீ.க்குள்தான்
எனும்போது மத்திய சென்னை, வடசென்னை எல்லாம் அந்நியமெல்லாம் இல்லை.
கல்யாணம், காதுகுத்து, சாவு, எழவு என்று மேடவாக்கம் டூ திருவொற்றியூர் வரை
நம் கால் படாத இடமேயில்லை.
இத்தனை ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி மெட்ராஸை விட்டு வெளியே சென்று தங்கியதே இல்லை. அதிகபட்சம் ஒருவாரம் ஒரே ஒரு முறை செம்மொழி மாநாட்டுக்காக கோயமுத்தூரில் தங்கியிருக்கிறேன். 1996 சட்டமன்றத் தேர்தலின் போது, சென்னையிலிருந்து மதுரைக்கு நண்பரோடு பைக்கில் சென்றேன். தேர்தல் எப்படி நடக்கிறது, மக்களின் மனோபாவம் என்ன என்பதை நேரிடையாக தெரிந்துக் கொள்ளும் பொருட்டு. முதன்முதலாக “நீங்க என்ன ஆளுங்க?” என்கிற கேள்வியை மேலூரில் ஒரு பெண்ணிடம் எதிர்கொண்டபோதுதான் தெரிந்தது, மெட்ராஸ் சாதீயத்தை எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறது என்பது.
மெட்ராஸில் சாதி என்பது இல்லவே இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ரொம்ப நுணுக்கமாக கவனித்தால் தெரியும். ஆனால், இங்கே பெரும்பாலும் பிளாக் & ஒயிட் மட்டும்தான். அதாவது ஒன்று நீங்கள் அய்யிரு (அய்யங்காரும் இங்கே அய்யிருதான்). அல்லது வேறு ஏதோ ஒரு சாதி.
நான் தேவரு, நான் பிள்ளைமாரு, நான் வன்னியரு, நான் நாயுடு என்றெல்லாம் சூத்திரசாதிகளில் தலித்துகளுக்கு மேற்பட்ட உயர்நிலை சாதியென்று நீங்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அதெல்லாம் வேலைக்கு ஆகாது. பூணூல் இருந்தால் கொஞ்சம் உசரம். அது இல்லையென்றால் எல்லா சாதியும் ஒரே சாதிதான். நேரடியாக சாதிப்பெயரை சொல்லி திட்டுவது, தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, கவுரவக் கொலை, தீண்டாமைச் சுவர், செருப்பில்லாமல் நடக்க வேண்டும் என்று தமிழகத்தின் மற்றைய மாவட்டங்களின் சாதிப்பாகுபாடு சென்னையில் நேரடியாக தெரியாது. மதமும் கூட இப்படித்தான். பாபர் மசூதி இடிப்பு, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவப் பாதிரிமார் எரிப்பு மாதிரி சம்பவங்களின் போது இந்தியா முழுக்கவே கணகணவென்று மதநெருப்பு பற்றியெரிந்தபோதெல்லாம், சென்னை தேமேவென்றுதான் கிடந்தது.
மூட்டை தூக்கிக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் போகும் கருப்பான ஒருவரை கண்டதுமே ‘தலித்’தென்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அழைத்து விசாரித்துப் பாருங்கள். வந்தவாசி பக்கமாக இருந்து பஞ்சம் பிழைக்கவந்த வன்னியராக கூட இருப்பார். சென்னையின் சாதிகள் வர்க்கமாக பிரிந்திருக்கிறது. அதிகார வர்க்கம், பாட்டாளி வர்க்கம். அதிகார வர்க்கத்தில் தலித்துகளும் உண்டு. பாட்டாளி வர்க்கத்தில் அய்யிருகளும் உண்டு. என்ன அதிகார வர்க்கத்தில் பெரும்பான்மை இடத்தை அய்யிருகளும், பாட்டாளி வர்க்கத்தில் பெரும்பான்மை இடத்தை பார்ப்பனரல்லாதவரும் நிரப்பியிருப்பார்கள். உதிரிப் பாட்டாளிகள் இங்கே ஒரே வர்க்கமாக இணைந்து எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வலுவான தொழிற்சங்கங்களை சாதிவேறுபாடு இன்றிதான் கட்டமைத்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அம்பத்தூர், கிண்டி பக்கமெல்லாம் அய்யிரு தொழிலாளர்களும், மற்ற சாதித் தொழிலாளர்களும் தோள் மேல் கைபோட்டு ஒன்றாக சாராயம் குடிக்கச் செல்லும் காட்சியை சகஜமாக காணலாம். இங்கு இயங்கும் அரசு மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களை உற்றுநோக்கினால் பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதவர்களும் ஒரே சாதியாக (சில சம்பவங்களில், செயல்பாடுகளில் விதிவிலக்கு இருந்திருக்கலாம்) தங்களை பாட்டாளிகளாக மட்டுமே உணர்ந்து செயல்பட்டிருப்பது விளங்கும். பார்ப்பனரல்லாதவர்களிலும் தலித் vs இதரசாதியினர் முரண் அவ்வளவாக எழுந்ததில்லை.
இங்கே வெள்ளாள தேனாம்பேட்டை, வன்னிய தேனாம்பேட்டையெல்லாம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் மெட்ராஸைப் பொறுத்தவரை சாதி இரண்டாம் பட்சம்தான். பணம் இருப்பதும், இல்லாததும்தான் இங்கே முதன்மையான பிரச்சினை. வெள்ளைக்காரன், மெட்ராஸை கோட்டை கட்டி ஆண்டதின் பாசிட்டிவ்வான விளைவுகளில் இதுவொன்று. சென்னையில் பிறந்து வளர்ந்த யாருமே மேற்கண்ட இந்த கருத்துகளோடு எளிதாக ஒத்துப்போக முடியும். சாதியைவிட ஏரியாதான் இங்கே கவுரவப் பிரச்சினை. பிற ஊர்களில் இரண்டு சமூகங்கள் மோதிக்கொள்கிறது என்றால், இங்கே இரண்டு ஏரியாக்கள் மோதிக்கொள்வது வழக்கம். அவ்வப்போது கல்லூரி மாணவர்கள் மோதல் என்று செய்தித்தாள்களில் நீங்கள் வாசிக்கும் செய்திகள் எல்லாம்கூட இம்மாதிரி ஏரியாப்பிரச்சினை தொடர்பானதுதான். இதெல்லாம் பரம்பரை சென்னைக்காரர்களுக்கும், சில தலைமுறைகளுக்கு முன்பாக இங்கே குடியேறியவர்களுக்கும் பொருந்தும்.
தொண்ணூறுகளில் ‘திடுப்’பென்று இந்தியா முழுக்க ஒரு பொருளாதார ‘ஜம்ப்’ நடந்ததில்லையா? அப்போதுதான் சாதியும், மதமும் இம்மாநகருக்குள், வெளிமாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் மூலமாக ஆழமாக ஊடுருவியது. தங்கள் ஊரை மாதிரியேதான் அவர்கள் சென்னையையும் பார்த்தார்கள். சரவணா ஸ்டோர்ஸை நாடார் கடையாக இருபது வருடங்களுக்கு முன்பாக யாருமே பார்த்ததில்லை. ஃபாத்திமா ஜீவல்லர்ஸில்தான் முஸ்லிம்கள் நகை வாங்க வேண்டும் என்று அப்போது யாருக்கும் தோன்றியதில்லை. இந்துக்கள் இந்து கடையில்தான் தீபாவளிக்கு துணிமணி வாங்கவேண்டும் என்கிற பிரச்சாரத்தை எல்லாம் இந்து அமைப்புகள் அப்போது செய்திருந்தால் சுளுக்கெடுக்கப்பட்டிருக்கும். இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக நடக்காமல், சர்ரென்று ஜெட் வேகத்தில் சமீப வருடங்களில் நடந்திருக்கும் மாற்றம். முன்பெல்லாம் ஏதாவது பிரச்சினை என்றால் ஸ்டேஷன் எஸ்.ஐ. யாரென்று பெயரைதான் கேட்பார்கள். இப்போதுதான் தேவரா, முஸ்லீமா, கிறிஸ்டினா என்றெல்லாம் கூடுதலாக கேட்கிறார்கள். பரம்பரை சென்னைக்காரர்கள் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சி?” என்று ஒன்றும் புரியாமல் குழம்பிப்போய் கிடக்கிறோம்.
கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் பகுத்தறிவை கொடுக்கும் என்கிற நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிட்டது. அவை முன்பைவிட தீவிரமாக சாதியையும், மதத்தையும் தூக்கிப் பிடிக்கும் என்பதற்கு இன்றைய சென்னையே அத்தாட்சி. ஒரு பொதுநிகழ்வில் ஓர் இளைஞர் சாதாரணமாக மாட்டுக்கறி சாப்பிடுவதை பற்றி கவுரவக்குறைவு என்பது போன்ற தொனியில் இன்று உரையாடுகிறார். இருபது வருடங்களுக்கு முன்பு இங்கே அப்படி பேசியிருந்தால் செவுள் எகிறியிருக்கும்.
அப்புறம், மெட்ராஸ் படம் பார்த்துவிட்டு இங்கே குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் தலித்கள் மட்டுமே குடியிருக்கிறார்கள் என்பதாக நிறைய பேர் தாங்களாகவே கருதிக்கொண்டு பேசுகிறார்கள். கலைஞரின் பெரியார் நினைவு சமத்துவபுரங்களுக்கெல்லாம் முன்னோடி சென்னையின் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள்தான். இங்கே நீங்கள் எல்லா சாதியையும் கலந்துதான் பார்க்க முடியும் (சென்னை 600028 படத்தில் வெங்கட்பிரபு இதை கச்சிதமாக காட்சிப்படுத்தியிருந்தார்). போலவே குப்பம் என்பது ஆதிதிராவிடர்களுக்கான குடியிருப்புப் பகுதி என்றொரு மாயையும் இருக்கிறது. ஆதிதிராவிடர்களையும், மீனவர்களையும் போட்டு குழப்பிக் கொள்வதின் விளைவே இது. எல்லா இடத்திலும் எல்லாரும் கலந்திருக்கிறார்கள் என்றாலும் குப்பங்கள் மீனவசமூகத்தினரின் கோட்டை (சமீபமாக ஆந்திர மீனவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்). நீண்டகாலமாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் சாதியை அட்டவணை சாதியாக அறிவிக்கும்படி போராடி வருபவர்கள் இவர்கள். அதுபோலவே ‘கானா’ என்பது தலித்துகளுக்கு மட்டுமேயானது என்று ஒதுக்கிவைக்கப்படுவதும் தவறு. கானா இங்கே பாட்டாளிகளின் கலை. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மூலமாக கவுரவத்தை எட்டியது. சென்னையின் கானா பாடகர்கள் எல்லா சாதியிலும், எல்லா மதத்திலும் உண்டு. எல்லாரும்தானே ஆட்டோ ஓட்டுகிறார்கள் (என்னுடைய அம்மாவழி உறவினர்களின் மரணத்தின்போது கானா கச்சேரி இடம்பெறுவது உண்டு, அப்பாவழி உறவுகளின் மரணத்தின்போது பஜனை மட்டும்தான்).
வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் ஸ்பெஷல் கண்ணாடி அணிந்து சென்னையை பார்க்கிறார்கள். அதையே கலை இலக்கியமாகவோ, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாகவோ எழுதி வரலாறாக மாற்றுகிறார்கள். அதிலும் சென்னை பற்றி யாரோ மதுரைக்காரரோ, கோயமுத்தூர்காரரோ விவரமாக, இதுதான் சென்னை என்று எதையோ படமெடுத்துக் காட்டும்போது, சென்னைவாசிகளும் ‘நம்ம ஊரா இது? செமையா இருக்கே’ என்று வெறுமனே பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இங்கு பிறந்து வளர்ந்தவனால் சாதி, மதமென்று நுணுக்கமாக சித்தரிக்க முடியாது. அவனுக்கு அவ்வளவு விவரமும் பத்தாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக